‘கிங் மேக்கர்’ ஆசை நிராசையானது

தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் ‘கிங் மேக்கர்’களாக வர ஆசைப்பட்டு வலம் வந்த தலைவர்களின் ஆசை நிராசையாகிப் போனது.

லோக்சபா தேர்தலில், எந்த ஒரு கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காது. எனவே, தாங்கள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் தலைவர்கள் என்று வலம் வந்த மாநில கட்சி தலைவர்களின் ஆசை நிறைவேறவில்லை. பா.ஜ., தனியாகவோ 300 தொகுதிகளுக்கு மேலும், தேசிய ஜனநாயக கூட்டணி 350 எம்.பி.,சீட்களும் பெற்றதால், ‘கிங் மேக்கர்’களாக விரும்பிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் ஆகியோருக்கு எந்தப் பங்கும் இல்லாமல் போனது.

தேர்தல் முடிவுகள் வரும் முன்னர் சந்திரபாபு நாயுடு, ராகுல், மாயாவதி, அகிலேஷ் யாதவ், மம்தா பானர்ஜி, சரத்பவார், சீத்தாராம் யெச்சூரி, டி.ராஜா, அரவிந்த் கெஜ்ரிவால் என்று அவர் நிறைய பேரை சந்தித்து ஓரணியில் திரட்ட தீவிர முயற்சி செய்தார். காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்து விட வேண்டும் என்பது அவரது இலக்காக இருந்தது.

அதுபோல தெலுங்கானா முதல்-மந்திரி சந்திர சேகரராவும் மற்றொரு பக்கத்தில் காய்களை நகர்த்தினார். மம்தா பானர்ஜி, பிரனாயி விஜயன், நவீன் பட்நாயக், மு.க.ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து பேசினார்.

இதேபோல, தமிழகத்தில் தி.மு.க., கூட்டணியே 38 க்கு 37 தொகுதிகளை வென்றபோதும் எந்தப் பயனுமில்லை. 3-வது அணி, 4வது அணி ஆசைகள் கைகூடவில்லை.

Related posts