வல்வை மகளிர் மகாவித்தியாலயத்திற்கு ஆறு கணினிகள் அன்பளிப்பு : அவுஸ்திரேலியா

வல்வை மகளிர் மகாவித்தியாலயம் இணைய கட்டமைவு கொண்ட நவீன வகுப்பறை ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததே.

புலம் பெயர்ந்து உலகின் பல பாகங்களிலும் வாழும் வல்வை மக்களின் ஆதரவுடன் இந்த வகுப்பறையை அமைக்கலாம் என்று சென்ற ஆண்டு பெற்றோர்கள் முன்னிலையில் முடிவெடுக்கப்பட்டது.

அதற்கமைவாக அவுஸ்திரேலியா வல்வை நலன்புரிச் சங்கம் கூடுதல் கவனமெடுத்து தனது உதவிகளை வழங்கியுள்ளது. முதலில் இரண்டு இலட்சம் ரூபா பணமும் இப்போது அவுஸ்திரேலியாவில் வாழும் திரு. ரவீந்திரன் அவர்கள் மகளிருக்கு ஆறு ஆப்பிள் கணினிகளை வழங்கியிருக்கிறார்.

இதற்கான வைபவம் மகளிர் மகாவித்தியாலயத்தில் இடம் பெற்றது. திரு. கா. பிறேமதாஸ், ரவிச்சந்திரன் அவுஸ்திரேலியா ஆகியோர் அதிபரிடம் இவைகளை கையளித்தார்கள்.

அவுஸ்திரேலியா என்.எஸ்.டபிள்யூ பல்கலைக்கழகம் இக்கணினிகளை அன்பளிப்பாக வழங்கியது. திரு. ரவீந்திரன் அங்கு பணியாற்றுவதால் இக்கணினிகளை வல்வை மகளிருக்கு வழங்க ஏற்பாடு செய்தமை மிகவும் ஆறுதல் தரும் ஒரு நல்ல காரியமாகும்.

இவை பாவிக்கப்பட்டவை என்றாலும் இலங்கை செயற்பாடுகளுக்கு கடுகளவும் வீரியம் குன்றாத கணினிகளாகும், நிகழ்ச்சித்திட்டங்கள் யாவும் தரவேற்றம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது இன்னொரு சிறப்பம்சமாகும்.

நான்கு ஆப்பிள் கணினிகளும், இரண்டு ஆப்பிள் மடி கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதய நிலையில் சாதாரண பி.சி கணினிகளில் இருந்து ஆப்பிள் கணினிகள் முற்றாக வேறுபட்ட நிகழ்ச்சித்திட்ட செயற்பாடுகள் கொண்டவை.

காணொளி வடிவமைப்பு நவீன கல்வித்திட்டத்தில் மிகமிக முக்கியம் பெறுகிறது. அதற்கு அமைவாக ஆப்பிள் கணினியை தேர்வு செய்தமை பாராட்டப்பட வேண்டியதாகும்.

சர்வதேச தரத்தில் சமூக வலைத்தள பாவனை, காணொளிகள் தரவேற்றம், படத்தொகுப்பு, ஒலியமைப்பு, கிராபிக்ஸ் போன்ற கனதியான பணிகளை மேற்கொள்ளவும், போட்டோ சொப் தொழில் நுட்பங்களை இலாவகமாக கற்பதற்கும், அச்சுக்கலையில் அபார சாதனைகள் புரிவதற்கும் ஆப்பிள் கணினிகள் வேண்டும்.

கையில் ஓர் ஆப்பிள் கணினி இருந்துவிட்டால் போதும் உலகத்தையே சுற்றி வந்துவிடலாம் என்பார்கள்.

இன்றைய சர்வதேச கல்வித்தரத்திற்கு அமைவாக மாணவி;களை முன்னேற்றுவதும், அந்தத் துறையில் முன்னேற சரியான வழிகாட்டுவதும் புலம் பெயர் தமிழர்தம் தலையாய கடமையாகும்.

மேலும் வல்வை மகளிர் மகாவித்தியாலயம் இதற்கான உதவியை அனைத்து நாடுகளிலும் உள்ள வல்வையர்களிடம் நாடி நிற்கிறது. இதன் பொருட்டு கடிதங்கள் சென்ற ஆண்டே அனுப்பப்பட்டுவிட்டன.

முதற்கட்டமாக டென்மார்க் நாடு 2.60.000 ரூபாவை வழங்கியது, பின் அவுஸ்திரேலியா இரண்டு இலட்சம் வழங்கியது, ஜேர்மனி ஓர் இலட்சம் வழங்கியது.

மற்றைய நாடுகளும் பெரு மனது கொண்டு ஒரு கரம் கொடுத்தால் வரும் மே மாதம் நவீன வகுப்பறையை அமைத்துவிடலாம் என்பது பாடசாலை பெற்றோரின் விருப்பமாகும்.

வல்வை நலன்புரிச்சங்கங்கள் பரந்து பட்டு உதவிகள் செய்து வருவது தெரிந்ததே. அந்த வகையில் இப்பணியையும் இதற்கு மேலும் தாமதியாது மற்றய நாடுகளின் சங்கங்களும் முன்னெடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வல்வையில் அவசியமான ஒரு பணியை தேர்வு செய்து, அதற்காக எல்லா நாடுகளும் சிறிய தொகையை வழங்கி ஒரு கருமத்தை நிறைவேற்றும் புதுவகை திட்டமாக இந்த முயற்சி இருக்கிறது.

வல்வை மகளிர் மகாவித்தியாலயம் சர்வதேச கற்கைகளை கூகுள், யுருப் வழி பெற்று மேம்பட இப்போது மேலும் ஒரு படி புதிய கதவுகள் திறக்கின்றன.

உதவிய அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.

கி.செல்லத்துரை ( டென்மார்க் )
மகளிர் மகாவித்தியாலய முன்னாள் ஆசிரியர்.

Related posts