நம் நாட்டின் சிறந்த நடிகர் சூர்யா

நம் நாட்டில் சிறந்த நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்கிறார்” என்று ‘சூரரைப் போற்று’ தமிழ்த் திரைப்படத்தின் இணைத் தயாரிப்பாளர் மும்பையைச் சேர்ந்த குனீத் மோங்கா பாராட்டியுள்ளார்.

தமிழில் ‘இறுதிச்சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ புதிய தமிழ்த் திரைப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் தமிழின் முன்னணி நடிகர் சூர்யாவும் மலையாளத்திலிருந்து அனுபமா பாலமுரளியும் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான குனீத் மோங்கா சூர்யா பற்றியும் திரைப்படம் பற்றியும் கூறியதாவது:

“தமிழ் சினிமாவில் எங்கள் பயணத்தைத் தொடங்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் படமான ‘சூரரைப் போற்று’வில் சூர்யாவைத் தவிர வேறு யாரும் நடிக்க முடியாது.

நம் நாட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழும் சூர்யா, தேசியச் சின்னமாவார். தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கும் எனது கன்னிமுயற்சியில் சூர்யா மற்றும் ராஜ்சேகர், 2டி எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஆலிஃப் சூர்தி மற்றும் ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆகியோர் இணைவது என்பது ஒரு கனவுக் கூட்டணியாகவே இருந்து இப்போது உண்மையாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

சிக்யா தயாரிப்பு நிறுவனத்திற்கு சூர்யா வரவேற்பு

நடிகர் சூர்யா பேசுகையில், ”திறன்மிக்க படைப்பாளிகள் ஒரே பிளாட்பாரத்தில் இணையும் படம் ‘சூரரைப் போற்று’. இப்படம் வேறு லெவலில் இருக்கும். சிக்யா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தை முழு மனதுடன் வரவேற்கிறேன்” என்றார்.

”இது எங்கள் அனைவருக்குமே மிக மிகச் சிறப்புவாய்ந்த ஒரு படம். இப்படத்தின்மூலம் நாங்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளோம்” என்றார் இணை தயாரிப்பாளர் கற்பூரசுந்தரபாண்டியன்.

‘மித்ர மை பிரண்ட்’ மூலம் ஒரு திரைக்கதையாசிரியராக பாலிவுட்டுக்குள் நுழைந்த இயக்குநர் சுதா கொங்கராவுக்கு ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் திரும்பிப் பார்க்கவைத்தது. சூர்யா நடிக்க தற்போது அவர் இயக்கும் நான்காவது படம் ‘சூரரைப் போற்று’ என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts