உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 14

சிலுவையும் அறிவுக்கெட்டாத அன்பும்.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகலபரிப10ரணத்தாலும் நிறையப்படவும், எபேசியர் 3:19

இன்னும் இரண்டு வாரத்தில் உலகம் முழுவதும் தேவனின் அன்பின் வெளிப்பாடாகிய இயேசுவின் மரணத்தை நினைவுகூரும் காலம் ஆகும். அலைகள் நேயர்களும் இயேசுவின் மரணத்தைப் பற்றி நன்கு அறிந்து கொள்ளும்படியான வேளையை தேவன் இந்த பத்திரிகை ஊடாக உங்களுக்குத் தந்துள்ளார். அதற்காக தேவனுக்கு நன்றிகூறி தேவனின் அறிவுக்கெட்டாத அன்பை அறியும்படியாக உங்களை அழைத்துச் செல்கிறேன்.

இன்று உலகம் அன்புக்காக ஏங்கிநிற்பதை நாம் நன்கு அறிவோம். மாறிப்போகும் மனிதஅன்பு ஒரு எல்லைக்குட்பட்டது என்று அறிந்தும் அதற்காக ஏங்கித்தவிர்க் கிறோம். அது கிடைத்து விட்டாலோ நமது சந்தோசத்தை சொல்லிட முடியாது. அப்படியானால் இயேசுவின் அன்பு நம்மை என்ன செய்யும். அந்த மாசற்ற மாறாத அன்பை நாம் சரியாக புரிந்து கொள்வதில்லை, சிந்திப்பதில்லை, அனுபவிப்பதில்லை. மேன்மைவாய்ந்த, ஒப்பற்ற, முழுமையான அந்த அன்பு மனிதன்மீது முடிவற்ற சமுத்திரம் போல பாய்ந்துகொண்டிருக்கிறது. அந்த தேவனின் அன்பை விபரிக்க வார்த்தைகளும் இல்லை. விபரிக்கவும் முடியாதது.

தேவன் மக்களோடு பேசியபோது அவர்கள் உணரவில்லை. தீர்க்கதரிகளினூடாக பேசியபோது அவர்கள் உணரவில்லை. அற்புத அடையாளங்களைக் காட்டினார். அவர்கள் உணரவில்லை. தேவன் மனிதனாக உலகத்திற்கு வந்தார். அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இறுதியாக தாமாகவே சிலுவையில் தன்னை ஒப்புக் கொடுத்தார். காரணம் தாம்படைத்த மக்கள், தேவனுக்கு எதிரான பாவங்கள், சாபங்கள், நோய்பிணிகளில் இருந்து விடுதலை பெற்று, தேவனுடனான ஐக்கியத துடன்கூடிய வாழ்வு வாழ தன்னை ஒப்புக்கொடுத்தார்.

சிலுவையில் அவர் தொங்கியபோது மக்கள் அனைவரும் காணக்கூடியதாக அவரின் காயங்கள் தெரிந்தன. அந்தக் காயங்கள் ஒவ்வொன்றும் மக்களின் பாவங்களின் அடையாளங்களாக இருந்தன. அவரின் கால்களைப்பார், நாம் நடந்த தீயபாதைகளினிமித்தம் வந்த காயங்கள். தீமையையும் தீதையும் செய்த நமது கரங்கள் நமக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவரின் கரத்தில் காயங்கள். கண்களைப்பார், நமது வேதனைகளைப் பார்த்து ஆறுதற்படுத்த எம்மைப்பார்த்த அவரின் இரத்தம் தோய்ந்த கண்கள். அவரின் சரீரத்தைப்பார், சகல மக்களின் பாங்களின் அக்கிரமத்தை தளும்புகளினால் குணமாக்கி, நித்திய ஜீவனைக் கொடுக்க பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தேவபிள்ளையே, இத்தனையாக அன்பு செய்தவருடைய மகிமை இன்னதென்று நீ சிந்தித்தது உண்டா? இவர் அநாதியாக என்றென்றும் இருக்கிறவர். இவராலே சகலதும் உண்டாக்கப்பட்டது. இவரே சர்வத்திற்கும் ராஜா. இவர் மனிதனாக வந்ததே பெரிய காரியம். ஆனால் அவர் பாவமானாரே, அதுதான் அவரின் அன்பை வெளிப்படுத்தும் ஒரு உன்னத அளவுகோல். இதை நாம் ஏசாயா 53ம் அதிகாரத்தில் வாசித்து அறிந்து கொள்ளலாம்.

எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார்? கர்த்தருடையபுயம் யாருக்கு வெளிப்பட்டது. இளங்கிளையைப் போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் அவனுக்கு முன்பாக எழும்புகிறார். அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை. அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்கரூபம் அவருக்கு இல்லாதிருந்தது. அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்த வருமாயிருந்தார்.

அவரைவிட்டு, நம்முடைய முகங்களை மறைத்துக்கொண்டோம். அவர் அசட்டை பண்ணப்பட்டிருந்தார். அவரைஎண்ணாமற்போனோம். மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார். நாமோ, அவர் தேவனால் அடிபட்டுவாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார். நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்

நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன் தன் வழியிலே போனோம். கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப் போலவும், தன்னை மயிர் கத்தரிக்கிறவனுக்குமுன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.

இடுக்கணிலும் நியாயத்தீர்ப்பிலுமிருந்து அவர் எடுக்கப்பட்டார். அவருடைய வம்சத்தை யாரால் சொல்லி முடியும். ஜீவனுள்ளோருடைய தேசத்திலிருந்து அறுப்புண்டுபோனார். என்ஜனத்தின் மீறுதலினிமித்தம் அவர் வாதிக்கப்பட்டார். துன்மார்க்கரோடே அவருடைய பிரேதக்குழியை நியமித்தார்கள். ஆனாலும் அவர் மரித்தபோது ஐசுவரியவானோடே இருந்தார். அவர் கொடுமை செய்யவில்லை. அவர் வாயில் வஞ்சனை இருந்ததுமில்லை. கர்த்தரோ அவரை நொறுக்கச்சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார். அவருடைய ஆத்துமா தன்னைக் குற்ற நிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்த நாளாயிருப்பார். கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும். அவர் தமது ஆத்தும வருத்தத்தின் பலனைக் கண்டு திருப்தியாவார்.

என்தாசனாகிய நீதிபரர் தம்மைப் பற்றும் அறிவினால் அநேகரை நீதிமான் களாக்குவார். அவர்களுடைய அக்கிரமங்களைத் தாமே சுமந்துகொள்வார். அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலு}ற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன். பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார்.

இதுதான் அன்று சிலுவையில் தெரிந்த அந்த அறிவுக்கெட்டாத அன்பு. அந்த அறிவை வியக்கவைக்கும் கிறிஸ்துவின் அன்பை நாம் அறிய வேண்டும். அதாவது அறிவைக் கடந்து செல்லும் அந்த கிறிஸ்;துவின் அன்பை நாம் அறிய வேண்டும். நமது இருதயம் இயேசுகிறிஸ்துவின் அன்பால் நிறைந்து வழியும் ஓர் நிலையை நாம் அடைய வேண்டும். இதை அறிவின் அடிப்படையில் கண்டடைய முடியாதது. அது புத்திக்கு அப்பாற்பட்டது. தேவநீதியுடன் கூடிய விசுவாசத்தால் கண்டுகொள்ளும் அன்பு. அந்த தியாகம் நிறைந்த அன்பை எமது வாழ்வில் கண்டடைந்து கொள்ள இந்த பாஸ்கா காலத்தில் எம்மை ஒப்புக்கொடுப்போமா.

அன்பின் ஆண்டவரே, உமது ஈடுஇணையற்ற அன்பை இந்த தியானத்தின் மூலம் அறிய உதவினீரே, நன்றி அப்பா. அந்த அன்பினால் வரும் நித்திய ஜீவனையும், ஆறுதலையையும் எனது வாழ்வில் கண்டுகொள்ள உதவிசெய்யும் அப்பா. அந்த அன்பைக் கண்டபின்னரும் நிலையற்ற உலக அன்புக்காய் நான் அலைந்து அழியாதபடி என்னைக் காத்தருளும், பிதாவே ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts