ரஜினிக்கு வில்லனான கவுதம் மேனன் ஹீரோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ’தர்பார்’ படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

லைகா தயாரித்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலில் ரஜினி நடிக்கும் திரைப்படம் ’தர்பார்’. அனிருத் இசையமைக்க நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் முதல் போஸ்டர் கடந்த வாரம் வெளியானது. மும்பையில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பல வருடங்கள் கழித்து ரஜினிகாந்த் இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளன.தற்போது இந்தப் படத்தின் வில்லன் கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகர் ப்ரதீக் பப்பார் இறுதி செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் பாலிவுட் நடிகர்கள் ஸ்மிதா பாடில் மற்றும் ராஜ் பப்பாரின் மகன் ப்ரதீக் பப்பார். ’ஜானே தூ யா ஜானே நா’ படம் மூலம் அறிமுகமான ப்ரதீக், ’தோபி காட்’, ’தம் மாரோ தம்’, ’பாகி 2’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் பாலிவுட் ரீமேக்கான ’ஏக் தீவானா தா’ படத்தில் இவர் தான் நாயகன்.

‘தர்பார்’ வாய்ப்பு பற்றி பேசியுள்ள ப்ரதீக், “இவ்வளவு சீக்கிரம் இந்தப் படத்தில் ஒப்பந்தமானது கனவு நனவானதைப் போல உள்ளது. இந்த வருடம் எனக்கும் என் மனைவிக்கும் தனிப்பட்ட முறையிலும், வேலையில் மிகச்சிறந்த வருடமாகத் தெரிகிறது. ரஜினிகாந்த் சாருடனும், முருகதாஸ் சாருடனும் படப்பிடிப்பில் இணைந்து பணியாற்றுவதை ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன்” என்றார்.

‘தர்பார்’ 2020 பொங்கல் விடுமுறையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts