எமக்கு வேறு வழி இருக்கவில்லை ஹக்கீம்

முஸ்லிம் அர­சியல் பிர­தி­நி­திகள் அல்­லது அமைச்­சர்கள் இரா­ஜி­னாமா என்­பதே தற்­போ­தைய அர­சியல் சூழலில் அனைத்து தரப்­பி­ன­ராலும் பேசப்­பட்டு வரும் விட­ய­மாக உள்­ளது. நாட்டின் அர­சியல் வர­லாற்றில் முதல் தட­வை­யாக முஸ்லிம் பிர­தி­நி­திகள் இல்­லாத அமைச்­ச­ர­வை நாட்டில் தற்­போது காணப்­ப­டு­கின்­றது. சிறி­லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையில் முஸ்லிம் பிர­தி­நி­திகள் அண்­மையில் எடுத்த அர­சியல் தீர்­மானம் அதிர்ச்சி வைத்­தியம் கொடுப்­ப­தாக அமைந்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இந்த முடிவின் பார­து­ரத்­தன்மை அதன் விளை­வுகள் எதிர்­கால நகர்­வுகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்­கீமை கேசரி சார்பில் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினோம். அதன்­படி எமது கேள்­வி­க­ளுக்கு அவர் அளித்த பதில்கள் வரு­மாறு

Q:ஒட்­டு­மொத்த முஸ்லிம் அமைச்­சர் ­களும் அமைச்­ச­ர­வை­யிலும் அர­சாங்­கத்­திலும் அங்கம் வகிக்­க­மாட்­டீர்கள் என்று வர­லாற்றில் எப்­போ­தா­வது எண்­ணி­ய­துண்டா?

பதில்: இவ்­வா­றான ஒரு சூழலில் முஸ்லிம் சமூகம் அமைச்சர் பத­வியில் இல்­லாது விட்­டாலும் கூட தலை­வர்கள் ஒட்­டு­மொத்த சமூ­கத்­துக்­காக உரத்து குரல் கொடுப்­ப­தற்­கான ஒற்­று­மையை வளர்த்­துக்­கொள்­ள­வேண்டும் என்­ப­திலே மிக ஆர்­வ­மாக மக்கள் இருந்­தனர். அந்தப் பின்­ன­ணி­யி­லேயே ஏற்­பட்­டி­ருந்த நெருக்­க­டி­மிக்க சூழலில் சகல தரப்­பி­ன­ருக்கும் ஒரு செய்­தியை கூறு­வ­தற்கு முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒட்­டு­மொத்த அமைச்­சர்­க­ளு­டைய இரா­ஜி­னாமா மற்றும் அமைச்­சர்கள் அல்­லாத அனைத்து முஸ்லிம் எம்.பி. க்களையும் ஒன்­றி­ணைத்த இந்த செயற்­பா­டுகள் நாட்டின் அர­சி­யலில் புதிய மற்றும் பாரிய திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. இதனை மிக பக்­கு­வ­மாக நேர்­மை­யாக சமூகம் எதிர்­பார்த்­தி­ருந்த நோக்­கங்­க­ளுக்­காக ஒற்­று­மை­யாக பயன்­ப­டுத்­து­வது எங்கள் மீது இருக்­கின்ற மிகப்­பெ­ரிய தார்­மீக பொறுப்­பாகும்.

Q:பல்­லி­னங்கள் வாழ்­கின்ற ஒரு நாட்டில் அரச இயந்­தி­ரத்தில் அனைத்து சமூ­கங்­களும் பங்­கெ­டுக்­க­வேண்டும். உங்கள் இந்த முடிவின் ஊடாக அரச இயந்­தி­ரத்தில் இருந்து வில­கி­யுள்­ளீர்கள். தார்­மீக ரீதியில் இது எந்­த­ளவு தூரம் சரி­யா­னது?

பதில்: இது ஏன் தார்­மீக­மா­கக்­கூ­டாது என்ற கேள்­வியை நாங்கள் எழுப்­பு­கிறோம். தார்­மீகம் என்­பது அர­சியல் நேர்­மையை பொறுத்த விட­ய­மாகும். என்னைப் பொறுத்­த­வ­ரையில் இத­னை­வி­டவும் அர­சியல் நேர்மை வேறு எந்த அடிப்­ப­டை­யிலும் இருக்க முடி­யாது. இன்று நிறை­வேற்­றுத்­து­றையில் எமது பங்­க­ளிப்பு இல்லை என்­ப­தற்­காக இந்த கட்­டத்­தி­லேயே முஸ்லிம் சமூகம் தனது வலுவை இழந்­து­விட்­டது என்று யாரும் பேச முடி­யாது. காரணம் பாரா­ளு­மன்­றத்தில் 21 எம்.பி. க்களின் பலம் என்­பது அமைச்­ச­ர­வையில் இருக்­கின்ற நான்கு உறுப்­பி­னர்­க­ளையும் மிகைத்த பல­மாகும். எனவே இந்த சமூ­கத்தின் விடி­வுக்­கான போராட்­டத்தில் இத­னை­வி­டவும் சிறந்த மாற்­று­வழி இருக்க முடி­யாது. ஆனால் இதனை லாவ­க­மா­கவும் நேர்­மை­யா­கவும் நாங்கள் பயன்­ப­டுத்­த­வேண்டும். இதனால் ஏற்­ப­டு­கின்ற தாக்­கத்தை எங்­க­ளுக்குள் இருக்­கின்ற கருத்து முரண்­பா­டு­களை நாங்கள் களத்­துக்கு கொண்டு வந்து பல­வீ­னப்­ப­டுத்­தி­வி­டக்­கூ­டாது.

Q: 21 ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூக தலை­வர்­களில் மூவரின் மீதே குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டன. இந்த மூன்று பேர் மீதான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்­காக ஏன் ஒட்­டு­மொத்த முஸ்லிம் அமைச்­சர்­களும் பதவி வில­க­வேண்டும்?

பதில்: உல­கிலே இருக்­கின்ற ஜன­நா­யகம் நில­வு­கின்ற நாடு­க­ளிலே இப்­போது இலங்கை ஒரு விசித்­தி­ர­மான நாடாக உரு­வெ­டுத்­து­வ­ரு­கின்­றது. எடுத்த எடுப்பில் யாரும் யார் மீதும் குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­தலாம். குற்­றச்­சாட்­டுக்­களை ஊடக பரி­வா­ரங்­க­ளுடன் சென்று பொலிஸ் தலை­மை­ய­கத்­திலும் ஊழல் விசா­ரணை அலு­வ­ல­கத்­திலும் கொடுக்­கலாம். ஆனால் வெறும் கடித தலைப்­புக்­க­ளுடன் முறைப்­பா­டு­களை கொடுத்தால் போதாது. முறைப்­பா­டு­களை நிரூ­பிக்­க­வேண்டும். இந்த விட­யத்தில் இலங்­கையில் விசித்­தி­ர­மான புதிய நடை­மு­றையை பார்க்­கின்றோம். முதலில் ஏதா­வது ஒரு குற்­றச்­சாட்­டுக்கு ஒரு­வரை கைது செய்­வார்கள். அதன்­பின்னர் அந்தக் குற்­றச்­சாட்­டை­ விட்­டு­விட்டு இன்­னாரை நாங்கள் கைது செய்­துள்ளோம். இவ­ருக்கு எதி­ராக வேறு ஏதா­வது குற்­றச்­சாட்டு இருந்தால் வந்து முறை­யி­டுங்கள் என்று அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. அமைச்­சர்கள் ஆளு­நர்­க­ளுக்கும் இதே நிலைதான். அமைச்­சர்கள் மீதான குற்­றச்­சாட்டை வைத்து ஊட­கங்­களின் ஆத­ர­வுடன் ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் இழி­வு­ப­டுத்தும் வகையில் பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­பட்­ட­வர்­க­ளாக சித்­த­ரிக்க முயல்­வது அபத்­த­மான நட­வ­டிக்­கை­யாகும். போது­மான கார­ணங்­களை காட்டி அதனை செய்தால் ஏற்­றுக்­கொள்­ளலாம். இந்த நேர்­மை­யீ­ன­மான சட்­டத்தின் ஆட்சி நடை­பெ­று­கின்ற சூழலில் மற்றும் இந்த விசித்­தி­ர­மான நிலை­மையில் நாங்கள் அமைச்­சர்­க­ளாக இருப்­பது என்­பது எங்­க­ளு­டைய சுய­ம­ரி­யா­தைக்கு ஒரு கேடு என்­பதால் நாங்கள் அனை­வரும் ஒட்­டு­மொத்­த­மாக பல­மான செய்­தியை நாட்­டுக்கும் சர்­வ­தே­சத்­துக்கும் கூற­வேண்டும் என்­ப­தற்­காக இந்த முடிவை எடுத்­தி­ருக்­கின்றோம். தடிெ­ய­டுத்­த­வர்­க­ளுக்கு எல்லாம் வேட்­டை­யா­டு­வ­தற்கு இட­ம­ளிக்கும் நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. இது ஆபத்­தா­னது.

Q: பதவி துறந்து சில நாட்கள் ஆகி­விட்­டன. இக்­காலப் பகு­தி­யிலும் அர­சி­ய­லிலும் மக்­க­ளி­டமும் பிர­தி­ப­லிப்பு எவ்­வாறு உள்­ளது?

பதில்: இதற்கு பலத்த வர­வேற்பு உள்­ளது. முஸ்லிம் சமூகம் மட்­டு­மல்ல முஸ்லிம் அல்­லா­த­வர்­களில் கூட ஒரு சாரார் வியப்­புடன் பார்க்­கின்­றனர். ஒரு சாரார் அதிர்ச்­சி­யுடன் பார்க்­கின்­றனர். விச­னத்­துடன் உள்­ள­வர்கள் இது ஒரு துணிச்­ச­லான நட­வ­டிக்கை மட்­டு­மல்ல அடுத்து நாங்கள் என்ன செய்­யப்­போ­கின்றோம் என்று விச­னத்­துடன் இருக்­கின்­றார்கள். அதிர்ச்­சியில் உள்­ள­வர்கள் இந்த நாட்டில் பாரிய எதிர்­வி­னையை சந்­திக்க நேர்ந்­து­விட்­டது என்று பீதியில் இருக்­கின்­றனர். இத­னை­வி­டுத்து பௌத்த மகா பீடங்கள் இந்த விடயம் குறித்து தங்கள் அவ­தா­னத்தை செலுத்­தி­யுள்­ளன . இவை எல்லாம் வெவ்­வேறு வழி­களில் இந்த முடி­வுக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்­றுதான் நாங்கள் கூற­வேண்டும்.

Q: அப்­ப­டி­யானால் அடுத்து என்ன செய்­யப்­போ­கின்­றீர்கள்?

பதில்: நாங்கள் வியா­ழக்­கி­ழமை பாரா­ளு­மன்­றத்தில் கூடி அடுத்து என்ன செய்­வது என்­பது குறித்து ஒழுங்­கு­ப­டுத்­தலை தயா­ரித்­துள்ளோம். கூட்­டாக இன்று தொடக்கம் (நேற்று) நாட்டின் முக்­கிய தலை­மை­களை தனித்­த­னி­யாக சந்­திக்­க­வுள்ளோம். இதற்கு அப்பால் சிவில் சமூக அமைப்­புக்­க­ளையும் தொழில்­துறை சார்ந்த அமைப்­புக்­க­ளையும் சமய தலை­மை­க­ளையும் சந்­திக்­க­வுள்ளோம். தொடர்ச்­சி­யாக இந்த செயற்­பாட்­டுக்­காக அடுத்த ஒரு மாத காலத்தை செல­வ­ழிக்­க­வுள்ளோம். வெ ளிநாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­க­ளையும் குழு­வா­கவும் தனி­யா­கவும் சந்­திக்­க­வுள்ளோம்.

Q: முஸ்லிம் பிர­தி­நி­திகள் மீண்டும் அமைச்­ச­ர­வையில் இணை­யப்­போ­வதை தீர்­மா­னிக்கும் காரணி என்ன?

பதில்: அமைச்­ச­ர­வையில் இணை­வ­தற்­கான எந்த அவ­ச­ரமும் முஸ்லிம் பிர­தி­நி­தி­க­ளுக்கு கிடை­யாது. நாங்கள் எந்த நோக்­கத்­துக்­காக கூட்­டாக ஒரு முடிவு எடுத்­தோமோ அந்த நோக்­கங்கள் நிறை­வே­று­கின்ற உத்­த­ர­வாதம் எங்­க­ளுக்கு வேண்டும். அது கண்­கூ­டாகத் தெரி­ய­வேண்டும். அதற்­கான அத்­தாட்­சிகள் சரி­வர அமை­வது அவ­சியம். அந்தக் கட்­டத்­தில்தான் எங்­க­ளு­டைய மீளி­ணைவு என்­பது நியா­யப்­ப­டுத்­தப்­ப­டலாம். என்னை பொறுத்­த­வ­ரையில் மீத­மி­ருக்­கின்ற இந்த சில மாதங்­க­ளுக்­காக நாங்கள் அமைச்சுப் பத­வி­க­ளுக்கு தவித்­துக்­கொண்­டி­ருப்­ப­வர்­க­ளாக எங்­களை ஆக்­கிக்­கொள்­ள­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

Q:நான்கு பௌத்த பீடங்­களும் முஸ்­லிம்கள் மீண்டும் அரச இயந்­தி­ரத்தில் இணைந்­து­கொள்­ள­வேண்டும் என்று கோரி­யுள்­ளன. இதற்கு உங்கள் பதில் என்ன?

பதில்: நாங்கள் எடுத்த நட­வ­டிக்­கையின் பின்­வி­ளை­வாக இந்த கோரிக்கை வந்­துள்­ளது. பௌத்த பீடங்கள் மற்றும் அவற்றின் செயற்­குழு இந்த தீர்­மா­னத்­துக்கு வந்­துள்­ளன. இந்த நாட்டில் உள்ள சகல இன­வாத சக்­தி­க­ளுக்கும் இது ஒரு பலத்த அடி என்­ப­தனை நான் கூறி­யுள்ளேன். அவர்­களை பொறுத்­த­மட்டில் எங்கள் நட­வ­டிக்கை இன துரு­வப்­ப­டுத்­தலை மேலும் வலு­வாக்­கி­விடும் என்று அச்சம் காணப்­ப­டு­கின்­றது. அத­னை­யிட்­டுத்தான் இவ்­வா­றான வின­ய­மான வேண்­டு­கோளை விடுத்­துள்­ளார்கள். அவர்­க­ளி­டத்தில் எங்­க­ளு­டைய முடி­வு­களின் பின்­னணி பற்­றியும் இது நாட்டின் தேசிய நலன்­சார்ந்த விடயம் என்­ப­த­னையும் தனிப்­பட்ட சமூ­கத்தின் விடிவு நோக்­கிய விடயம் அல்ல என்­ப­த­னையும் எடுத்­துக்­கூ­ற­வி­ருக்­கின்றோம். சட்­டத்தின் ஆட்சி சரி­யாக நிறு­வப்­ப­ட­வேண்டும். அத­னூ­டாக சகல சமூ­கங்கள் மத்­தி­யிலும் நல்­லி­ணக்கம் நில­வ­வேண்டும். நாட்­டுக்கு எதி­ரா­க­வுள்ள சர்­வ­தேச நிலைப்­பா­டுகள் மாற­வேண்டும். இவற்றை மிகத் தெளிவாக பௌத்த பீடங்­க­ளுக்கு எடுத்­து­ரைக்­க­வி­ருக்­கின்றோம். அவர்கள் அதை உள்­வாங்கி எங்­க­ளு­டைய நிலைப்­பாட்டை அதன் நியா­யங்­க­ளையும் புரிந்­து­கொள்ள நாங்கள் வழி­செய்­ய­வேண்டும்.

Q:பௌத்த பீடங்­களின் தேரர்­க­ளு­ட­னான சந்­திப்பு.

பதில்: தேரர்­களை நிச்­ச­ய­மாக சந்­திப்போம். நாங்கள் சந்­திக்­க­வி­ருக்­கின்ற முக்­கிய தரப்­புக்­களில் பௌத்த பீடங்­களும் உள்­ளன.

Q: இப்­ப­டி­யொரு கோரிக்­கையை பௌத்த பீடங்­க­ளி­லி­ருந்து நீங்கள் எதிர்­பார்த்­தீர்­களா?

பதில்: இதன் பின்­னணி மிகவும் சுவா­ரஸ்­ய­மா­னது. ஏப்ரல் 21 குண்­டுத்­தாக்­கு­தலின் பின்னர் முஸ்லிம் சமூ­கத்தின் உள்­வி­வ­கா­ரங்­களில் தேவை­யற்ற தலை­யீ­டு­களை வேண்­டு­மென்றே திணிக்கும் சில சக்­திகள் அதி­க­மான பிரே­ர­ணை­களை முன்­வைத்­துக்­கொண்­டி­ருந்­தார்கள். முழங்­கா­லுக்கும் மொட்­டைத்­த­லைக்கும் முடிச்­சு­போட முயல்­கின்­றனர். நோய்க்­கான அறி­கு­றி­களைக் கொண்டு அதுதான் நோய் என உறு­திப்­ப­டுத்­தி­விட முடி­யாது. இந்த அடிப்­ப­டையில் ஒரு­சில இன­வாத, மத­வாத சக்­திகள் கூப்­பாடு போடத்­தொ­டங்­கி­னார்கள். துர­திஷ்­ட­வ­ச­மாக அர­சியல் தலை­மை­களும் எடுத்த எடுப்­பி­லேயே நடந்த இந்த மிலேச்­சத்­த­ன­மான தாக்­கு­த­லுக்கு வழ­மை­போன்று உல­க­ளா­விய மட்

டத்தில் நிலவும் இஸ்லாம் குறித்த பீதி ஒன்றை இந்த நாட்டில் உரு­வாக்கத் தொடங்­கி­யுள்­ளார்கள். இதற்கு நாட்டின் அர­சியல் தலை­மை­களும் பலிக்­க­டா­வா­கின. இந்­நி­லையில் அவர்­க­ளுக்கு சரி­யான அணு­கு­மு­றையை தெளிவு­ப­டுத்­திக்­கொண்டு வந்தோம். எனினும் நாட்டில் இயல்­பு­நிலை, சுமு­க­நிலை மீண்டும் ஏற்­ப­டு­வதை விரும்­பாத சில சக்­திகள் இன­வாத, மத­வாத சக்­திகள் அவற்றை ஊக்­கு­வித்த அர­சியல் சக்­திகள் என்­பன இருந்­தன. அடுத்த கட்ட அர­சி­யலை இல­கு­வாக தம்­வ­சப்­ப­டுத்த இந்த நிலை­மையை ஒரு வாய்ப்­பாக சிலர் பயன்­ப­டுத்­தினர்.

இதற்­காக இன­வாத, மத­வாத சக்­திகள் செய்யத் துணிந்த கீழ்த்­த­ர­மான தாக்­கு­தல்­களை அவர்­க­ளு­டைய காடையர் கும்­பலை ஏவி மேற்­கொள்ள வழி­வ­குத்­தனர். அதே­நேரம் வெளியில் இருந்து அவற்றை கண்­டித்து பேசிக்­கொண்­டி­ருந்­தனர். இது ஒரு துர்ப்­பாக்­கி­ய­மான சூழ­லாகும். எனினும் நாட்டு மக்கள் அதி­க­ளவு அர­சியல் முதிர்ச்­சி­யுள்ள மக்கள். நாட்டின் ஜன­நா­ய­கமும் யார் நினைத்­தாலும் குழி­தோண்டிப் புதைக்க முடி­யா­த­தாகும். வடக்கில் தெற்கில் ஆயுதம் தாங்கி போரா­டிய குழுக்கள் இருந்­தன. அவற்றை ஒழுங்­கு­ப­டுத்தி செய்­வ­தற்­கான கொள்கைப் பின்­னணி இருந்­தது. இது எது­வுமே இல்­லாமல் ஒரு சிறிய கும்பல் வெளியில் உள்ள ஒரு சக்­தியின் கொந்­த­ராத்­துக்­கா­ரர்­க­ளாக செய்த வேலையை ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்தின் தலையில் போட்டு தேங்காய் உடைக்கும் வேலையை பார்க்கும் சக்­திகள் ஒரு­போதும் அதில் வெற்­றி­ய­டைய முடி­யாது.

இதில் தெளிவ­டை­ய­வேண்டும். பதற்­ற­ம­டைந்­துள்ள முஸ்லிம் சமூகம் தங்­க­ளுக்கு எதி­ரான ஒரு அச்ச சூழல் உரு­வாகி வரும்­போது தலை­மை­களின் ஒற்­றுமை மாத்­தி­ரமே ஒரு விமோ­ச­ன­மாகும். இந்தப் பார்வை வலுத்­துக்­கொண்டு வந்­தது. அத­னை நாம் அவ­தா­ன­மாக அவ­தா­னித்து வந்தோம். எதிலும் அவ­ச­ரப்­ப­டக்­கூ­டாது. இந்தப் பின்­ன­ணி­யி­லேயே கடந்த ஞாயிறு, திங்­கட்­கி­ழ­மை­களல் நாட்டின் நிலைமை குறித்து பார்த்தோம். பௌத்த மக்கள் மிகவும் மதிக்­கின்ற தலதா மாளிகை முன்­பாக நடந்த சாகும்­வ­ரை­யி­லான உண்­ணா­வி­ரதப் போராட்­டமும் எங்­க­ளுக்கு ஒரு வழியில் நல்­ல­சில படிப்­பி­னை­களைத் தந்­துள்­ளது. அந்த 48 மணி­நே­ரத்­திற்குள் எங்­க­ளுக்குள் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் இந்த தீர்­மா­னத்தை எடுத்தோம். நோன்பு மாதம் என்­பது இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு உச்­ச­கட்டப் பொறுமை, சகிப்­புத்­தன்­மையை போதிக்­கின்ற மாத­மாகும்.

Q:உங்கள் முடிவை பிர­தமர் எதிர்க்­க­வில்­லையா?

பதில்: பிர­த­மரை நாங்கள் திங்­கட்­கி­ழமை சந்­தித்து பேச்­சு­ந­டத்­தினோம். முஸ்லிம் எம்.பி.க்கள் அனை­வ­ருக்கும் தலை­மை­தாங்கி இந்த விவ­காரம் தொடர்­பாக பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யாடி எமது நிலைப்­பா­டுகள் தொடர்­பாக தெளிவு­ப­டுத்­தினோம். சக அமைச்­சர்­க­ளுடன் பிர­த­மரை அல­ரி­மா­ளி­கையில் சந்­தித்தோம். நாம் சந்­திப்­ப­தற்கு முன்­ப­தா­கவே அதற்­கான கார­ணத்தை அவ­ருக்கு கூறி­யி­ருந்தோம். அதனால் அமைச்­ச­ர­வையில் மிக முக்­கி­ய­மான உறுப்­பி­னர்­களை அந்த சந்­திப்புக்கு அழைத்­தி­ருந்தார். அப்­போது நான் பிர­த­ம­ருக்கு தெளிவான விளக்­கத்தை வழங்­கினேன். எமது முடிவைக் கேட்டு பிர­தமர் அதிர்ச்சி அடைந்தார். நீங்கள் செய்­வது மிக மோச­மான பக்­க­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்தும் எனவும் இதனை தவிர்த்­துக்­கொள்­ளு­மாறும் பிர­தமர் கோரினார். அங்­கி­ருந்த ஏனைய அமைச்­சர்­களும் இவ்­வா­றான முடிவை எடுக்­க­வேண்டாம் எனக் கோரி­னார்கள். முஸ்­லிம்­களின் பாது­காப்பு தொடர்­பாக உத்­த­ர­வாதம் வழங்க முடியும் எனக் கோரி­னார்கள். எனினும் அவர்­களை மீறி களத்தின் நிலை­வரம் மோச­மா­கிக்­கொண்டு வந்­தது.

அத்­துடன் தேரர்­க­ளினால் காலக்­கெ­டுவும் விதிக்­கப்­பட்டு வந்­தது. இது முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு அபாய அறி­விப்பை செய்­வ­தாக பார்க்­கப்­பட்­டது. அந்தப் பின்­ன­ணியில் மக்கள் மத்­தியில் உள்ள பீதிக்கு தீனி­போ­டு­கின்ற அடிப்­ப­டையில் நாட்டின் பல­ப­கு­தி­களில் கூட்டம் கூட்­ட­மாக குண்­டர்கள் கொண்­டு­வந்து இறக்­கப்­பட்டு வந்­தது. கடை­களை மூடு­மாறு சத்­த­மிட்டு வந்­தனர்.

Q: இது நடந்­தது எப்­போது?

பதில்: திங்­கட்­கி­ழமை காலை தொடக்கம் நண்­பகல் வரை இவை நடை­பெற்­றன. அவ­ச­ர­கால சட்டம் நடை­மு­றையில் இருக்­கும்­போது ஏன் இவர்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்று நாம் அர­சாங்­கத்தை கேட்­டி­ருந்தோம். இந்த சூழல் மிகப்­பெ­ரிய அச்­சத்தை ஏற்­ப­டுத்தும் நிலையைக் கொண்­டி­ருந்­தது. அதனால் நாங்கள் பொறுத்­துக்­கொண்­டி­ருக்க முடி­யாது. அதனால் நாங்கள் இரா­ஜி­னாமா செய்­வ­தாக கூறினோம். இதன் ஊடாக அர­சாங்­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்­து­வது எமது நோக்­க­மல்ல.

அர­சாங்­கத்­திற்கு வழங்கும் ஆத­ரவை விலக்­கிக்­கொள்­வதும் எமது நோக்­க­மல்ல. ஐ.தே.க.வின் முக்­கிய அமைச்­சர்­களும் எம்­முடன் இணைந்து இந்த முடிவை எடுத்­தார்கள்.

இது­போன்ற நட­வ­டிக்­கையின் ஊடாக மட்­டுமே பாரா­மு­க­மாக இருக்கும் சக்­தி­களின் கண்­களைத் திறக்க முடியும். அதனைத் தொடர்ந்து தயக்­கத்­துடன் இதற்கு இணங்­கி­னார்கள். எமது குழு­விற்­குள்ளும் சில மாற்­றுக்­க­ருத்­துக்கள் தலை­யெ­டுக்க ஆரம்­பித்­தன.

Q:நீங்கள் பத­விக்கு கொண்­டு­வந்த ஜனா­தி­ப­தி­யுடன் இந்த விடயம் குறித்து பேசி­னீர்­களா?

பதில்: ஜனா­தி­ப­தி­யுடன் நேரிலும் தொலை­பே­சி­யிலும் பல தட­வைகள் பேசி­யி­ருக்­கின்றோம்.

Q:இந்த விவ­காரம் குறித்து பேசி­னீர்­களா?

பதில்: இந்த விடயம் குறித்து ஜனா­தி­ப­தி­யுடன் பலரும் பல­வா­றாக பேசி­யி­ருந்தோம். நாங்கள் பத­விக்கு கொண்­டு­வந்த ஜனா­தி­பதி கல­கொட அத்தே ஞான­சார தேரரை இவ்­வா­றான சந்­தர்ப்­பத்தில் மன்­னிப்­ப­ளித்து விடு­வித்ததன் விளைவு மோச­மான நிலை­மையை உரு­வாக்கி வரு­கின்ற சூழலில் அவரும் கவ­லை­யு­டன்தான் இருந்தார். எங்­க­ளுக்கு எமது மக்­களின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த இந்தத் தீர்­மா­னத்தை தவிர வேறு தெரிவு இருக்­க­வில்லை. அந்த கட்­டத்தில் இது ஒரு நல்ல முடி­வா­கவே இருந்­தது. இதற்கு அப்­பாலும் பல விட­யங்­களை சாதிக்­கக்­கூ­டி­ய­தாக வல்­லமை பொருந்­தி­ய­தாக இந்த விடயம் காணப்­பட்­டது. இந்த ஒற்­று­மையின் பலம் நேர்­மை­யீ­ன­மாக பிர­யோ­கிக்­கப்­ப­ட­மாட்­டாது.

– நேர்காணல் – ரொபட் அன்டனி

Related posts