பாலியல் புகார் கொடுத்ததால் எரித்துக் கொல்லப்பட்ட மாணவி

பாலியில் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்த, 19 வயது மாணவி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக 16 பேர் மீது வங்கதேசத்தில் கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

புகார் அளித்த சில நாட்களுக்கு பின்னர், ஏப்ரல் 6 ஆம் திகதி அவர் படித்த இஸ்லாமிய பள்ளியின் கூரையில் 19 வயதான நஸ்ரத் ஜஹான் ரஃபியின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டது.

தலைமை ஆசிரியர் சிராஜ் உத் டௌலாவும் இந்த கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

தலைமை ஆசிரியருக்கு எதிரான இந்த புகாரை திரும்ப பெறுவதற்கு இந்த மாணவி மறுத்துவிட்டதால், சிறையில் இருந்து கொண்டே ரஃபியை கொலை செய்ய இந்த தலைமை ஆசிரியர் ஆணையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த கொலையை செய்வதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும், “இராணுவத் திட்டம்” போல இருந்ததாக பொலிஸார் விவரிக்கின்றனர்.

வங்கதேசத்தில் மக்கள் பெருங்கூட்டமாக கலந்துகொண்ட போராட்டங்களை தூண்டிய இந்த வழக்கு, இந்த நாட்டில் பாலியல் தாக்குதல் மற்றும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படுவோர் மீது பெருங்கவனத்தை கொண்டு வந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் தலைமையாசிரியர் சிராஜ் உத் டௌலா மீது பொலிஸில் ரஃபி புகார் அளித்தார். அதன் காரணமாக தலைமை ஆசிரியர் கைதானார்.

மார்ச் 27 அன்று அவரது அறைக்கு அழைத்து தலைமை ஆசிரியர் தம்மை முறையற்ற வகையில் தொட்டதாக அந்த மாணவி தமது புகாரில் கூறியிருந்தார்.

ஏப்ரல் 6 ஆம் திகதி பள்ளியில் இறுதித் தேர்வு எழுத சென்ற அவரை, முகத்தையும், உடலையும் மறைத்துகொள்ளும் புர்கா அணிந்த குழு ஒன்றால் பள்ளியின் கூரைக்கு இழுத்து செல்லப்பட்டு, தீ வைக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதனை தற்கொலை போல தோன்ற செய்ய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், 80 சதவீதம் எரிந்த நிலையில் இருந்த ரஃபி, ஏப்ரல் 10 ஆம் திகதி இறப்பதற்கு முன்னால் கடைசி வாக்குமூலம் அளித்தார் என்று தெரிவித்தனர்.

வங்கதேச தலைநகரான டாக்காவில் இருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்ற சிறிய நகரான ஃபெனியின் நீதிமன்றம் ஒன்றில், 16 பேர் மீது இன்று புதன்கிழமை முறையாக கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதராஸாவிலுள்ள மாணவர்கள் மற்றும் இந்த பள்ளியின் முக்கிய பொறுப்புகளில் இருந்த ஆளும் அவாமி லீக் கட்சியை சேர்ந்த இரண்டு உள்ளூர் அரசியல்வாதிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் அடங்குகின்றனர்.

இந்த சந்தேக நபர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்க வேண்டுமென விசாரணையாளர்கள் கோருகின்றனர்.

தானே இந்த கொலையை செய்ய ஆணையிட்டதாக நீதிமன்றத்தில் இந்த தலைமை ஆசிரியர் ஒப்புகொண்டுள்ளதாக பொலிஸ் கூறுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் 12 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். உள்ளூர் அரசியல்வாதிகள் இருவரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொள்ளவில்லை.

ரஃபி இறந்ததை அடுத்து இந்த கொலையோடு தொடர்புடைய அனைவரும் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டுமென வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்,

“குற்றவாளிகள் யாரும் சட்டத்தில் இருந்து தப்பிக்க முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.

Related posts