இன்றைய முக்கிய இலங்கை செய்திகளின் தொகுப்பு..

அலரி மாளிகையில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் உத்தியோகத்தர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தன்னுடைய உத்தியோகபூர்வ துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) காலை 08.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

வரகாபொல, கந்தகம பிரதேசத்தைச் ​சேர்ந்த 30 வயதுடைய தில்ருக்‌ஷ சமரசிங்க என்பவரே தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

————

தொழில்நுட்ப ரீதியில் அபிவிருத்தி அடைந்த நாடுகளே உலகளாவிய ரீதியில் முன்நிலை வகிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற சென் போல்ஸ் மகளிர் வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்தகொண்டு உரையாற்றிய பிரதமர் புதிய நவீன தொழில்நுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான தொழிற்பயிற்சி நெறிகளை வழங்குவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டார்.

தொழில்நுட்ப அறிவுடன கூடிய ஆளணியே நாட்டுக்கு தேவையென தெரிவித்த பிரதமர் நாட்டில் உள்ள சகல பாடசாலைகளும் மறுசீரமைக்கப்படும். தற்போது சகல துறைகளும் நவீன தொழில்நுட்பங்களுடன் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த தொழில்நுடப் வசதிகள் பாடசாலை மட்டத்தில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும். அப்போது மாணவர்கள் பாடசாலையை விட்டு வெளியேறும்போது நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதற்கு இலகுவாக அமையும் தெற்காசியாவின் நவீன கல்வி முறைகளை முன்னெடுப்பதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் என்றும் குறிப்பிட்டார்.

————

எதிர்வரும் 9ஆம் திகதி நள்ளிரவு முதல் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க ரயில்வே ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.

ரயில்வே சாரதிகள், ரயில்வே காவலர்கள், ரயில் நிலையப் பொறுப்பதிகாரிகள், ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் ரயில்வே மேற்பார்வையாளர்கள் ஆகியோரே பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே செயற்பாட்டு கண்காணிப்பு அதிகாரிகள் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் லால் ஆரியரத்ன தெரிவித்தார்.

மேற்குறிப்பிட்ட தரங்களைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையினால் ஒப்புதல் அளிக்கப்பட்ட எம்.பீ -1 மற்றும் எம்.பீ -2 சம்பள அளவுத்திட்டக் கொடுப்பனவை வழங்குவதில் தொடர்ந்து காணப்படும் தாமதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

————

வரவு – செலவுத்திட்ட மதிப்பீடுகளில் போதியளவு உண்மைத்தன்மையும், வெளிப்படைத்தன்மையும் இல்லை, தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குறைபாடாக இருக்கின்றது என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்.

இவ்விடயம் தொடர்பில் எமது குழு அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான தகவல்களைக் கோரியிருந்த போதிலும் நிதியமைச்சு அதற்கு ஒத்துழைக்கவில்லை.

தகவல்களை வழங்குவதற்கு அவர்கள் தாமதித்தமையின் காரணமாகவே நாங்கள் அறிக்கை சமர்ப்பிப்பதிலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் எம்.ஏ.சுமந்திரன், எம்முடைய குழு மூன்றாவது வருடமாக இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போதிலும், இவ்வறிக்கையை முன்னிறுத்தி வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் உரை நிகழ்த்தியதில்லை.

இந்த அறிக்கையை சமர்ப்பித்த போது, அதற்கு ஏற்பட்ட காலதாமதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு சிறிய விவாதம் நடந்தது. அதன் மூலமாகவேனும் இப்படியொரு அறிக்கை தமது

மேசைகளின் மீது இருக்கின்றது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கும். எனவே அதனை ஒரு முறையேனும் வாசித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகின்றேன் எனக் குறிப்பிட்டார்.

இவ்வருடத்திற்கான வரவு – செலவுத்திட்டம் கடந்த மாதம் 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அந்த வரவு – செலவுத்திட்டத்தின் ஊகங்களின் உண்மைத்தன்மை, மதிப்பீடுகளின் பொருத்தப்பாடு என்பன தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு ஆராய்ந்து, தமது அறிக்கையை கடந்த மாதம் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையொன்று கடந்த மாதம் 29 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

நிதி மற்றும் நிதிசார் பொருளாதார ஊகங்களின் மதிப்பீடுகள் தொடர்பாகவே இவ்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது வருமானங்கள், செலவீனங்கள் எவ்வாறானதாக அமையும் என்ற ஊகங்களின் அடிப்படையிலேயே வரவு – செலவுத்திட்டம் தயாரிக்கப்படும். அந்த ஊகங்கள் சரியானவையா? அவற்றை செயற்படுத்த முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து, பாராளுமன்றத்திற்கு வெளிப்படுத்துவதே இந்த அறிக்கையின் நோக்கமாகும்.

இதனைத் தொடர்ந்து மற்றொரு அறிக்கையையும் எமது குழு சமர்ப்பிக்க வேண்டியுள்ளதுடன், அதனை நாளை சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக வரவு – செலவுத்திட்ட முன்மொழிவுகள் இருக்கின்றனவா என்பது குறித்து ஆராய்ந்து அந்த அறிக்கை தயாரிக்கப்படும்.

இந்நிலையில் வரவு – செலவுத்திட்டத்தில் பல மதிப்பீடுகள் தவறவிடப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்கு அரசாங்கம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்ற போது, அது வரவு – செலவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடப்பட வேண்டும். அத்தகைய பல்வேறு தாக்கங்கள் தவறவிடப்பட்டுள்ளமையை நாங்கள் சமர்ப்பித்திருக்கின்ற அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டியிருக்கின்றோம்.

அதேபோன்று தெளிவற்ற எதிர் விளைவுகளுடனான சில நிதி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமற்ற மதிப்பீடுகள் குறித்தும், அதற்கான உதாரணங்களையும் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கின்றோம்.

எனவே பாராளுமன்றத்திற்கென வரவு – செலவுத்திட்ட சுயாதீன அலுவலகமொன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் போது தான் அரசாங்க நிதி பற்றிய குழு தமது பொறுப்பை மிகச்சரியாக செய்வதற்கு ஏற்றவாறான வாய்ப்பு ஏற்படும் என்பதையும் எமது குழுவின் அறிக்கையில் வலியுறுத்தியிருக்கின்றோம்.

அத்தோடு நாங்கள் தற்போது சமர்ப்பித்துள்ள முதலாவது அறிக்கையை வரவு – செலவுத்திட்ட வாசிப்பு இடம்பெற்று நான்கு நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். நிதியமைச்சில் இருந்து எமது குழுவிற்கு சரியான தகவல்கள் வழங்கப்படாமை இக்காலதாமதத்திற்கு மிக முக்கிய காரணமாகும்.

அதேபோன்று எமது அரச நிதி பற்றிய குழுவில் அங்கம் வகிப்பவர்களில் பலர் ஒழுங்காக குழுவின் கூட்டங்களுக்கு சமுகமளிப்பதில்லை. இக்காலதாமதம் குறித்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய பந்துல குணவர்தனவும் கூட இதுவரை சமுகமளித்ததில்லை. அதனை நான் குறிப்பிட்ட போது, இது பிரயோசனமற்ற ஒரு குழு எனக் கூறினார்.

எனவே அரசாங்க நிதி பற்றிய குழு பிரயோசனமற்றது என அவரே தீர்மானித்தமையால் அவரை இந்தக் குழுவிலிருந்து விலகுமாறு நான் கேட்டுக்கொண்டிருக்கின்றேன்.

மேலும் எம்முடைய குழு மூன்றாவது வருடமாக இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள போதிலும், இவ்வறிக்கையை முன்னிறுத்தி வரவு – செலவுத்திட்ட விவாதத்தில் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் உரை நிகழ்த்தியதில்லை. இந்த அறிக்கையை சமர்ப்பித்த போது, அதற்கு ஏற்பட்ட காலதாமதம் தொடர்பில் பாராளுமன்றத்தில் ஒரு சிறிய விவாதம் நடந்தது.

அதன் மூலமாகவேனும் இப்படியொரு அறிக்கை தமது மேசைகளின் மீது இருக்கின்றது என்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத்தெரிந்திருக்கும். எனவே அதனை ஒரு முறையேனும் வாசித்துப் பார்ப்பார்கள் என்று நம்புகின்றேன் என்று குறிப்பிட்டார்.

Related posts