இராணுவ பாதுகாப்பு செயலர்களை இராஜினாமா செய்ய மைத்திரி உத்தரவு

இலங்கை ராணுவ செயலர், காவல்துறை தலைவர் ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் எட்டு இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பில் நேற்று வரை 310 பேர் உயரிழந்திருந்த நிலையில், தற்போது பல எண்ணிக்கை 359ஆக அதிகரித்துள்ளது மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேவாலயங்கள், சொகுசு உணவகங்களில் நடந்த இந்த தாக்குதலில் 45 குழந்தைகள் உட்பட பல வெளிநாட்டினரும் உயிரிழந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இலங்கையில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் என்னும் இயக்கம் காரணம் என இலங்கை அரசு அறிவித்தது. ஆனால் ஐஎஸ் தீவிரவாத இயக்கம் இந்த குண்டு வெடிப்புக்கு பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளது. வெளிநாடு சென்று கல்வி பயின்ற இளைஞர்களும் தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர் குண்டு வெடிப்பால் இலங்கையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாகனங்கள் தனியான நின்றால் உடனடியாக அவை சோதனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று இரவு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் ஆங்காங்கே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு அவை செயலிழக்கப்பட்டு வருகிறது.

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என இந்தியா மற்றும் அமெரிக்கா தெரிவித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காததே குண்டு வெடிப்பிற்கு காரணம் என கூறப்பட்டது. குறிப்பாக தேசிய புலனாய்வு பிரிவினரும் தகவல் அளித்திருந்தனர். ஆனால் உளவுத்துறை அளித்த தகவலின் பேரில் உரிய முன்னச்சரிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து இலங்கை ராணுவ செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ, காவல்துறை தலைவர் பூஜீத் ஜயசுந்தர ஆகியோர் மீது இலங்கை எம்.பி விஜயதாச ராஜபக்சே ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இருவரையும் ராஜினாமா செய்ய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். மேலும் இலங்கையில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல் தொடரக்கூடும் என விமானப்படை புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts