உண்மையை கண்டறிய ஒத்துழையுங்கள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே சுமத்திக்கொண்டிருக்காமல் உண்மை நிலையை கண்டறிய ஒத்துழைப்புகளை வழங்குமாறு பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் நேற்றுமுன்தினம் (27) இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது, ஒரு சமூகத்தின் மீதான பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்துகின்ற சில முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் ஒரு செய்தியை சொல்ல விரும்புகின்றேன். இந்த நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெரும ஆகியோர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தமது அமைச்சை திறம்பட செய்து வருகின்றார் என பல முறை கூறியுள்ளனர். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஒரு திறமையான அமைச்சர் என மட்டக்களப்பிலே இடம்பெற்ற கூட்டத்தில் ஜனாதிபதியும் பரிந்துரை செய்திருக்கின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, டிலான் பெரேரா மற்றும் சில தமிழ் எம்.பிக்கள் அமைச்சர் மீது பல விதமான குற்றச்சாட்டுகளை சுமத்திவருகின்றனர்.

அமைச்சர் ரிஷாட் மீதான நம்பிக்கை இல்லா பிரேரணையில் சுமத்தப்பட்டுள்ள பத்து குற்றச்சாட்டுகளுக்கும் அமைச்சர் ரிஷாட் மிக தெளிவான பதிலை வழங்கி இருக்கின்றார்.

எதிர்காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் ஆதரவு இரண்டு கட்சிகளுக்கும் தேவையானதுதான். முன்னைய அரசாங்கம் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்காக, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது வேண்டுமென்றே கொண்டுவரப்பட்டுள்ள இந்த நம்பிக்கை இல்லா பிரேரணை முறைப்படியாகவோ ஆதாரங்களுடனோ கொண்டுவரப்படவில்லை.

எனவே சபாநாயகர் மற்றும் பிரதமர் இந்த குற்றச்சாட்டுகளை முறைப்படி விசாரித்து அதில் தான் குற்றம் காணப்பட்டால் தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்து விடுவதாக அமைச்சர் ரிஷாட் மிக தெளிவாக கூறியுள்ளார்.

மிலேச்சத்தனமான கொடூரமான தாக்குதல் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரமன்றி முஸ்லிம் சமூகத்தினரான எங்களையும் உலுக்கி இருக்கின்றது.

இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கத்தோலிக்க உறுப்பினர்கள் அனைவரும் தமது இனத்தை சரியாக வழிநடாத்தி, தாங்களும் பொறுமை காத்து, மக்களையும் சாந்தப்படுத்தினர். எந்த ஒரு கிறிஸ்த்தவ பாராளுமன்ற உறுப்பினரும் முஸ்லிம் சமூகத்தையோ முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையோ இழிவுபடுத்தவில்லை.

முஸ்லிம்கள் மீதான கடந்த கால அட்டூழியங்களின் பின்னணியாக இருந்த நாமல் குமார, அமித் வீரசிங்க போன்றோர்கள் இப்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Related posts