விஷால் தயாரிப்பில் உருவாகும் ‘இரும்புத்திரை 2’

விஷால் நடித்து, தயாரிக்க ‘இரும்புத்திரை 2’ உருவாகவுள்ளது. ஆனால், மித்ரன் இயக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

விஷால் நடித்து, தயாரித்து 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘இரும்புத்திரை’. பி.எஸ்.மித்ரன் இயக்கிய இப்படத்தில் அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். யுவன் இசையமைத்த இப்படத்துக்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் விஷாலுக்கு ஒரு வெற்றிப் படமாக ‘இரும்புத்திரை’ அமைந்தது. தற்போது ‘இரும்புத்திரை 2’ படத்தை தயாரித்து, நாயகனாக நடிக்க விஷால் திட்டமிட்டுள்ளார்.

ஆனால், ‘இரும்புத்திரை’ இயக்குநர் மித்ரன் 2-ம் பாகத்தை இயக்கவில்லை. இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் ‘இரும்புத்திரை 2’ படத்தை இயக்கவுள்ளார். அவர் கூறிய கதை விஷாலுக்கு மிகவும் பிடித்திருந்தது மட்டுமன்றி, ‘இரும்புத்திரை’ போன்றதொரு களத்திலேயே இருந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. தற்போது இப்படத்துக்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ மே 10-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts