வேலூர் மக்களவை தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிரடி

வேலூர் தொகுதிக்கான மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், ஆம்பூர், குடியாத்தத்தில் இடைத்தேர்தல் அறிவித்தபடி நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார்.

பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடக்கிறது.

இதனால் கடந்த ஒரு மாதமாக தமிழகம் முழுவதும் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.

இந்நிலையில் பணப்பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், திமுக சார்பில் அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகின்றனர்.

வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலை நிறுத்தி வைக்க வேண்டும் என நேற்று தேர்தல் ஆணையம் சார்பாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி வேலூர் மக்களவை தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

Related posts