ஈழத் தமிழினம் பலம் குன்றிவிடவில்லை என்பதை காட்டும் வல்வை இந்திர விழா..!

வல்வை முத்துமாரியம்மன் இந்திரவிழா வட மகாணத்தில் ஒரு பெயர் பெற்ற விழாவாக தன்னை நிலை நிறுத்திவிட்டது. இதனுடைய வளர்ச்சி கடந்த ஐம்பது ஆண்டு காலங்களில் சீரான நகர்வாக இருக்கிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இந்திரவிழா என்ற நிகழ்வில் கண்ட அடிப்படைகள் பல அப்படியே உள்ளன உதாரணம் புகைக்குண்டு விடுதலை கூறலாம்.

மற்றையது வீதிகள் தோறும் வாழைக்குலைகள் கட்டி, போட்டிக்கோ கட்டி அலங்காரம் செய்யும் பண்பும் மாறாமலே இருக்கிறது.

இந்த விழா பழமையை போற்றும் பண்பு நிறைந்தாக இருக்கிறது, அதே வேளை புதுமைகளையும் இணைத்து முன்னேறுவதைக் காண முடிகிறது.

முன்னர் நெடியாடு இளைஞர்கள் முன்னெடுத்த இந்த நிகழ்வில் மற்றைய இடங்களில் முக்கியமாக நிறைகுடங்கள் வைத்து வரவேற்கும் பாரம்பரியம் இருந்தது.

ஆனால் இப்போதோ அன்று நிறைகுடம் வைத்த ஒவ்வொரு ஒழுங்கையும் தனியான நிகழ்வாக அதை ஜோடனை செய்ய ஆரம்பித்துள்ளன, இந்த வளர்ச்சி பின் வந்ததாகும். இன்று கழகங்கள் முக்கியமான பாத்திரம் வகிக்குமளவுக்கு ஜோடனைகள் வளர்ந்துவிட்டன.

இதனால் இந்திரவிழா எல்லோருடைய விருப்பங்களும் சிந்தனைகளும் பிரதிபலிக்கும் வண்ணமாக மாறியிருக்கிறது. கழகங்கள் இல்லாமலே கலைஞர்கள் பல்வேறு உருவங்களுடன் போவதையும் காணமுடிகிறது, விநோத உடையணிந்த விளையாட்டு போல.

போட்டிக்கோ கட்டுவதில் கூட காலத்தின் புதிய டிசைன்கள் சிலவற்றில் தெரிகின்றன, இவை புதிய ஆற்றல் மிக்க இளைஞர்கள் களத்திற்கு வந்துவிட்டார்கள் என்பதையும், அவர்கள் சற்று வித்தியாசமாக சிந்திக்க தலைப்படுகிறார்கள் என்பதையும் காட்டுகிறது.

20ம் நூற்றாண்டுக்கும் 21ம் நூற்றாண்டுக்குமான இடைவெளி தெரிகிறது.

முன்னர் ஒருவர் அல்லது ஒரு சிலர் தீர்மானிக்க நடைபெற்ற இந்த விழா இப்போது பலரது தீர்மானங்களை கொண்டு பிரதிபலிக்கிறது. இப்போது ஒரு சொலிடாரிட்டி முறை போல தெரிகிறது.

சொலிடாரிட்டி என்றால் 99 வீதம் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் ஒரு வீதம் உடன்பாடு இருந்தாலே போதும் அந்த ஒரு வீதத்தை ஆதாரமாக வைத்து சமுதாயத்தை ஒன்றிணைக்க முயல்வதாகும். இதை வேற்றுமையில் ஒற்றுமை காணல் என்றும் கூறுவார்கள்.

ஒரு வீத வேற்றுமை இருந்தாலும் 99 வீதத்தையும் நிராகரிக்கும் 20 ம் நூற்றாண்டு போக்குகள் வடக்கு கிழக்கில் அருவமாக மாறி வருவது தெரிகிறது.

கடந்து போன அரை நூற்றாண்டு காலப்பகுதியில் நடுவில் வந்த முப்பது ஆண்டு காலம் போர்களும், இடப் பெயர்வுகளும் வாழ்க்கையை சீர் குலைத்த காரணத்தால் அத்தாங்கு வடிவில் ஒரு தொய்வு நிலை இருந்தது, இப்போது அந்த நிலை மாறி புதிய வீறு காணப்படுகிறது.

இதை நாம் இந்திரவிழாவில் மட்டுமல்ல நல்லூர் தேர் உட்பட பல்வேறு ஆலயங்களின் திருவிழாக்களிலும் காண்கிறோம்.

இதற்குக் காரணம் தடுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை முறையை மீண்டும் வாழ அனுமதி கிடைக்கும்போது உண்டாகும் வேகம் என்று கூறுவார்கள். எவ்வளவு காலம் அடக்கப்பட்டதோ அவ்வளவு காலம் அதன் வீறும் இருக்கத்தான் செய்யும்.

அதைத்தான் இப்போது வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள திருவிழாக்களின் பேரெழுச்சிகளில் காண்கிறோம்.

முத்துமாரி அம்மன் திருவிழாவுக்கு சாட்டட் பிளைட்டில் இங்கிலாந்தில் இருந்து பக்தர்கள் வந்ததாகவும் கூறப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில் இது மேலும் வேகம் பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

இது போன்ற திருவிழா கலாச்சாரம் தமிழகத்திலும் முக்கியமான சமுதாய முள்ளந்தண்டாகவே இருக்கிறது.

ஒரு சமுதாயத்தின் இயங்கு நிலை, வளர்ச்சி அடையும் சமுதாய மாற்றங்களை மதிப்பிடுவதற்கு திருவிழாக்கள் நல்லதோர் களங்களாக இருக்கின்றன.

கருத்துக்கணிப்புக்களை ஆதாரமாக வைத்து மக்கள் விருப்பங்களையும் சமுதாய மாற்றங்களையும் மேலை நாடுகளில் அறிவார்கள். ஆனால் கருத்துக்கணிப்புக்கள் குறைவாக இருக்கும் கீழை நாட்டு வாழ்வின் இயங்கியலை மதிப்பிட திருவிழாக்களின் போக்குகளையும் அவற்றை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தையும் வைத்து எடை போட்டுக்கொள்ளலாம்.

மக்களிடையே தலைமைதாங்கும் பண்பு, உடன்பாடு, ஜனநாயகப்பண்புகள், கருத்துக்களை காது கொடுத்து கேட்டல், எல்லோரும் வாழ இடமிருக்கிறது என்ற புரிதால், மற்றவர் முன்னேறுவது நமக்கு பாதிப்பல்ல, உண்மையில் அது நமக்கே நல்லதென யுனிக்காக சிந்திப்பது, நாம் மட்டுமே எதையும் செய்ய வேண்டுமென எண்ணாதிருப்பது போன்ற பாராட்டுக்குரிய பெருங்குணங்கள் மெல்ல மெல்ல வளர்வதை அடையாளம் காணவும் திருவிழாக்கள் உதவுகின்றன.

2009 ம் ஆண்டு போருக்கு பிந்திய சமுதாயத்தின் பத்தாண்டு கால நகர்வை அடையாளம் காண ஆதாரமாக உள்ள வடக்கு கிழக்கு திருவிழாக்களில் இந்திரவிழாவும் முக்கியமான சமூகவியல் ஆவணமாக இருக்கிறது.

போருக்கு பிந்திய சமுதாய வாழ்வில் ஒரு படி முன்னேற்றம் இருப்பதை மற்றைய திருவிழாக்கள் போல இந்திவிழாவும் காட்டி நிற்கிறது.

ஈழத் தமிழரிடையே மகத்தான புதிய சிந்தனை ஒன்று இன்னமும் மலராமல் தாமதிக்கிறது என்ற உணர்வு, தமிழரல்லாத பல மேலைத்தேய தலைவர்களிடையே இருக்கிறது. தாம் முக்கியமான தீர்மானங்களை முன் நின்று கையிலெடுக்க, தமிழ் தலைவர்களிடமல்ல தமிழ் மக்களிடம் மாற்றம் வரவேண்டும் என்கிறார்கள்.

அத்தகைய புதுமை மிகு மக்கள் சக்தியை மலர்விக்கும் திறவுகோல்கள் விரைவாக உருவாகுமா.. தாயகத்தின் ஒவ்வொரு திருவிழாவையும் உலக சமுதாயம் அவதானிக்கிறது.

ஈழத் தமிழினத்திற்கு ஒரு நீதி வழங்கப்பட வேண்டும்.. அதை சமுதாயம் தனது புதுமை செயல்களினால் பிரதிபலிக்க வேண்டும்.

இந்திரவிழா ஈழத்தமிழினம் பலமிக்கதாகவே இருப்பதை மீண்டும் ஒரு தடவை உலகுக்கு காட்டியுள்ளது..

கி.செ.துரை
அலைகள் 20.04.2019

Related posts