உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் ஞானசார தேரர்

கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துமாறு கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் கொடுத்து, பொதுபல சேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்துள்ளார்.

இன்று (22) கல்முனைக்கு 50க்கும் அதிகளவான தேரர்களுடன் வருகை தந்த கலகொட அத்தே ஞானசார தேரர், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களிடம் உறுதிமொழி ஒன்றை வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.

இதன்போது கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனை தவிர, உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஏனையோர் தேரரின் உறுதிமொழியை நம்பி உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளனர்.

எனினும், மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மாத்திரம் சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை தொடர்வதாக கூறினார்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கல்முனை ஸ்ரீசுபத்திராராம மஹா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரன்முதுகல சங்கரட்ண தேரர், கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ ச.கு. சச்சிதானந்தம் குருக்கள், மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம், கல்முனை தமிழ் வர்த்தக சங்கப் பிரதிநிதி கிருஸ்ணபிள்ளை லிங்கேஸ்வரன் ஆகியோர் நீராகாரம் அருந்தி உண்ணாவிரதத்தை நிறைவு செய்தனர்.

இந்நிலையில், கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் நீராகாரம் அருந்துவதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், முடிவு கிடைக்கும் வரை தான் தொடர்ந்தும் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட ஐவரில் சங்கரட்ண தேரர் உட்பட நால்வர் நீராகாரம் அருந்திக்கொண்டு தொடர்ந்து நல்லதொரு முடிவு கிடைக்கும் வரை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

கல்முனைக்கு விஜயம் செய்த பொதுபல சேனா தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts