முஸ்லீம் எம்.பிக்கள் இருவர் மந்திரிகளாயினர் மைக் பொம்பியோ இலங்கை விஜயம் ரத்து

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

ஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.

அதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.
——

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோவின் திட்டமிடப்பட்டிருந்த இலங்கைக்கான விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் அவர் கலந்து கொள்ளவுள்ளதாலும், தவிர்க்க முடியாத காரணத்தினாலும், இலங்கைக்கான விஜயத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை எனவும், கொழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள முடியாமையையிட்டு, அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ கவலை வெளியிட்டுள்ளதாகவும், கொழும்பிலுள்ள அமெரிக்க உயர் ஸ்தானிகராலயம் மேலும் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கான விஜயத்தை இம்மாதம் 24 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை மேற்கொள்ளவுள்ளதோடு, முதலில் இந்தியாவின் புதுடில்லிக்கு விஜயம் செய்யும் அவர், அதனைத் தொடர்ந்து இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
—–

நாட்டின் இறையாண்மையினை சபாநாயகர் கரு ஜயசூரிய அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்துள்ளார். அமெரிக்க நிறுவனத்தில் சம்பளம் பெறுபவர் பாராளுமன்றத்தில் சபாநாயகரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை இதுவே இலங்கை அரசியல் வரலாற்றிலும்,உலக அரசியல் வரலாற்றிலும் முதன்முறையாக இடம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தேவைகளுக்காகவே இன்று பாராளுமன்றம் செயற்படவில்லை. மக்களின் பிரதிநிதிகள் மாத்திரமே பாராளுமன்ற பிரதிநிதிகளாக செயற்பட வேண்டும். ஆனால் தற்போது அவ்வாறில்லை. வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் அனைவரும் பாராளுமன்றத்தின் முக்கிய விடயங்களிலும் கலந்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts