ஸ்டாலின் பேச்சால் நெகிழ்ந்து போய் கண்கலங்கிய கனிமொழி

தூத்துக்குடி பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசப்பேச நெகிழ்ந்துபோன கனிமொழி கண்கலங்கி சிரமப்பட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தினார்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை போட்டியிடுகிறார். கனிமொழிக்கும் தூத்துக்குடிக்கும் இருக்கும் தொடர்பு தேர்தலுக்கான ஒன்றல்ல. இதற்கு முன்னரே தனது எம்.பி. நிதியிலிருந்து பல உதவிகளை தூத்துக்குடிக்குச் செய்து வருகிறார்.

ஒரு கிராமத்தை தத்தெடுத்து உதவி வருகிறார். தூத்துக்குடி சம்பவத்தில் பல போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார். திமுக வேட்பாளராக கனிமொழி அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரையே வேட்பாளராக நிறுத்தியது திமுக.

தொகுதியில் கனிமொழி பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு உள்ளது. கனிமொழி தூத்துக்குடியில் போட்டியிடுவதை ஒட்டி திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கனிமொழியை ஆதரித்துப் பேசினார். அப்போது அவர் கனிமொழி குறித்தும், அவர்களது தந்தை குறித்தும் பேசப்பேச கனிமொழி மேடையில் உணர்ச்சி வசப்பட்டார். கண் கலங்கியதை பிறர் அறியாவண்ணம் சிரமப்பட்டு குறைத்துக்கொண்டார்.

ஆனாலும் அவரது முகத்தில் தோன்றிய உணர்ச்சிகளை அவரால் மறைக்க முடியவில்லை. சிரமப்பட்டு சமாளித்தார்.

ஸ்டாலின் அந்தக் கூட்டத்தில் பேசியதாவது:

”எப்போதெல்லாம் உதயசூரியனில் போட்டியிடும் நமது வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும்போது கலைஞரின் பிள்ளைகளாக எண்ணி வாக்களியுங்கள் என்று கூறுவேன். ஆனால் தூத்துக்குடியில் கலைஞரின் பிள்ளை கனிமொழியே போட்டியிடுகிறார்.

கனிமொழியை அறிமுகப்படுத்தவேண்டும் என்றால் என்னை அறிமுகப்படுத்துவது போன்றது. கலைஞரை அறிமுகப்படுத்துவது போன்று பொருத்தமாக இருக்கும். தூத்துக்குடி வேட்பாளராகப் போட்டியிடும் அவர் இங்கு நிறுத்தப்பட்டுள்ளார். அப்படிச் சொல்வதை விட உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அவர் நிறுத்தப்பட்டுள்ளார் என்றால் கலைஞர் இங்கு போட்டியிடுகிறார் என்று அர்த்தம். நானே இங்கு போட்டியிடுவதாக அர்த்தம். கலைஞர் பன்முகத் திறமை கொண்டவர். எழுத்தாளர், கவிஞர், தலைவர், நிர்வாகத்திறமை மிக்கவர். அப்படிப்பட்ட திறமைகளைக் கொண்டவர் கனிமொழி.

எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளராக இருந்தவர், மக்களின் போராட்டங்களை முன்னெடுத்தவர், நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர்”.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

கனிமொழியைப் பற்றியும், கருணாநிதியோடு ஒப்பிட்டும் ஸ்டாலின் பேசியபோது கனிமொழி மிகவும் உணர்ச்சி வசப்பட்டவராக காணப்பட்டார்.

இதேபோன்று கனிமொழி 2 ஜி வழக்கில் விடுவிக்கப்பட்டபோது சென்னை வந்த அவரை ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்தி அழைத்து வந்தார். அப்போது கனிமொழி ஸ்டாலினிடம் உங்களைக் கட்டி அணைக்க விரும்புகிறேன் எனக் கூறி கட்டி அணைத்து வாழ்த்து பெற்றார். நெகிழ்வான அந்தத் தருணம் அங்குள்ள அனைவரையும் பற்றிக்கொண்டது.

Related posts