அன்பு திருமணத்திற்கு பின்னர் மாறும் சமந்தா + ட்ரெய்லர்

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகரான நாகர்ஜுனா மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு சமந்தா தொடர்ச்சியாக நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

கணவன் – மனைவியாக இருவரும் இணைந்து நடித்துள்ள தெலுங்குப் படம் ‘மஜிலி’. நேற்று (மார்ச் 31) வெளியிடப்பட்ட இப்படத்தின் ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இணைந்து நடித்தது, ஏன் இவ்வளவு காலம் கழித்து இணைந்து நடித்தேன் என்ற கேள்விக்கு சமந்தா கூறியிருப்பதாவது:

நாங்கள் சேர்ந்து நடித்தால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். அந்த எதிர்பார்ப்பை எங்களால் பூர்த்தி செய்ய முடியாது. நானும் சைதன்யாவும் மரத்தைச் சுற்றிப் பாடிக்கொண்டிருந்தால் யாரும் பார்க்க மாட்டார்கள். நாங்கள் இன்னொரு படம் சேர்ந்து நடிக்க வேண்டுமென்றால், அது வித்தியாசமாக இருக்க வேண்டும்.

‘மஜிலி’ அப்படி ஒரு படம். எனக்குத் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. திருமணத்துக்கு முந்தைய அன்புக்கும், பிந்தைய அன்புக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண்ணுக்கும், அவள் கணவருக்கும், கணவரின் குடும்பத்திற்கும் இடையே இருக்கும் அழகிய உறவைக் காட்டும் படம் ‘மஜிலி’.

இவ்வாறு சமந்தா தெரிவித்துள்ளார்.

Related posts