இதுவரை ஒரு மில். சுற்றுலா பயணிகள் வருகை

சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இந்த ஆண்டில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புச் சபையின் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜூன் மாதம் வரை, சுமார் 10 இலட்சம் (1,008,449) சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இவர்களில் சுமார் 97,000 பேர் சீனாவிலிருந்து வருகை தந்துள்ளதாகவும் ஏனையோர் இந்தியா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 57 சதவீதம் குறைவடைந்துள்ளதாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து, இவ்வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆயினும், பல்வேறு நாடுகள் இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் விதித்திருந்த பயணத் தடையை நீக்கிய நிலையில், இம்மாதம் முதல் சுற்றுலாப் பயணிகளின் விஜயம் அதிகரிக்குமென இலங்கை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பயணிக்கும் சீன சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக சுற்றுலா ஊக்குவிப்புச் சபை இம்மாத ஆரம்பத்தில் தெரிவித்திருந்தது. சீன பயணிகள் இலங்கையின் மீதான நம்பிக்கையை இதன் மூலம் அதிகரிக்கலாம் எனவும் இலங்கையின் சுற்றுலா துறையில் குறிப்பிடும் படியான மாற்றத்தை ஏற்படுத்துமெனவும் எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இது தொடர்பான ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ஆராய கடந்த மாதம், சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க தலைமையிலான உத்தியோகபூர்வ தூதுக்குழு சீனாவுக்கு விஜயம் செய்ததாக, சீனாவின் செய்தி சேவை நிறுவனமான சிங்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts