என் வாழ்க்கையில் புதிய அத்தியாயம் டைரக்டர் விஜய்

டாக்டருடன் 2-வது திருமணம் செய்ய உள்ள டைரக்டர் விஜய், இது தனது வாழ்க்கையில் புதிய அத்தியாயம் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மதராச பட்டணம், தெய்வத்திருமகள், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்பட பல படங்களை டைரக்டு செய்துள்ள விஜய்க்கும், நடிகை அமலாபாலுக்கும் ஏற்கனவே திருமணம் நடந்து பின்னர் விவாகரத்து செய்து கொண்டனர். தற்போது ஐஸ்வர்யா என்ற டாக்டரை விஜய் 2-வது திருமணம் செய்துகொள்கிறார். வருகிற 11-ந் தேதி இவர்கள் திருமணம் நடக்கிறது.

இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“வாழ்க்கை பயணம் எப்போதுமே அனைவருக்கும் அதன் சொந்த வழியில் சிறப்பானது மற்றும் தனித்துவமானது. எல்லோருடைய வாழ்க்கையை போலவே என் வாழ்க்கையும் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி மற்றும் வலி ஆகியவற்றை உள்ளடக்கிய வெவ்வேறு கட்டங்களில் பயணித்து வந்துள்ளது.

ஆனால் இதுபோன்ற எல்லா சந்தர்ப்பங்களிலும் எனக்கு ஆதரவாக இருந்தது பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவு ஆகும். தற்போது எனது நலம் விரும்பிகளுக்கு என் வாழ்வின் முக்கியமான துவக்கத்தை பற்றிய மகிழ்ச்சியான ஒரு செய்தியை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியத்தை நான் உணர்கிறேன்.

என் குடும்பத்தினர் என் வாழ்க்கை துணைவியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்துள்ளனர். டாக்டர் ஆர்.ஐஸ்வர்யாவுடன் எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு குடும்ப விழாவாக இந்த திருமண நிகழ்வு நடக்க இருக்கிறது. உங்கள் முழு அன்பு மற்றும் ஆசிர்வாதங்களுடன் எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறேன்.” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts