பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய அமைச்சர்

இங்கிலாந்து அமைச்சர் ஒருவர் ஒரு பெண்ணை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஒரு வீடியோ இங்கிலாந்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

லண்டன் கூட்டம் ஒன்றில் இங்கிலாந்து கருவூலத்தின் அதிபர் (Chancellor of the Exchequer) என்னும் முக்கிய பொறுப்பிலிருக்கும் பிலிப் ஹம்மண்ட் உரையாற்றிக் கொண்டிருக்கும்போது, திடீரென கிரீன்பீஸ் அமைப்பைச் சார்ந்த சமூக ஆர்வலர்கள் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து குரல் எழுப்பத் தொடங்கினர். இதனால் கூட்டத்திற்கிடையில் குழப்பம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் ஒரு பெண் சமூக ஆர்வலர் முக்கிய பேச்சாளரை நோக்கிச் செல்ல முயன்றார்.அப்போது அங்கு அமர்ந்திருந்த அமைச்சர் மார்க் பீல்டு என்பவர் சட்டென எழுந்து அந்தப் பெண்ணின் கழுத்தைப் பிடித்து தள்ளிக்கொண்டே போய் அவரை கட்டிடத்திலிருந்து வெளியேற்றினார்.

ஒரு பெண்ணை இப்படி நடத்தலாமா என கேள்விகள் எழ, அந்தப் பகுதியில் பாதுகாவலர்கள் யாரும் இல்லை, எனவே நான் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினேன் என்று கூறிய மார்க் பீல்டு, அந்தப் பெண்ணிடம் ஒரு வேளை ஆயுதம் எதுவும் இருக்கலாம் என நான் எண்ணி, மற்றவர்களின் பாதுகாப்பு கருதியே அவ்விதம் நடந்து கொண்டேன் என்றும் கூறினார். என்றாலும் பல நாடாளுமன்ற அமைச்சர்கள் பீல்டு ராஜினாமா செய்ய வேண்டும் என கோரியுள்ளனர்.

அத்துடன் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதற்கிடையில் நடந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள மார்க் பீல்டு அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கோருவதாக தெரிவித்துள்ளதோடு, தான் ஒரு அமைச்சருக்கான நடத்தையில் தவறியிருக்கிறேனா என்பதை அறிவதற்காக விசாரணைக்குட்படுவதோடு, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் சமூக ஆர்வலருக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

Related posts