பாகிஸ்தான் உருவாகி இருக்காது: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விவேகமாக செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் உருவாகி இருக்காது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

மக்களவைத் தேர்தல் வரும் 11-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக மே 19-ம் தேதி வரை நடக்கிறது. மே 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

மகாராஷ்டிரா மாநிலம், லட்டூரில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது:

இந்த தேசம் கடந்த 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தபோது, காங்கிரஸ் தலைவர்கள் சிறிது விவேகத்துடன் செயல்பட்டிருந்தால், பாகிஸ்தான் எனும் நாடு உருவாகி இருக்காது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் பெரும்பாலானவை பாகிஸ்தானுக்கு ஆதரவான விஷயங்களைக் கொண்டதாகவே இருக்கின்றன.காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்ற ஒரு கட்சியின் தலைவர் ஜம்மு காஷ்மீருக்கு தனியாக பிரதமர் தேவை எனக் கேட்கிறார்.

காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி வைத்துள்ளன. மகாராஷ்டிராவில் வலிமையான மனிதர் எனச் சொல்லப்படும் சரத்பவார் எவ்வாறு இதுபோன்ற சிந்தனைகள் கொண்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளார் என்பதை நினைக்கையில் வியப்பாக இருக்கிறது.

பாஜக புதிய இந்தியா கொள்கையை கொண்டுள்ளது. இந்த கொள்கையுடைய பாஜக அரசு தீவிரவாதிகளை அவர்களின் இடத்திலேயே சென்று தாக்கி அழிக்கும் வல்லமை படைத்தவர்கள்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக நமது விமானப்படையினர் பாலகோட்டில் பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்துவிட்டு திரும்பினார்கள். ஆனால், இந்த தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கின்றன.காங்கிரஸ் கட்சிக்கு ஊழல் தவிரவேறு ஏதும் செய்யவில்லை. இப்போது தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் கட்சி்க்கு ஆதாரவான தலைவர்கள் வீடுகளில் பெட்டி, பெட்டியாக பணம் கைப்பற்றப்பட்டு வருகிறது. வாக்குகளை விலைக்கு வாங்குவது அரசியல் கலாச்சாரமாகி வருகிறது. கடந்த 6 மாதங்களாக காவலாளி திருடனாகிவிட்டார் என்று என்னை குற்றம்சாட்டுகிறார்கள். கைப்பற்றி ரூபாய் நோட்டுகள் எங்கிருந்து வந்தன, யார் உண்மையான திருடன்.

ராணுவத்துக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு உரிமைச் சட்டத்தை திரும்பப்பெறுவோம் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. பாகிஸ்தானும் இதேபோன்று, தீவிரவாதிகளை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க நினைக்கிறது.

தேசவிரோத சட்டங்களை ஒழிக்க காங்கிரஸ் திட்டமிடுகிறது. இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்கள் சுதந்திரமாக செயல்பட விட நினைக்கிறது. இதுபோன்ற செயல்களை செய்யும் நபர்களை, நீங்கள் நம்பலாமா. இவர்களை தேசத்தை பாதுகாப்பார்களா.

பாஜகவின் தேர்தல் அறிக்கையில் தேசப்பாதுகாப்புக்கும், விவசாயிகள் நலனுக்கும்தான் அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் இளைஞர்கள், தங்கள் வாக்குகளை பாலகோட் தாக்குதலை யார் செய்தார்களோ அவர்களுக்கு அளிக்க வேண்டும். நீங்கள் எங்கள் மீது கடந்த 5 ஆண்டுகளாக நம்பிக்கை வைத்திருந்தீர்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Related posts