சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும் : ஜனாதிபதி


நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும்.

இந்நிலைமை மாற்றியமைக்கப்படுவதற்கும் , நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற அரசகரும மொழிகள் தின விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி தெரிவித்ததாவது :

நாட்டில் இனங்களுக்கிடையே நம்பிக்கை, ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படுவதற்கு மொழியறிவு முக்கியமானதாகும். நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் நடைமுறை ரீதியில் அமுல்படுத்தப்பட வேண்டும்.

அரசகரும மொழி கொள்கை தொடர்பில் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரிகள் இதுவரையிலும் போதிய கவனம் செலுத்தவில்லை. இதனால் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

வெளிவேறு இனத்தைச் சேர்ந்தவர்களும், வெளிவேறு மொழி பேசுபவர்களும் தனது தாய்மொழிக்கு மதிப்பளிப்பதை போன்றே ஏனைய மொழிகளையும் அறிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.

நாட்டு மக்களிடையே அச்சமும் பயமும் அவநம்பிக்கையும் தோன்றியுள்ளமைக்கு அவர்களுக்கிடையே சரியான புரிந்துணர்வு இல்லாமையே காரணமாகும்.

அனைத்து மக்களும் சமாதானமாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான சுதந்திரமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே மொழியறிவை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பங்களிப்பு வழங்கப்படும் மொழிக் கணக்காய்வு அறிக்கையை சமர்ப்பித்தல் மற்றும் மும்மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட படிவங்களை இணையத்தளத்தில் வெளியிடும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

அரசகரும மொழி கொள்கையை வினைத்திறனான முறையில் நடைமுறைப்படுத்தும் நோக்கில் அரசகரும மொழி கொள்கையை நடைமுறைப்படுத்தும் வாரம் நேற்று முதல் ஜூலை 05ஆம் திகதி வரை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதன் அங்குரார்ப்பண நிகழ்வு ..இன்று இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் இந்த நிகழ்ச்சித்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

Related posts