நடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர்..!

நடிகர் வடிவேலு ஆணவம் பிடித்த நடிகர் என டைரக்டர் நவீன் தெரிவித்துள்ளார்.

டைரக்டர் சிம்புத்தேவனுக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலால் இம்சை அரசன் 23-ம் புலிகேசி 2-ம் பாகம் படம் முடங்கி உள்ளது. இந்த படத்தை முடித்த பிறகே வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை விதித்துள்ளதால் கடந்த 2 வருடங்களாக வடிவேலுவை தயாரிப்பாளர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை.

இந்த நிலையில் சிம்புத்தேவனையும் இயக்குனர் ஷங்கரையும் வடிவேலு கடுமையாக விமர்சித்தார். அவர்களால்தான் படம் நின்று போனது என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு மூடர் கூடம், அக்னி சிறகுகள், அலாவுதினின் அற்புத கேமரா ஆகிய படங்களை இயக்கிய நவீன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“அண்ணன் வடிவேலுவின் நேர்காணல் பார்த்தேன். இயக்குனர் சிம்புத்தேவனை, சின்ன பையன், சின்ன டைரக்டர், பெருசா வேலை தெரியாதவர் என்றெல்லாம் பேசி இருக்கிறார். இவரை கதாநாயகனாக வைத்து வெற்றி படம் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானதுபோல் ‘உடான்ஸ்’ விடுகிறார்.

உங்களுக்கு இவ்வளவு அகந்தை கூடாது. உங்களால்தான் புலிகேலி படம் வெற்றி பெற்றது என்றால் ஏன் அதற்கு பிறகு நீங்கள் பெரும் பட்ஜெட்களில் கதாநாயகனாக நடித்து வெளியான எந்த படமும் ஓடவில்லை. சிம்புதேவனையும், இயக்குனர் ஷங்கரையும் நீங்கள் மரியாதை குறைவாக பேசுவதை ஏற்க முடியாது.

23-ம் புலிகேசி-2 படம் வராமல் இருப்பது என்னை போன்ற ரசிகர்களுக்கு இழப்பே. அதற்கு காரணமான உங்கள் அகந்தையும் ஆணவமும் கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு டைரக்டர் நவீன் கூறியுள்ளார்.

Related posts