இன்றைய முக்கிய இலங்கை செய்திகள் 27.05.2019

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஏ.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அமைச்சர் ரிஷாத் பதியூதின் தொடர்பாக முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்கான பொறுப்பு ஜனாதிபதிக்கு உண்டு என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

வெல்லம்பிட்டிய பகுதியில் நடைபெற்ற கம்பெரலிய திட்டத்தில் பங்குபற்றிய பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், குருணாகலில் கைது செய்யப்பட்ட வைத்தியர், அதிகளவு சொத்துக்களை சம்பாதித்த குற்றச்சாட்டிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

அறுவை சிகிச்சை தொடர்பாகவோ, தாய்மார்களுக்கு தவறான சிகிச்சை செய்தமைக்காகவோ அல்ல அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனால் குறித்த வைத்தியரை தூக்கிலிட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடம் இல்லை எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.

———–

வடக்கு மாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி விஜயகுனவர்த்தன தனது கடமைகளை இன்று (27) பொறுப்பேற்றுக்கொண்டார்.

யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் உள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அலுவலகத்தில் பொலிஸாரின் அணி வகுப்பு மரியாதையுடன் அவர் அழைத்து வரப்பட்டார்.

பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

வடக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றி வந்த ரொசாந்த் பெர்னாண்டோவுக்கு இடமாற்றம் கிடைக்கப் பெற்றதை அடுத்து தென் மாகாணத்தில் கடமையாற்றி வந்த விஜய குணவர்த்தன வடக்கு மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

———–

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்க முடியாதளவுக்குப் புதிய முறைமையொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அரபுநாடுகள் சிலவற்றில் ஐ.எஸ். ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. அடிப்படைவாத செயற்பாடுகளை மேற்கொண்டு அவர்களுக்கு ஆதரவை ஏற்படுத்தினால் நாட்டில் பாதுகாப்புப் பிரச்சினை ஏற்பட்டு விடும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்களை சந்தித்தபோதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார். இக்கலந்துரையாடலில் வணக்கத்துக்குரிய தம்பர அமில தேரர், கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கலாநிதி பாக்கியஜோதி சரவணமுத்து, பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர, பேராசிரியர் எச்.டபிள்யு. சிறில், கலாநிதி ஜெஹான் பெரேரா, சமன் ரத்னப்பிரிய, சுனில் டி சில்வா,

பிலிப் திசாநாயக்க, ராஜா உஸ்வெடிகெய்யாவ, சட்டத்தரணி நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பிலும், அந்த தாக்குதலை தவிர்ப்பதற்கு தவறியமை தொடர்பில் அரசியல் மற்றும் நிறுவனங்களின் பொறுப்புக்கள் தொடர்பில் சிவில் சமூக மற்றும் தொழிற்சங்க ஒன்றிணைப்பின் உறுப்பினர்கள் பிரதமரிடம் காரணங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலின் பின்னர் அரசியல்வாதிகளான எம்மீது மக்களுக்கு நம்பிக்கை இழக்கப்பட்டுவிட்டது. இதனை மீண்டும் கட்டியெழுப்புவதாயின் நாம் தற்பொழுது முன்னெடுத்திருக்கும் முறையின் ஊடாக ஏற்படுத்த முடியாது. இதற்காக விசேட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதம் தலைதூக்காமிலிருப்பதற்கு புதிய முறையொன்றை ஏற்படுத்த எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரபுநாடுகள் சிலவற்றில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு பொது மக்களின் ஆதரவு உள்ளது. எனினும் இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எவ்வித ஆதரவும் இல்லை. இவ்வாறான நிலையில் தேவையற்ற முறையில் இனவாதத்தையும், மதவாதத்தையும் ஏற்படுத்தச் சென்று அவர்களுக்கான ஆதரவை ஏற்படுத்திவிடக்கூடாது. அவ்வாறு ஆதரவை ஏற்படுத்துவோமாயின் அது நாட்டின் பாதுகாப்புக்குப் பிரச்சினையாக அமைந்துவிடும்.

குண்டுத் தாக்குதல்கள் குறித்து விசாரிப்பதற்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை அமைத்துள்ளோம். அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பிலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவேதான் இரண்டு வாரங்களுக்குள் தெரிவுக்குழுவின் இடைக்கால அறிக்கையை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளேன். உண்மைகளை நாட்டு மக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தெரிவுக்குழுவின் சகல கலந்துரையாடல்கள் மற்றும் அதன் நடவடிக்கைகளை ஊடகங்களின் மூலம் நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்கும் அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுள்ளோம் என்றார்.

மதரஸாக்களை நிர்வகிப்பது பற்றிய சட்டவரைபு தயாரிக்கப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் சமூகத்தினர் தாமாக முன்வந்து இவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் செயற்படுகின்றனர் என்றார்.

———–

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ள போதிலும் அது தொடர்பில் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப்பெறவில்லை என்று இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார தெரிவித்தார்.

தற்கொலை தாக்குதல் நடைபெற்றது முதல் இலங்கையின் கடல்வழி பாதுகாப்பு திட்டமிட்ட அடிப்படையில் மேலும் பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு மற்றும் ரோந்து நடவடிக்கைகள் மேலும் அதிகரிக்கப்பட்டே உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, நாடு முழுவதிலும் உள்ள அனைத்து கடற்படைத் தளங்களும் இது தொடர்பில் அறியப்படுத்தப்பட்டுள்ளதுடன் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் விளக்கமளிக்கையில் :-

இலங்கையிலிருந்து இந்தியாவின் லக்ஷதீப் தீவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் 15பேர் தப்பிச் சென்றுள்ளனர் என்று இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டுள்ளதாக ஊடகங்கள் ஊடாகவே நாங்கள் அறிந்தோம். எனினும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் மூலம் இலங்கை கடற்படையினருக்கு எதுவித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் கிடைக்கப் பெறவில்லை. என்றாலும் அந்த தகவலை நாம் தட்டிக்களிக்காமல் உறுதிப்படுத்தப்படாத உத்தியோகபற்றற்ற தகவலாக கருத்திற் கொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

நாடு முழுவதிலும் உள்ள கடற்படை தளங்களுக்கு இது தொடர்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதுடன் கடல் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கும் தெரியப்படுத்தியுள்ளோம் என்றார்.மேற்படி தகவல் தொடர்பில் ஏதாவது தெரிய வரும்பட்சத்தில் அது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதுடன் நாடு முழுவதிலும் கடற்படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் இலங்கை கடற்படையின் பேச்சாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபண்டார மேலும் தெரிவித்தார்.

————-

நாட்டின் தேசிய காப்புறுதி நிதியம், நாட்டிற்கு வருகை தரும் உல்லாசப் பயணிகளுக்கு புதிய காப்புறுதித் திட்டமொன்றை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஒரு சுற்றுலாப் பயணிக்கு 100 மில்லியன் ரூபாவை காப்புறுதியாக வழங்க தேசிய காப்புறுதி நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி சனத் ஜி டி சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும், இத்திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts