அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்?

உயர்ந்த மனிதன்’ படத்தில் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. மிஷ்கின் மனைவியாகவும், ஆபாசப்பட நடிகையாகவும் இந்தப் படத்தில் நடித்தார் ரம்யா கிருஷ்ணன். தியாகராஜன் குமாரராஜா இயக்கிய இந்தப் படத்தில், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், சமந்தா, அஸ்விந்த் ஆகியோர் நடித்தனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இந்தப் படத்துக்கு, கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. ‘இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் வெளிவருவது மிகப்பெரிய விஷயம்’ என ஒரு சாரார் கொண்டாடிக் கொண்டிருக்க, ‘ஒரே ஆபாசமாக இருக்கிறது’ என மற்றொரு சாரார் இந்தப் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில், மகனின் சிகிச்சைக்காக ஒவ்வொருவரிடமும் பணம் கேட்கும் காட்சியில் தன்னுடைய நடிப்பால் அசரடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன். படம் பார்த்தவர்கள் அவருடைய நடிப்பைப் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அடுத்ததாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கள்வனின் காதலி’ படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கும் இந்தப் படத்துக்கு ‘உயர்ந்த மனிதன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடிக்கும் இந்தப் படம், தமிழ் மற்றும் இந்தி என இரண்டு மொழிகளில் உருவாகிறது.

Related posts