இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு

பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆய்வுகளால், இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பகுதிகளில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையை சூழ்ந்துள்ள கடல் பிரதேசம் மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, கடந்த பல ஆண்டுகளாக ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த நிலையில், இலங்கை தீவின் மேற்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இயற்கை எரிவாயு வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க பி.பி.சி தமிழிடம் கூறினார்.

குறிப்பாக, இந்தியாவின் தமிழ் நாட்டின் அருகிலுள்ள மன்னார் வளைக்குடா பகுதியிலேயே அதிக இயற்கை எரிவாயு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மன்னார் முதல் தென் பகுதியின் காலி வரையான கடல் பிரதேசத்தில் இந்த எரிவாயு வளம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் முதன் முறையாக 1960ஆம் ஆண்டுகளில் எரிவாயு கண்டறிவதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்ட போதிலும், போர் நிலவியபோது இந்த நடவடிக்கைகள் 1984ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆய்வுகள் தென் கடற்பரப்பிலேயே முன்னெடுக்கப்பட்டிருந்ததாக கூறிய அவர், அதற்கான புதிய ஆய்வறிக்கைகள் மற்றும் தரவுகள் தற்போது கிடையாது எனவும் சுட்டிக்காட்டினார்.

எனினும், மன்னார் வளைகுடா பகுதியில் 2001-ம் ஆண்டு முதல் பகுதி பகுதியாக பல ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும், சில சந்தர்ப்பங்களில் முப்பரிமாண ஆய்வுகள் நடத்தப்பட்டதாகவும் பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க கூறினார்.

இந்த நிலையில், மன்னார் வளைகுடாவின் மன்னார் நகருக்கு அருகிலுள்ள பகுதியில் இறுதியாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இரண்டு இயற்கை எரிவாயு தளங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த பகுதியில் இயற்கை எரிவாயு ஆய்வுகளை நடத்திய வெளிநாட்டு நிறுவனம், அவர்கள் கொண்டிருந்த சில கொள்ளை ரீதியிலான செயற்பாடுகளினால் அந்த நடவடிக்கைகளை கைவிட்டு சென்றிருந்ததாகவும் வஜிர தஸநாயக்க குறிப்பிட்டார்.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளால் கண்டறியப்பட்ட இயற்கை எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் நோக்குடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதனை வழங்க தற்போது டென்டர் கோரப்பட்டுள்ளது.

இந்த டென்டர் வழங்குவதற்கான காலக்கெடு எதிர்வரும் மே மாதம் 7-ம் தேதியுடன் நிறைவடையவுள்ளதாக வஜிர தஸநாயக்க நினைவூட்டினார்.

அத்துடன், ஏனைய இரண்டு எரிவாயு வளங்கள் காணப்படுகின்ற கடல் பிராந்திய பகுதியை விலை மனுக்கோர தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, இலங்கையின் வட கிழக்கு பகுதியிலும் இயற்கை எரிவாயு வளங்கள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளன.

பிரான்ஸை தளமாகக் கொண்டு இயங்கும் டோடா நிறுவனத்தினால் கடந்த ஆண்டு இந்த பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன.

இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலையை அண்மித்த கடல் பிராந்தியத்தில் இந்த இயற்கை எரிவாயு வளங்கள் இருக்கின்றமை கண்டறிப்பட்டுள்ளன.

டோடா நிறுவனத்தினால் நடத்தப்பட்ட ஆய்வுகள் நிறைவடைந்துள்ளதை அடுத்து, எதிர்வரும் நடவடிக்கைகள் தொடர்பில் அந்த நிறுவனம் தீர்மானிக்கும் என வஜிர தஸநாயக்க குறிப்பிட்டார்.

அத்துடன், இலங்கையின் தென் பகுதியில் எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடங்கி ஆய்வுகளை நடத்த எதிர்பார்ப்பதாக வஜிர தஸநாயக்க நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த எரிவாயு வளத்தை பெற்றுக்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையிடம் இல்லாததால், வெளிநாட்டு நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, டென்டர் வழங்குவது நிறைவடைந்து, மூன்று மாதங்களுக்குள் தெரிவு செய்யப்படும் நிறுவனத்திற்கு இந்த பணியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அதன்பின்னர், இயங்கை எரிவாயுகளை பெற்றுக்கொள்வதற்கான அபிவிருத்தி பணிகள், செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்பதுடன், இலங்கையில் 2023-ம் ஆண்டளவில் எரிவாயு வளத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை ஆரம்பிக்க முடியும் எனவும் வஜிர தஸநாயக்க கூறினார்.

இதேவேளை, இலங்கைக்க அருகிலுள்ள கடல் பிரதேசத்தில் அதிகளவிலான மீன்வளங்கள் காணப்படுவதால், இவ்வாறு எரிவாயு எடுக்கப்படுவதால் மீன் வளங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படுமா என்ற எமது கேள்விக்கு பதிலளிக்கையில், கடல் வளத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும், கடல் வளத்தை பாதுகாக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அத்துடன், கடல் நில மட்டத்தில் இருந்து சுமார் 2500 மீட்டர் கீழேயே இந்த இயற்கை எரிவாயு காணப்படுவதாகவும், அதனை துவாரமிட்டு மிகவும் பாதுகாப்பான முறையில் அகழ்ந்தெடுக்கப்படும் என்றும் பெட்ரோலிய ஆய்வு அபிவிருத்தி செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் வஜிர தஸநாயக்க குறிப்பிட்டார்.

இதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து பிபிசி தமிழ் கருத்து கேட்டது.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிலிருந்து இயற்கை எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளுக்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் கடல் வளங்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை தேசிய நீரியல் வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை (நாரா) நிறுவனம் தெரிவிக்கின்றது.

கடலில் கட்டுமாணப் பணிகள் மேற்கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் பெரிதும் பாதிப்புக்கள் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கே.அருளானந்தம் தெரிவிக்கின்றார்.

அத்துடன், நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து, எரிவாயுவை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தில் ஏதேனும் கசிவுகள் ஏற்படுமாக இருந்தால், அதில் கடல் வளங்கள் பாதிக்கக்கூடிய சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், குறித்த திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் சுற்றுச்சூழல் மதிப்பீடொன்று செய்யப்படுவது அத்தியாவசியம் என இலங்கை தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமை நிறுவனத்தின் பிரதம விஞ்ஞானி கே.அருளானந்தம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts