இலங்கை செய்திகளில் முதன்மையானவை.

72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரான மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த நபர் கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்டார்.

குறித்த நபர் தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக இதன்போது பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரிடமிருந்து தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதால் அது தொடர்பில் மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

அதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 07ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்..

———–

இலங்கைக்கு விஜயம் செய்யவிருந்த பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தை இரத்து செய்துள்ளார்.

பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சர் மெஹமூத் குரேசி நாளை (03) இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் மற்றும் தற்போதை நிலமையினை கருத்திற் கொண்டு அவர் தனது விஜயத்தை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் பாகிஸ்தானின் வௌிவிவகார அமைச்சரின் இலங்கை விஜயம் திட்டமிடப்பட்டிருந்தது.

————-

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களின்போது, சீனாவைச் சேர்ந்த 4 விஞ்ஞானிகள் உயிரிழந்துள்ளதாக, கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.

26, 30, 35, 38 வயதுடைய கடல் ஆராய்ச்சி விஞ்ஞானிகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான கூட்டு விஞ்ஞான ஒத்துழைப்பு மாநாட்;டில் பங்கேற்கும் நோக்கில் கொழும்பிலுள்ள கிங்ஸ்பெரி ஹோட்டலுக்கு 18 ஆம் 19 ஆம் திகதிகளில் இவர்கள் வந்திருந்தனர். இந்நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில், இவர்கள் நால்வரும் சம்பவ இடத்தில் உயிரிழந்ததாகவும், கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் தெரிவித்தது.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்றுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு கண்டனம் வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள சீனத் தூதரகம், குண்டு வெடிப்பில் உயிரிழந்த 4 விஞ்ஞானிகளுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி 3 தேவாலயங்களிலும் 3 ஹோட்டல்களிலும் ஏனைய இடங்களான தெஹிவளை மற்றும் தெமட்டகொடையிலும் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்களில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 42 வெளிநாட்டுப் பிரஜைகள் அடங்குவதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

———-

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் குண்டு தாக்குதலில் உயிரிழந்த குண்டுதாரிகளின் 10 பேரின் மரணம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் நீதிமன்ற பரிசோதனைகள் என்பன நிறைவடைந்துள்ள நிலையில் அவர்களது சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

ரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம் பெற்ற ஊடகசந்திப்பின் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில் ,

கல்முனை – சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாத குழுவுக்கும் இடையில் இடம் பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மற்றும் தற்கொலை குண்டு தாக்குதலின் போது மீட்கப்பட்ட 10 பயங்கரவாதிகளினது சடலங்கள விசாரணையின் பின் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , இந்த சம்பவத்தில் 6 சிறுவர்களும் உயிரிழந்துள்ளனர். ஆகவே அவர்களது சடலங்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், நாடுபூராகவும் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இத்தகைய அவசர கால நிலையில் முப்படையினருக்கும் சந்தேகத்திற்கு இடமான பகுதியை பரிசோதனை செய்வதற்கும் , சந்தேக நபர்களை கைது செய்வதற்குமான பூரண அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய தற்கொலை குண்டுதாரியான மொஹமட் சஹ்ரான் என்பவரின் சகோதரியை மட்டக்களப்பு பொலிசார் நேற்று கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரான மொஹமது காசீம் மததியா என்பவரிடமிருந்து தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானினால் வழங்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 20 இலட்சம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டிருந்தது.

மேலும்,நாடுபூராவும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் நல்லிணக்கத்தையும்,நீதியையும் சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆகவே,நல்லிணக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் புகைப்படங்கள் வீடியோ கானொலிகள் என்பனவற்றை பதிவேற்றம் செய்வோர் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது . கூடிய விரைவில் இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்ப்படும் எனவும் தெரிவித்தார்.

————-

இலங்கையிலிருந்து ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பை முற்றாக அழிக்க நிலையான திட்டமிடல் அவசியமாகும் வெறும் சோதனை நடவடிக்கைகள் மூலம் முடக்க முடியாது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தொடர் குண்டு வெடிப்புக்களை நடத்தி நூற்றுக்கணக்கான உயிர்களை பலியெடுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினை வெறும் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் மாத்திரம் அழித்துவிட முடியாது.

அதற்கு ஒரு முறையான திட்டமிடலுடன் செயற்பட வேண்டும். இரு வருடங்களானாலும் இதற்கான தீர்வினைப் பெற முடியாமல் போய்விடும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்தார்.

நேற்று அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீட மஹா நாயக்க தேரர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர்கள் பலர் சட்டம் ஒழுங்கு அமைச்சைப் பொறுப்பேட்குமாறு கோருகின்றனர்.எனினும் அதனை வழங்குவதில் விருப்பமில்லாததைப் போல் செயற்படுகின்றனர் என்று வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரருடனான சந்திப்பின் போது சரத் பொன்சேக்க தெரிவித்தார்.

தொடர்ந்து மல்வத்து பீட அநுநாயக்க ஹிம்புல் கும்புரே விமல் தர்ம தேரர், உங்களுடைய காலத்தில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் என்ன நடவடிக்கைகளை முன்னெடுத்திருப்பீர்கள் என்று வினவியதற்கு பதிலளித்த அவர், முதலாவதாக பொது மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.

இதன் போது இராணுவம்,புலனாய்வுப் பிரிவு மற்றும் பொலிஸ் உள்ளிட்ட பாதுகாப்பு துறையினர் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட வேண்டும்.

30 வருட கால யுத்தம் இடம்பெற்ற போது அதனை நிறைவடையச் செய்வதற்கு திட்டமிடலொன்று காணப்பட்டது.

அதன்படியே நாம் செயற்பட்டோம்.அதை விடுத்து இவ்வாறு எந்தவொரு திட்டமிடலுமின்றி எல்லா பிரதேசங்களிலும் சோதனை செய்தால் மாத்திரம் போது. திட்டமிடலொன்று இல்லாமல் இரண்டு மாதம் அல்ல, இரண்டு வருடங்கள் கடந்தாலும் இதனைச் செய்து முடிக்க முடியாது என்றார்.

கோத்தாபய ராஜபக்ஷ இதன் பின்னணியில் இருப்பதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் வினவியதற்கு பதிலளித்த அவர், ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது பாரியளவிலான சர்வதேச ரீதியிலான ஒரு பயங்கரவாத அமைப்பாகும்.

எனவே இதன் பின்னணியில் கோத்தாபய இருப்பார் என்று நான் எண்ணவில்லை.

காரணம் இந்த அமைப்பை வழிநடத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல என அவர் இதன்போது தெரிவித்தார்.

Related posts