நான் அரசியல் கற்றது நடராஜனிடம் – சினேகன்

2019 மக்களவை தேர்தலில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளராக போட்டியிடும் திரைப்படப் பாடலாசிரியர் சிநேகனுடன் ஒரு நேர்க்காணல் செய்தது பிபிசி தமிழ்.

இதோ அவருடன் நடத்திய உரையாடலில் இருந்து…

கேள்வி: எதனை முன்வைத்து தேர்தலை சந்திக்கிறீர்கள்?

பதில்: பழைய அரசியல் அழுக்குகளை அகற்றி புதிய தலைமுறைக்கு இடம் கொடுங்கள், கிடப்பில் கிடக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்ற,மிகவும் பின் தங்கியுள்ள மாவட்டமான சிவகங்கையை முன்னேற்ற ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என மக்களை சந்தித்து வாக்கு கேட்கிறேன்.

கே: சினிமா துறையில் உள்ள சிநேகனை மக்கள் வேட்பாளராக ஏற்று கொள்கிறார்களா??

ப: அனைத்து இடங்களிளும் மக்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் எங்களை வரவேற்கிறார்கள், நாங்கள் யாருக்கும் பணம் கொடுத்து மக்களை அழைக்கவில்லை தாங்களாக முன் வந்து எங்களை அரவணைப்பதைப் பார்த்தால் எங்களுக்கான வெற்றியை காண முடிகிறது.

கே: உங்களுக்கு அரசியல் புதிதா, மக்கள் பிரச்சனைக்கு கடந்த காலங்களில் போராடியதுன்டா?

ப: நான் பத்து வயதில் இருந்து அரசியல் களம் கண்டு வருகிறேன். சிறு வயதில் இருந்தே கார்ல் மார்க்ஸ் மற்றும் லெனினை படித்து 14 வயதில் இருந்து அரசியலில் ஈடுபட்டுவருகிறேன்.

ஜெயலலிதாவின் செல்லப் பிள்ளையாக இருந்தவன். 2008ஆம் ஆண்டு திருவையாறு தொகுதியில் போட்டியிடச் சொன்னபோது கூட நான் சினிமாவில் ஆர்வம் உள்ளதால் அதனை நிராகரித்தேன். ஆனாலும் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளராக, காவேரி பிரச்சனைக்காக பூம்புகார் முதல் மேட்டூர் வரை தனி ஒருவனாக நடைபயணம் மேற்கொண்டுள்ளேன். ஈழப் பிரச்சனைக்காகப் பட்டினி போராட்டம் நடத்தியுள்ளேன். எனவே நான் அரசியலுக்கு புதிதல்ல.

கே: அதிமுக வுடன் இணக்கமாக இருந்த நீங்கள் திடீரென மக்கள் நீதி மையத்தில் இணைந்து தேர்தலை சந்திக்க காரணம்?

ப: டிடிவி இருக்க வேண்டிய இடத்தில் நடராஜன் (சசிகலாவின் கணவர்) தான் இருந்திருக்க வேண்டும் நான் அரசியல் கற்றது நடராஜனிடம்தான். டிடிவி இருக்க வேண்டிய இடத்தில் நடராஜன் இருந்திருந்தால் அந்த தலைமையில் தொடராலம் என்ற எண்ணம் இருந்திருக்கும். நடராஜனிடம் இருந்து அபகரித்து தலைமை மாற்றப்பட்டபோது தான் நான் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவளித்தேன்.

ஆனால் ஓ.பி.எஸ் இ.பி.எஸ்-சுக்கு ஆதரவளித்து அவருடன் சென்றார் அதற்கு அவர் அளித்த பதில் வேடிக்கையாக இருந்ததது. அதனால் அரசியலைவிட்டு விலகி நின்றபோது கமலஹாசன் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு அவருடன் கை கோர்த்தேன்.

கே: சிநேகனுக்கு அரசியல் முன்மாதிரி நடராஜனா? கமல்ஹாசனா?

ப: நான் அரசியல் கற்றது நடராஜனிடம். கற்று கொண்ட வித்தயை காட்டி கொண்டிருப்பது ‘நம்மவருடன்’. நான் மிகவும் எதார்த்தமானவன் என்பதால் அனைத்து அரசியல் தலைவர்களிடம் இருந்து பண்புகளை எடுத்துக்கொண்டேன்.

கே:அரசியலில் சாதித்த பின்புதான் தாடியை எடுப்பீற்களா? தாடிக்கு காரணம் என்ன?

ப: பொம்மி வீரன் என்ற படத்தை நானே இயக்கி நடித்து வருகிறேன், படத்திற்கான தோற்றம் இது. படம் தேர்தலுக்குப் பிறகு படம் வெளி வரவுள்ளது. தாடியில் லட்சியம் இல்லை. லட்சியம் மனதிற்குள்ளேயும் ரத்தத்திற்குள்ளேயும் ஊறிக் கிடக்கிறது.

கே: தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிநேகன் கட்டிபிடி வைத்தியம் யுக்தியை பயன்படுத்தியதாக வைரலாக பேசப்பட்டது. அதே போல் தேர்தலில் மக்களிடம் கட்டிபிடி வைத்திய உத்தியைப் பயன்படுத்துவீர்களா?

ப: இஸ்லாமியர்கள் கட்டித் தழுவிதான் அன்பைத் தெரிவிக்கின்றனர். அதேபோல் என்னை அண்ணா என்று வந்தவர்களை கட்டி அரவணைத்தேன். இது புதிய யுக்தியல்ல, அரசியலில் ஒருவரை தழுவி தான் வாக்கு கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நேர்மையாக, சத்தம் போட்டு, நெஞ்சை நிமிர்த்தி வாக்கு சேகரிக்கிறேன். இதுதான் என் யுக்த்தி.

கே: மக்களவை உறுப்பினரானால் கலைத் துறையில் இருந்து ஒதுங்கிவிடுவீர்களா?

ப: தேர்தலில் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராலும் நிச்சயம் நான் சினிமாத் துறையை விட்டு வரமாடேன் காரணம் அது என் தொழில். இலக்கியமும் தமிழும்தான் என்னை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளன. விரல்களில் தெம்பு உள்ளவரை எழுதிக் கொண்டே இருப்பேன்.

கே: மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமலஹாசன் ஏன் தேர்தலில் பேட்டியிடவில்லை,தேர்தலில் போட்டியிட பயமா?

ப: நாற்பது தொகுதிகளிளும் புதிய வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார். ஆனால் கமலஹாசனுக்கு தேர்தலில் போட்டியிட தான் விருப்பம். நாங்கள்தான் வேண்டாம் என்றோம். இந்த தேர்தல் மூலமாக 40 தொகுதியிலும் உள்ள மக்களை அவரால் சந்திக்க முடிகிறது. சீட்டு பெற்று தேர்தலில் போட்டியிடுவதைவிட்டு மக்களை நேரில் சந்தித்து அவர்கள் குறையை கேட்க வாய்ப்பு கிடைக்கிறது. எனவே அவர் யாரையும் பார்த்து பயப்படவில்லை. பயம் இருந்தால் கட்சி ஆரம்பித்து இருக்கமாட்டார். மக்களவைத் தேர்தலில் பங்கு பெற்று இருக்கமாட்டார். எனவே பயம் என்ற சொல்லுக்கும் அவருக்கும் மிகுந்த இடைவெளி உள்ளது.

கே: 40 தொகுதிகளில் எத்தனை தொகுதிகளில் உங்கள் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள்?

ப: நாங்கள் நாற்பது தொகுதிகளிளும் எங்கள் பலத்தை நிருப்பிபோம். ஆண்ட கட்சித் தலைவர்கள் மீது விரக்தி அடைந்து 35 சதவீதம் பேர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இன்றி, ஓட்டு போடவே வருவதில்லை அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதே மக்கள் நீதி மையத்தின் முதல் கொள்கையே தவிர நற்பது தொகுதிகளிளும் வெற்றி பெற்று நாட்டை ஆளுவோம் என சொல்லவில்லை. நிச்சயம் எங்களது துணிச்சலுக்கு மக்கள் வெற்றி தருவார்கள். அதனைதான் நாங்களும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.

கே: எல்லா மாவட்டத்திலும் வெளி மாவட்ட நபர்களை வேட்பாளராக அறிவித்துள்ளீர்கள். ஏன் அந்தந்த மாவட்டத்தில் வேட்பாளராக தேர்தலை சந்திக்க ஆளில்லையா? வெளி மாவட்டத்தினர் வெற்றி பெற்றால் அவர்களை மக்கள் எப்படி சந்திப்பது?

ப: உள்ளூர்வாசிகள், மண்ணின் மைந்தர்கள் வெற்றி பெற்று எத்தனை முறை தொகுதிக்கு வந்தார்கள்? மக்களை சந்தித்தார்கள்? ஆனால் நாங்கள் செல்லும் இடமெல்லாம் என்னுடைய தொலைபேசி எண்னை கொடுத்து வருகிறேன். வெற்றி பெற்றால் நிச்சயம் என்னை மக்கள் அணுகலாம். ஆனால் தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளிடம் அவர்களது தொலைபேசி எண்ணைக் கொடுக்கச் செல்லலுங்கள் பார்க்கலாம். தேர்தல் வரும்போது மட்டுமே அவர்கள் மக்களை சந்திக்கிறார்கள். தமிழகத்தில் உள்ள 80 சதவீதம் அரசியல்வாதிகளும் அப்படி தான் செய்கிறார்கள். ஆனால் சிநேகன் வெற்றி பெற்றால் தற்போது போல் மக்களோடு மக்களாகதான் இருப்பேன்.

கே:சிவகங்கை மக்களவைத் தொகுதியில் எவ்வளவு வாக்குகளை டார்ச்லைட் சின்னம் பெறும்?

ப: அதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் சிவகங்கை தொகுதியில் போட்டியிடும் பிரதான கட்சிகளுக்கு சவாலாக நாங்கள் வெளிச்சத்தைப் பாய்ச்சுவோம்.

கே: தேர்தல் குறித்து ஒரு கவிதை சொல்லுங்கள்

ப: நாட்டுக்காக ஓட்டு போடுங்கள், நோட்டுக்காக ஓட்டு போடாதீர்கள்.

Related posts