8 நாட்களில் 100 கோடி வசூலை எட்டிய ‘லூசிஃபர்’

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ திரைப்படம் 8 நாட்களில் ரூ. 100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் ‘லூசிஃபர்’. அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமான இதில் மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட நடிகர்களும் நடித்திருந்தனர். முரளி கோபி படத்தின் திரைக்கதையை எழுதியிருந்தார்.

வெளியானதும் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது. மோகன்லால் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு விருந்து என பலரும் பாராட்டினர். திரையிட்ட இடமெல்லாம் வசூலை குவித்துள்ள இந்தப் படம் வெளியான எட்டு நாட்களில் 100 கோடி ரூபாய் வசூலை எட்டி, குறைந்த நாட்களில் இந்த வசூலை எட்டிய திரைப்படம் என்ற சாதனையைப் படைத்தது.

இதற்கு முன் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘புலி முருகன்’ திரைப்படமே மலையாளப் படங்களில் முதல் முறையாக 100 கோடியை வசூலித்த திரைப்படம். இதன் பிறகு நிவின் பாலி நடிப்பில் ‘காயம்குளம் கொச்சுன்னி’ திரைப்படம் 100 கோடி வசூலித்தது. இதில் நாயகனாக இல்லையென்றாலும் மோகன்லால் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் கவுரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்போது லூசிஃபரும் 100 கோடி பட்டியலில் இணைந்துள்ளது.

“வெறும் 8 நாட்களில் லூசிஃபர் பெருமைமிகு 100 கோடி பட்டியலில் இணைந்துவிட்டது. இது உண்மையில் நெகிழ்ச்சியைத் தருகிறது. உங்களது நிலையான ஆதரவின் பலனாக, மலையாள திரைத்துறையின் பல்வேறு புதிய இடங்களுக்கு சென்றடைந்துள்ளது. பிரித்விராஜ் மற்றும் லூசிஃபர் குழுவினருக்கு வாழ்த்துகள்” என்று நடிகர் மோகன்லால் இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

Related posts