அஜித் படத்துக்கு ரூ.75 கோடி தியேட்டர் உரிமை

அஜித்தின் 59-வது படமான நேர்கொண்ட பார்வை படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெற்றி பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் பதிப்பாக தயாராகி உள்ளது. கதாநாயகியாக வித்யாபாலன் வருகிறார். வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இதில் அஜித்குமார் வக்கீல் வேடத்தில் வந்து கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன. படத்துக்கு அஜித் உள்ளிட்ட அனைத்து நடிகர்-நடிகைகளும் டப்பிங் பேசி முடித்துள்ளனர். தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணியை தொடங்கி இருப்பதாக யுவன்சங்கர் ராஜா வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.

பில்லா, பில்லா-2, ஆரம்பம், மங்காத்தா படங்களுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருந்தது என்றும், அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்துக்கும் பின்னணி இசை இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது படத்துக்கான வியாபாரம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ்நாடு தியேட்டர் உரிமையை கைப்பற்ற ரூ.70 கோடி வரை கொடுக்க முன்வந்துள்ளனர். ஆனால் போனிகபூர் அதை விட அதிகம் எதிர்பார்க்கிறார். ஏற்கனவே விஜய்யின் 63-வது படத்துக்கான தமிழக தியேட்டர்கள் உரிமை ரூ.75 கோடிக்கு விலைபோய் இருப்பதாக கூறப்படுகிறது. அதே தொகையை அஜித் படத்துக்கும் போனிகபூர் கேட்கிறார்.

ரூ.75 கோடிக்கு குறைவாக படத்தை தரமாட்டேன் என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது. படத்தை ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டு வருகின்றனர்.

Related posts