நடிகர் சங்க தேர்தல் ரத்து ?

நடிகர் சங்க தேர்தல் எம்ஜிஆர் – ஜானகி கல்லூரியில் 23ந்தேதி நடைபெற இருந்தது. இந்த தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்தது .

நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னரை சந்தித்தனர். கவர்னரை விஷால், நாசர், கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் சந்தித்தனர். நடிகர் சங்கத் தேர்தலை சென்னை நகர் பகுதியில் நடத்த அனுமதி தர முடியாது என நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டு உள்ளார்.

வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி என எழுந்த புகார் குறித்து பதிவாளர் ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். மொத்தம் 61 உறுப்பினர்கள் நீக்கப்பட்டிருப்பதாக பதிவாளருக்கு புகார் வந்தது குறிப்பிடத்தக்கது.

——

சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் வரும் 23-ம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் நடைபெற இருந்தது. நடிகர் சங்க தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றன.

இந்நிலையில், பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர், சத்யா ஸ்டுடியோ நிர்வாகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், விஷால் அணிக்கும், எதிரணிக்கும் பிரச்சினை உள்ள சூழலில் தேர்தல் நடைபெறவுள்ளதாலும், அன்றைய தினம் தகராறு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அமைச்சர்கள் குடியிருப்புகள், நீதிபதிகள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க தேர்தலை எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடத்துவதை தவிர்க்க வேண்டும். தேர்தலை வேறு இடத்திற்கு மாற்ற பரிந்துரைக்கும்படி கூறப்பட்டிருந்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீஸ் அனுமதி பெற்றால் தான் தேர்தலை நடத்த முடியும் என்று சத்யா ஸ்டுடியோ தெரிவித்துள்ளது.

எனவே, நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கோரியிருந்தார். இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத மாற்று இடத்தை ஏன் தேர்வு செய்யக்கூடாது. நந்தனம் ஒய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி போன்ற மாற்று இடங்களை தேர்வு செய்யலாமே. எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. நடிகர் சங்க தேர்தலை பற்றி கவலையில்லை. மக்களின் பாதுகாப்புதான் முக்கியம் என்றார்.

தேர்தலை வேறு இடத்தில் நடத்துவது குறித்து இன்று தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் தரப்புக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியினர் நடிகர் விஷால் தலைமையில் இன்று சந்தித்து பேசினர்.

கவர்னரை சந்தித்தப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்த நடிகர் விஷால், நடிகர் சங்க தேர்தலை நியாயமான முறையில் போதிய பாதுகாப்புடன் நடத்த கோரிக்கை வைத்தோம் என்றும் நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் நீதிமன்றத்தில் நல்ல முடிவு வரும் என நம்புகிறோம் என்றார்.

இதற்கிடையே, நடிகர் சங்க தேர்தலில் அதிக குளறுபடிகள் உள்ளதாக கூறி தேர்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மாவட்ட சங்க பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்களிக்க தகுதியுள்ள வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்ய வேண்டியுள்ளது என்றும் முதலில் வாக்காளர் பட்டியலை சரி செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த ஆண்டு உறுப்பினர் பட்டியலை வைத்து தேர்தல் நடத்துவது என்பதை ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளது. சங்க நிர்வாகிகளின் பணிக்காலம் முடிந்தபிறகு தேர்தல் தொடர்பாக முடிவெடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் தொடர்பாக நாளை நீதிமன்றத்தை நாட விஷால் அணியினர் முடிவு செய்து உள்ளனர்.

தேர்தல் ரத்து குறித்து சங்கரதாஸ் அணியை சேர்ந்த பாக்யராஜ் கூறும்போது :-

நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, எங்கள் அணியினருடன் ஆலோசித்து விட்டு கருத்து தெரிவிப்பேன். சங்க கட்டட கட்டுமான பணிகளை பாண்டவர் அணியினர் முடிக்காததால் தான், நாங்கள் தேர்தலில் போட்டியிட்டோம் எனவும் பாக்யராஜ் கூறினார்.

உறுப்பினர்கள் மீது விதிகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும், நடவடிக்கை தவறு எனில் நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். சங்க தேர்தலை நேர்மையாக நடத்தி கொடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு எனவும் நடிகர் கருணாஸ் கூறினார்.

பதவிக்காலம் முடிந்ததால், நடிகர் சங்க தேர்தலை நடத்த தார்மீக உரிமையை இழந்து விட்டனர் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறி உள்ளார்.

Related posts