அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை

மக்கள் விடுதலை முன்னணியால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சற்றுமுன்னர் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் அலுவலகம் இதனைக் கூறியுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இழந்துள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

————-

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேருக்கு எதிரான வழக்கு கொழும்பு விஷேட நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது வழக்கை எதிர்வரும் 23ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்போது கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ம் திகதி முதல் ஜூன் மாதம் 02ம் திகதி வரை வைத்திய தேவைக்காக வௌிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு அவரது சட்டத்தரணி அலி சப்ரி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும் அதற்கு அரச தரப்பு சட்டத்தரணி எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில், அது தொடர்பில் வரும் 23ம் திகதி ஆராய்ந்து பார்ப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் அன்றைய தினம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கும் திகதி தொடர்பான தீர்மானத்தை அறிவிப்பதாகவும் நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 07 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு சட்டமா அதிபர் திணைக்களத்தால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

———-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதிலும் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது உருவப்படங்கள் மற்றும் உருவச்சிலைக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 21 ஆம் திகதி தமிழகம் முழுவதும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடக்கிறது. இந்த அமைதி ஊர்வலத்தின் இறுதியில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்’ என கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் இன்று காலை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா, ராபர்ட் வதேரா, முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங், முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
——–

Related posts