றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை எழுத்து வடிவத்தில்..

றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கை அதிபரை வீழ்த்துமா..?

2016 நவம்பர் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஸ்யாவின் தொடர்பு குறித்த றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தெரிந்தது. முதலில் நான்கு பக்க ரெய்லர் விட்ட நீதியமைச்சர் வில்லியம் பார் இப்போது 448 பக்கங்கள் கொண்ட அடுத்த ரெய்லரை வெளியிட்டுள்ளர். இந்த அறிக்கை அமெரிக்க அரசியல் களத்திலும் மக்கள் மன்றத்திலும் ஊடகங்களிலும் இப்போது புயலாக வீச ஆரம்பித்துள்ளது.

நீதி அமைச்சுர் வில்லியம் பார் வெளியிட்ட அறிக்கையானது றொபேர்ட் மூலர் விசாரணை கமிஷனின் முழுமையான அறிக்கையல்ல. அதிபரை காப்பாற்ற வசதியான வகையில் சென்சார் செய்யப்பட்ட ஓர் அறிக்கை மட்டுமே.

இந்த அறிக்கையில் உள்ள அமெரிக்க அதிபருக்கு வாய்ப்பான பக்கங்கள் எவை ?

ஒன்று அமெரிக்க அதிபர், றீஸ்ராட் எனப்படும் விசாரணையை சந்திக்க வேண்டியதில்லை. பதவியில் இருந்து விலகி, சந்திக்கவேண்டிய அதி உயர் பீடத்தை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமே இது. இதனுடைய வழக்கை இனி அவர் சந்திக்க வேண்டியதில்லை, தப்பிவிட்டார்.

அதாவது முன்னாள் பிரேசிலின் அதிபர் டீல்மா ரூசெப் மீது கொண்டுவரப்பட்ட விசாரணை போன்ற ஒரு விசாரணையை ட்ரம்ப் மீதும் சிபாரிசு செய்ய போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி உள்ளது.

இந்த மதப்பீடு அதிபரின் பதவி நாற்காலியை உடனடியாக சரித்து வீழ்த்தாது அவருக்கு பாதுகாப்பை வழங்கியுள்ளது. இதனால்தான் கேம் இஸ் ஓவர் என்று அமெரிக்க அதிபர் தனது தரப்பில் எழுதியிருக்கின்றார.;

மேலும் ஒரு படி பாய்ந்து, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னதாக இந்த நாள் தான் வெள்ளை மாளிகையின் வெற்றித் திருநாள் என்று வெள்ளை மாளிகை பெண் தொடர்பாளர் கெல்யாணி கொன்வே கூறியிருக்கிறார்.

இந்த விசாரணையில் சட்டவாட்சியின் முக்கிய மூன்று மூலக்கூறுகளான சட்டம், நீதி, நிர்வாகம் என்பவற்றில் சட்டமியற்றும் அரசியல் பிரிவும், வழக்காக விசாரித்து தீர்ப்பு வழங்கும் நீதி பிரிவும் தான் முக்கியம் பெற்றிருந்தன. ஆனால் இப்போதோ நீதிப் பிரிவு செயலிழந்துவிட்டது. ஏனென்றால் அதிபருக்கு எதிரான நீதி விசாரணை கிடையாது.

ஆனால் அரசியல் பிரிவு தோற்றுவிடவில்லை அது உறங்காது. அரசியல் களத்தில் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிரான பிரச்சாரங்கள் இனி வலுக்கும். எதிர்வரும் 2020 தேர்தலில் அதிபர் வெற்றிக்கு துணை புரியும் என்று கருதப்பட்ட இந்த அறிக்கையானது இப்போது அவருடைய தோல்விக்கே வழிகாட்டும் என்றே கருதப்படுகிறது.

பிரதான எதிர்க்கட்சியான டெமக்கிரட் கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவர் நான்சி பிலேசி அம்மையார் நிதி அமைச்சரின் அறிக்கையை ஏற்க முடியாது என்று கூறி, இதற்கு எதிரான தமது அரசியல் போராட்டம் தொடரும் என்று பதிவிட்டுள்ளார்.

” கேம் இஸ் ஓவர் ” ஆட்டம் முடிந்தது என்று டொனால்ட் ரம்ப் ரிவிற்றரில் எழுதினாலும், ஆட்டத்தில் தனக்கே வெற்றி என்று அவரால் எழுத முடியாமல் போய்விட்டது கவனிக்கத்தக்கது.

ஆட்டம் ஓவர் என்றால் அதில் மூன்று நிலைகள் இருக்கின்றன.. ஒன்று வெற்றி, இரண்டு தோல்வி, மூன்று சமநிலை இதில் எது நடந்திருக்கிறது என்பதை கூறாமல் கேம் இஸ் ஓவர் என்று கூறியிருக்கிறார். இதற்குக் காரணம் அந்த அறிக்கையில் அவருக்கு எதிரான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன.

ஆதாரங்கள் எவை..?

அதிபருக்கு எதிராக 14 குற்றங்களை அறிக்கை சுட்டிக்காட்டியிருக்கிறது, ஆனால் இப்போது வெறும் இரண்டு குற்றங்கள் மட்டுமே அம்பலப்படுத்தப்பட்டுள்ளன, மற்றவை மறைக்கப்பட்டுள்ளன.

அமெரிக்க அதிபரின் நிதியமைச்சரின் கையில் அதிகாரம் இருப்பதனால் மறைக்கப்பட்டுள்ளது. அதை வெளிக்கொண்டு வரும் பலம் எதிர்க்கட்சிகளிடம் இல்லை. காரணம் காங்கிரசில் அவர்களுக்கு பெரும்பான்மை இல்லை.

இதுதான் இதுவரை இதற்கான வியாக்கியானம்..

இந்த அறிக்கையின் 370 வது பக்கத்தில் ஒரு பந்தி வருகிறது, அது அதிபரின் மீது நடவடிக்கை எடுக்க போதிய ஆதாரம் இருக்கிறதென கோடி காட்டுகிறது.

வெள்ளை மாளிகையின் வக்கீலான டொன் மக்கொன்னிடம் தொலைபேசி வழியாக பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் றொபேட் மூலர் விசாரணை கமிஷனை கலைத்துவிடும்படி கூறியிருக்கிறார். ” மூலர் விசாரணையையும் நிறுத்தி, அவரையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் அதற்கான உத்தரவை பிறப்பிக்கும்படி” உதவி நீதி அமைச்சருக்கு கூறும்படியும் கேட்டிருக்கின்றார்.

ஆக குற்றமற்ற ஒருவராக இருந்தால் விசாரணை கமிஷனை அழிக்கவும் நிறுத்தவும் அவர் ஏன் அவசரப்பட்டார்? மேலும் விசாரணை கமிஷனை கெட்ட வார்த்தைகளால் திட்டியிருக்கிறார், ஏன்..?

மொத்தம் பதினொரு குற்றச்சாட்டுக்கள் அதிபர் விசாரணை கமிஷனை தனது அதிகாரத்தை பயன்படுத்தி, செயலிழக்கச் செய்வதற்காக எடுத்த முயற்சிகளை அடையாளம் காட்டுகின்றன.

அதில் முக்கியமானது குற்றவாளி பிடிபட வரும் தருணத்தில் ஒன்று சட்டென பதவி விலகுவது, இல்லை விலக்கப்படுவதும் வழமையாக நடந்துள்ளது.

உதாரணம் எப்.பி.ஐ போலீஸ் பிரிவு கமிஷனர் ஜேம்ஸ் கொமி நடத்திய விசாரணையானது அமெரிக்க அதிபரின் பாதுகாப்பு ஆலோசகர் மிச்சேல் புளுய்னின் குரல்வளையை பிடிக்க நெருங்கிவிட்டது. பிடித்திருந்தால் ஒரு வேளை அதிபரும் கூடவே மாட்டியிருக்கலாம்.

அத்தருணம் விழித்துக் கொண்ட அதிபர் “கேடுகெட்ட கருப்பு ஆடு..!” என்று கூறி எப்.பி.ஐ நிர்வாகியாகிய ஜேம்ஸ் கொமியை பதவி விலகினார். இது அந்த 11 உதாரணங்களில் ஒன்றாகும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா உள்நுழைய முயன்றது உண்மை. டொனால்ட் ரம்பை வெற்றி தடத்தில் திருப்ப முயன்றதும் உண்மை. ஆனால்; அதை உறுதியாக நிறுவுவதற்கு ஆதாரங்கள் போதியத இல்லை. இது றொபேட் மூலர் கருத்து.

22 மாத விசாரணைக்கு இதுவா முடிவு..?

இப்படி விசாரணையை அவர் முடிக்க என்ன காரணம்..?

இந்த விசாரணையின் அம்பு அர்ச்சுணனாகிய அதிபர் மீது பாயாமல் இருக்க றொபேட் மூலர் என்கின்ற ஏகலைவனின் பெருவிரலை வெட்டிய துரோணரை இதுவரை யாருமே அம்பலத்திற்கு கொண்டு வரவில்லை.

இந்த அறிக்கையில் அமெரிக்க அதிபர் தேர்வுக்கான 2016 நவம்பர் தேர்தலை திசை திருப்பி, மக்களினுடைய வாக்குப்பலத்தை மடைமாற்றி, வெல்ல முடியாத ஒருவரை.. தானே தோற்று விடுவேன் என்று நிலைகுலைந்து போயிருந்த ஒருவரை.. ஒரே இரவில் வெற்றியாளராக்கிய அரும் பெரும் செயலை செய்தவர்கள் யார்..?

இதில் 26 ரசிகர்கள் 3 ரஸ்ய நிறுவனங்கள் 6 அமெரிக்க அதிபரின் ஆலோசகர்கள் என்று பெருந்தொகையானவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். ஆனால் அதிபர் மட்டும் தவிர்க்கப்பட்டுள்ளார். இதுதான் டெமக்கிரட் கட்சிக்குள்ள கோபமும் கேள்வியுமாகும்.

இவ்வளவு சாட்சியங்கள் இருந்தும் 2400 க்கும் மேற்பட்ட ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டும் டொனால்ட் ட்ரம்ப் மட்டும் விடுவிக்கப்பட்டது எப்படி? இதுதான் கேள்வி.

இனி இவை பற்றிய இரண்டு சர்வதேச விவகார ஆய்வாளர்களின் மதிப்பீடுகளை பார்க்கலாம். ஒருவர் டென்மார்க் தெற்கு பல்கலைக்கழக அமெரிக்க விவகார பேராசிரியர் நீல்ஸ் பியார போவுல்சன். இன்னொருவர் ராஸ்முஸ் சின்டிங் சுனகோட் இவர் ஜோர்ஜ் ரவுண் பல்கலைக்கழக பேராசிரியர்.

இவர்கள் இருவருமே இந்த அறிக்கையை கறுப்பு வெள்ளையாக பார்த்து வெற்றி அல்லது தோல்வி என்று பூவா தலையா என்ற முடிவுக்கு வர முடியாது என்கிறார்கள். இது அதிபருக்கு மகிழ்ச்சி தரும் அறிக்கை அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.

காரணம் அதிபருக்கு எதிராக வழக்கு தொடர போதிய ஆதாரங்கள் இதில் உள்ளன. ஆனால் அவற்றை கொய்தெடுத்து மாலையாக கட்டாமல் றொபேட் மூலர் வேண்டுமென்றே விட்டுள்ளார். அவர் தன் முடிவுரையை சரியாக எழுத முடியவில்லை.

ஆனால் அவர் வழங்கிய அறிக்கையானது அதிபர் கழுத்தில் மாலை போட்டு பலிக்கடாவாக இழுத்துச் செல்லக்கூடிய பலம் கொண்டதே. அதிபரை பலிக்கடாவாக்க வேண்டிய வேள்வி மாலை ஒன்றை கட்டத் தேவையான பூக்களை பறித்து போட்டு விட்டு, இந்தப் பூக்களை எல்லாம் தொகுத்தால் மாலையாகிவிடும் என்று சொல்லாமல் சொல்லி விடை பெற்றுள்ளார் றொபேர்ட் மூலர்.

எதிர் காலத்தில் அமெரிக்க அதிபருக்கு எதிராக வழக்குத் தொடர போதிய காரணங்கள் இல்லாத உயிரற்ற எலும்புக் கூடல்ல இந்த அறிக்கை.

அமெரிக்க நீதி அமைச்சரிடம் கொடுத்து, வேவு பார்த்துள்ளார். அமெரிக்க நீதியமைச்சர் அமெரிக்க மக்களுக்கான நீதியமைச்சரா இல்லை அமெரிக்க அதிபருக்கான நீதியமைச்சரா என்று மக்கள் சிந்திக்க இந்த சம்பவம் வழிகாட்டியுள்ளது.

மேலும் அறிக்கையில் இன்னொரு விடயமும் வருகிறது. கருத்துக் கணிப்பில் அமெரிக்க அதிபர் பின் தங்கியிருந்தபோது அதிபரின் பிரச்சார பிரிவு பொறுப்பாளராகிய போல் மனோ போட்டின் நெற்றி சுருங்கியது.

அவர் ஏதாவது குறுக்கு வழியில் செல்லாவிட்டால் கருத்து கணிப்பில் முன்னேற முடியாது என்று கருதி, ரஷ்ய அரசின் நிர்வாக இயந்திரத்துடன் தொடர்புடைய சிலரை நாடியுள்ளார். அதைத் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தின் உளவுப்பிரிவு களமிறங்கியது.

விளைவு நான்கு மாநிலங்களின் முடிவுகள் மாறுகின்றன..

1980 முதல் அமெரிக்க அதிபருடைய ரிபப்ளிகன் கட்சி வெற்றி பெறாத மாநிலங்களாக இருப்பவை விஸ்கொன்சின், பென்சில்வேனியா, மிச்சிக்கன், மினிசோற்றா என்ற நான்கு மாநிலங்களுமாகும். இங்கு யாருமே எதிர்பாராத வகையில் மிக சிறிய பெரும்பான்மையில் அமெரிக்க அதிபர் வென்றார்.

இப்படியொரு வெற்றி கிடைப்பதற்கு நடந்த அதிசம் என்ன..? அங்குதான் உள்ளது மர்மம்.

இந்த மாநில வாக்காளர்களை திசை திருப்பும் வேலையை ரஸ்ய இணைய உளவாளிகள் கையிலெடுத்தார்கள். கிளிண்டனின் மின்னஞ்சல்களை களவாடினார்கள் அவை விக்கிலீக்சில் வெளியாகின.

றொபேட் மூலர் விசாரணை கமிஷன் அறிக்கை வெளியாக, இங்கிலாந்தில் விக்கிலீக்ஸ் அதிபர் யூலியன் அஸங்கேயும் கைதானார். இதையும் இங்கு சேர்த்தே பார்க்க வேண்டும்.

இப்படி நடந்திருக்கும் திரை மறைவு நாடகங்களுக்கான காரணங்களைப் பார்த்தால், உண்மையில் டொனால்ட் ரம்பிற்கு இந்த அறிக்கையை வெற்றியைத் தந்துவிட்டது என்று கூற முடியாது என்பதே நிபுணர்கள் கருத்தாகும்.

சரியான முடிவுரையை எழுதி..

இப்போதே டொனால்ட் ட்ரம்பபை மடக்கினால் இந்த விடயத்தில் அமெரிக்கா ரஸ்யாவிடம் தோற்றுப் போனது என்பதை, அமெரிக்கா எழுதாவிட்டாலும் நாளைய வரலாறு எழுதிவிடும்..

மாறாக இதுபோல ரஷ்யாவின் உதவியை எதிர்காலத்தில் எந்தவொரு வேட்பாளருமே நாடாமல் இருக்க வேண்டுமானால் அதற்கும் ஒரு வலுவான நடவடிக்கை வேண்டும்.

ஆகவேதான் முடிவுரையில்லாமல் அறிக்கையின் கதவுகள் யாரும் உள்நுழையக் கூடிய வகையில் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா தனது சுயநலத்திற்காக இப்போது செய்து வரும் காரியங்களான எருசலேமில் அமெரிக்கக் கொடியை ஏற்றியது, இஸ்ரேலுக்கு கோலான் குன்றை எழுதிக் கொடுத்தது, நேட்டோ நாடுகள் தமது மொத்த தேசிய வருமானத்தில் இரண்டு வீதமான பணத்தை படைகளுக்கு ஒதுக்க வேண்டும் என்றது, பின் அப்பணத்தை அப்படியே மடை மாற்றி, தம்மிடமே தந்து தமது நாட்டு ஆயுதங்களை வாங்க வேண்டும் என்று கட்டளை போட்டது, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டுவது போன்ற காரியங்களை எல்லாம் செய்தது உலக நண்பனான அமெரிக்கா அல்ல.. அது தனி நபரான டொனால்ட் ரம்பின் வேலை என்று நாளை சப்பை கட்டு கட்ட இந்த நாடகங்கள் அமெரிக்காவுக்கு அவசியம். இதைச் சொல்ல இன்று உலகில் எந்த ஊடகமும் தயாரில்லை என்பதுதான் உண்மை.

கூர்ந்து பார்த்தால் இலங்கையில் 1983 யூலை கலவரத்தின் பின் அமைக்கப்பட்ட கண்துடைப்பு சன்சோனி கமிஷன் அறிக்கைக்கும் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் விசாரணைக்காக அமைக்கப்பட்ட றொபேட் மூலர் விசாரணைக் கமிஷன் அறிக்கைக்கும் பெரிய வேறுபாடுகள் இருப்பதாக தெரியவில்லை.

விசாரணைக் கமிஷன்கள் ஜனநாயகம் பெற்ற ஊனப்பட்ட குழந்தைகள் என்பதை றொபேர்ட் மூலர் விசாரணைக் கமிஷனும் உலகிற்கு எடுத்துரைத்துள்ளது.

ஆனால் பாவம் அமெரிக்க அதிபர்.. இந்த பாம்பு இன்னமும் செத்துவிடவில்லை என்பதும், அமெரிக்க சுயநலத்திற்காக அது மீண்டும் உயிர்க்கும் என்பதும் அவர் அறியாத இரகசியமல்ல.

கி.செ.துரை 20.04.2019

Related posts