முகிலனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்

சமூக செயற்பாட்டாளர் முகிலனை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமான் கூறியுள்ளார். முகிலனை நீதிமன்றத்தில் விரைவாக ஆஜர்படுத்தி, உரிய மருத்துவ சிகிச்சையும், பாதுகாப்பும் தரவேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
—-

சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அலுவலகத்தில் விசாரிக்கப்படும் முகிலனை காண மனைவி பூங்கொடி வந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் நேற்று இரவு திருப்பதியில் கண்டுப்பிடிக்கப்பட்டார். 6 மாதமாக முகிலன் எங்கு இருந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சென்னை உயர்நிதிமன்றத்தில் முகிலனை நாளை போலீசார் ஆஜர்ப்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

—-

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி மாயமான சமூக செயற்பாட்டாளர் முகிலன் திருப்பதியில் சிக்கினார். அவரை காட்பாடி ரயில் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டது. இந்நிலையில் சமூக செயற்பாட்டாளர் முகிலன், தூத்துக்குடி சம்பவம், வாகனங்கள் தீ வைத்து எரித்த சம்பவம் போன்றவை போலீஸ் உயர் அதிகாரிகளின் உத்தரவின்பேரில் நடந்ததாகவும், திட்டமிட்டு நடந்ததாகவும் குற்றம்சாட்டினார். துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசுக்கு எதிரான வீடியோக்களையும் சென்னை பிரஸ் கிளப்பில் வெளியிட்டார்.

அதன்பிறகு சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தார். ஆனால் வழியில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் இருந்து முகிலன் திடீரென மாயமானார். அவரை கண்டுபிடிக்க வேண்டும் என்று திமுக உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். இதற்கிடையே முகிலனை கண்டுபிடிக்கக்கோரி ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது முகிலன் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை என போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி முகிலனை கண்டு பிடித்துள்ளதாகவும், உயிரோடு இருப்பதாகவும் 2 முறை ரகசிய அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவரை கண்டுபிடித்து வெளியே ெகாண்டு வரவேண்டும் என்று அனைத்து தரப்பிலும் வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று திருப்பதி ரயில் நிலையத்தில் காணாமல் போன முகிலனை போலீசார் கையை பிடித்து இழுத்துச் செல்வது போலவும், அப்போது அவர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், கூடங்குளம் அணுமின்நிலையத்துக்கு எதிராகவும் கோஷமிட்டபடி செல்வது போலவும், ரயில்வே போலீஸ் நிலையத்தில் அவரை அமர வைத்திருப்பது போன்ற வீடியோ காட்சிகளும் வாட்ஸ்அப்பில் வெளியானது. இதனால் முகிலன் விஷயத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து திருப்பதி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கூறுகையில், காலை 10.40 மணியளவில் திருப்பதி ரயில்நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு தாடியுடன் கூடிய நபர் வந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டிருந்தார். அப்போது திருப்பதியில் தரிசனம் செய்து விட்டு திருப்பதி ரயில்நிலையத்துக்கு ரயில்வே அதிகாரி ஆய்வுக்கு வருவதாக தகவல் வந்தது.

இதையடுத்து அந்த நபரை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினோம். அப்போது அவர் தான் வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்தவர் என்று கூறினார். இதையடுத்து அவரை 1வது பிளாட்பாரம் வழியாக அழைத்து சென்றபோது ஜோலார்பேட்டையில் இருந்து ராஜமுந்திரி செல்லும் சேசாத்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த முகிலனின் நண்பன் சண்முகம் வந்து பார்த்து விட்டு முகிலனின் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த தகவல் பரவியதை தொடர்ந்து தமிழக போலீசார் எங்களை தொடர்பு கொண்டு அவரை கைது செய்து விட்டீர்களா என்று அவரை பற்றிய விவரங்களை கேட்டனர். இதையடுத்து இரவு 7 மணியளவில் ரயில்வே போலீசார் அவரை காட்பாடிக்கு அழைத்து சென்றனர் என்று தெரிவித்தனர்.

இதற்கிடையே நேற்று இரவு காட்பாடி ரயில்நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட முகிலன் ரயில்வே பாதுகாப்பு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் வேலூர் டவுன் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த பிப்ரவரியில் மாயமான முகிலன் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts