சிறீலங்கா தலைவர்களின் வாழ்த்துக்கள்

சிறீலங்கா ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி.

இப்பாரினில் ஜீவராசிகளின் இருப்பினை உறுதிப்படுத்துவதில் மிக முக்கிய காரணிகளாக விளங்கும் சூரியனையும் சந்திரனையும் பண்டுதொட்டு மக்கள் மிகுந்த பக்தி சிரத்தையோடு வழிபட்டு வருகின்றனர். அவ்வண்ணம் இயற்கையை தெய்வீகமாக மதித்தல் சாதாரண குடிமக்களினதும் அரசனதும் வழக்கமாக இருந்து வருகின்றது.

அவ்வழக்கத்திற்கமையவே சூரியனையும் சந்திரனையும் வழிபடுவதற்காக புத்தாண்டு காலத்தில் ஒன்றுகூடும் தமிழ், சிங்கள மக்கள் சூரியன் மீன ராசியிலிருந்து மேட ராசிக்கு பிரவேசிப்பதனைப் புத்தாண்டு பிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சூரிய சங்கிராந்தியுடன் ஆரம்பமாகும் சித்திரை புத்தாண்டானது மனிதன் தனது சுற்றுச்சூழலையும் இயற்கையையும் வழிபடுவதற்கான வாய்ப்பாக அமைகின்ற அதேவேளை, அறுவடை செய்த விளைச்சலை இறைவனுக்கு நைவேத்தியம் செய்ததன் பின்னர் தனது உபயோகத்திற்காக வைத்துக் கொள்வதனால் மகிழ்ச்சி, ஒற்றுமை மற்றும் பரஸ்பர உறவுகள் விருத்தியடைவதுடன், மக்கள் தமது தேசிய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகவும் அமைகின்றது. பல சிறப்புக்களை கொண்ட இச்சித்திரை மாதத்தில் இயற்கை புத்துயிர் பெற்று பூத்துக் குலுங்குவதுடன் அது வசந்த காலத்தின் ஆரம்பமாகவும் அமைகின்றது. அவ்வாறு இயற்கை புத்தெழுச்சி பெறுவதனாலேயே நாம் இதனை புத்தாண்டாக கொண்டாடி மகிழ்கின்றோம்.

சித்திரைப் புத்தாண்டெனும் உயரிய கலாசாரப் பண்டிகையானது, சந்தைப் பொருளாதார கோட்பாடுகளின் பாரிய தாக்கங்களுக்கு உள்ளாகியிருக்கும் இக்காலத்தில் அதைக் கடந்து இப்பண்டிகையின் உள்ளார்ந்த பண்புகளைப் புரிந்துகொள்ள முயற்சித்தல் அவசியமாகின்றது. இயற்கையின் குழந்தைகளாகிய நாமே இயற்கையை நமக்கு அப்பாற்பட்ட ஒரு விடயமாகக் கருதி அதற்கு இடையூறு செய்திருக்கின்றோம். ஆகையால், ஏற்பட்டிருக்கும் பாதகங்களை உணர்ந்து இயற்கையுடன் ஒன்றரக்கலந்திருக்க வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டிய ஒரு கட்டத்திலேயே இன்று நாம் அடியெடுத்து வைத்திருக்கின்றோம்.

இதுவரை நாம் அடைந்திருக்கும் வெற்றியின் பலன்களை அனுபவிப்பதோடு தேசிய இலக்குகளை அடைவதற்கு நாம் இப்புத்தாண்டில் ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைவோம் என உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் அதேவேளை, இச்சித்திரைப் புத்தாண்டினைக் கோலாகலமாக கொண்டாடும் நாட்டு மக்களுக்கும் புலம் பெயர்ந்து வாழும் அனைத்து இலங்கையர்களுக்கும் சௌபாக்கியமும் சமாதானமுமிக்க இனிய சித்திரைப் புத்தாண்டுக்கான நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் ஜனாதிபதி தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

—————–

சிறீலங்கா பிரதமரின் வாழ்த்து செய்தி.

இயற்கையின் புது வசந்தம் மூலம் அழகு பெறும் சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் சிங்கள, தமிழ் புத்தாண்டு இன, மத பேதமின்றி இலங்கையர் அனைவரும் தமது வாழ்வினைப் புதுப்பித்துக் கொள்ளவும், அதனூடாக சமூகத்தைப் புதிய வழியில் பயணிக்கச் செய்வதற்கும் கிடைக்கும் அருமையான சந்தர்ப்பமாகுமென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டை மையப்படுத்திய எண்ணக்கருக்கள், சடங்கு சம்பிரதாயங்கள் அனைத்தும் இயற்கை மற்றும் மனிதனுக்கிடையிலான உறவினைப் புதுப்பித்துக் கொள்வதுடன், மனித சமூகத்தின் முன்பு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை போன்ற மானிடப் பெறுமானங்களைக் கட்டியெழுப்புவதனை நோக்கமாகக் கொண்டு உருவாகியுள்ளன.

வடக்கு தெற்கு என்ற பேதமின்றி ஒட்டுமொத்த இலங்கை சமூகத்தினரும் ஒன்றிணைந்து கொண்டாடும் புத்தாண்டு எமது வாழ்வினதும், சமூகத்தினதும் மறுமலர்ச்சிக்கான தேசிய கலாசாரத் திருவிழாவாகும். புத்தாண்டுச் சம்பிரதாயங்களின் உண்மையான அர்த்தங்களைப் புரிந்துகொண்டு மானிடத்தை மேம்படுத்துவத்கான, வாழ்வின் உண்மையான மகிழ்ச்சியை அனுபவிப்பதான அபிலாசையுடன் அவற்றைப் பின்பற்றுவது மிகவும் முக்கியமானதாகும். இலங்கை வாழ் உங்கள் அனைவருக்கும் அமைதி, மகிழ்ச்சி, செழுமை மிகுந்த இனிய புத்தாண்டாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன் என்றும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts