முதல்-அமைச்சர் வேடத்தில் விஜய்?

விஜய் இப்போது அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு பிகில் என்று பெயரிட்டு விஜய்யின் அப்பா, மகன் ஆகிய இரு வேட தோற்றங்களை வெளியிட்டனர்.

தந்தை விஜய் மீன் சந்தையில் கத்தியுடனும், மகன் விஜய் கால்பந்து வீரராகவும் இருப்பதுபோன்று இந்த தோற்றங்கள் இருந்தன.

தற்போது மகன் விஜய்யின் மைக்கேல் கதாபாத்திரத்துக்காக வடிவமைக்கப்பட்ட அடையாள அட்டை சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில் மைக்கேல் என்ற பெயருடன் பெண்கள் கால்பந்து தலைமை பயிற்சியாளர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

இதன் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக விரைவில் டெல்லி செல்ல இருக்கிறார்கள். இந்த படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிக்கிறார். அந்த படத்தை முடித்து விட்டு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யும், ஷங்கரும் நேரில் சந்தித்து புதிய படத்தில் இணைவதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த படத்தில் விஜய் முதல்-அமைச்சர் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சமூகத்தில் தீவிர பிரச்சினைகளாக இருக்கும் தண்ணீர், விவசாய நிலங்கள் அழிப்பு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு ஆட்சியில் இருந்து தீர்வு காண்பதுபோல் இந்த கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது.

முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே முதல்வன் படத்தில் நடிக்க விஜய்யைத்தான் முதலில் அணுகினர். அவர் நடிக்காததால் அர்ஜுனுக்கு அந்த வாய்ப்பு போனது.

Related posts