திருமணம் செய்து கொள்ள மாட்டேன் ஓவியா பேட்டி

சுதந்திரமாக இருக்க விரும்புவதால், திருமணம் செய்துகொள்ள மாட்டேன். கடைசிவரை நடித்துக் கொண்டிருப்பேன்’’ என்று நடிகை ஓவியா கூறினார்.

விமல்-ஓவியா நடித்து சற்குணம் டைரக்‌ஷனில் தயாராகியிருக்கும் ‘களவாணி–2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஓவியா கலந்துகொண்டு பேசினார். அவர் கூறியதாவது:–

‘‘களவாணி, என் மனதுக்கு நெருக்கமான படம். ஹெலன் என்ற என் சொந்த பெயரை மாற்றி, ஓவியா என்று எனக்கு பெயர் சூட்டியவர், டைரக்டர் சற்குணம். இது, ‘களவாணி’ படத்தின் தொடர்ச்சி அல்ல. வேறு ஒரு புது களத்தில் கதை இருக்கும். முதல் பாகத்தில் நடித்தவர்கள் அத்தனை பேரையும் பார்ப்பதில், சந்தோ‌ஷம்.

இந்த படத்தை பொறுத்தவரை, எனக்கும், விமலுக்கும் இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’யை விட, இளவரசுக்கும், சரண்யா அம்மாவுக்கும் இருக்கும் ‘கெமிஸ்ட்ரி’தான் சிறப்பாக இருக்கும். விமல், என் நெருங்கிய நண்பர். அவர்தான் எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தார். ‘களவாணி’ அளவுக்கு இந்த படமும் ரசிகர்களை திருப்தி செய்யும்.

திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் திருமணமே செய்துகொள்ள மாட்டேன். நான் சுதந்திரமாக இருக்க விரும்புகிறேன். இந்த வாழ்க்கையே எனக்கு சவுகரியமாக இருக்கிறது. கடைசி வரை நடித்துக் கொண்டிருந்தால் போதும்.

இந்த படத்தில் நான், மகளிர் குழு தலைவியாக நடித்து இருக்கிறேன். எனக்கு ‘சூப்பர் உமன்’ ஆக நடிக்க ஆசை. அப்படி ஒரு வேடம் கிடைத்தால், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். எனக்கு நண்பர்களும் கிடையாது. எதிரிகளும் கிடையாது. எல்லோரிடமும் ஒரே மாதிரி பழகுகிறேன்.

நயன்தாரா, காஜல் அகர்வால், அமலாபால் ஆகிய மூவரும் சொந்த படம் எடுத்து விட்டார்கள். நீங்கள் எடுக்கவில்லையா? என்று கேட்கிறார்கள். நான் இப்போதுதான் வந்து இருக்கிறேன். இன்னும் சம்பாதிக்கவே ஆரம்பிக்கவில்லை. அதனால் சொந்த படம் எடுக்கும் ஆசை இல்லை.’’

இவ்வாறு ஓவியா கூறினார்.

நிகழ்ச்சியில் டைரக்டர் சற்குணம், நடிகர் இளவரசு, நடிகை சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts