ஐரா: தமிழகத்திலிருந்து முதல் பார்வை

பேய் இருப்பது போன்று வீடியோக்களை எடுத்து மக்களை ஏமாற்றி யூ டியூபில் காசு பார்க்கும் நயன்தாரா, நிஜமாகவே பேயிடம் சிக்கினால்..?

மீடியாவில் வேலை பார்க்கும் யமுனாவுக்கு, பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். யூ டியூப் ஆரம்பிக்கலாம் என்ற அவரது ஐடியாவை, அலுவலகத்தில் ஏற்க மறுக்கின்றனர். இதனால் வெறுத்துப்போய் பொள்ளாச்சியில் இருக்கும் தன் பாட்டி வீட்டுக்குப் போகிறார் யமுனா.

பாட்டி வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில், தன் நிழலைப் பார்த்து தானே பயப்படும் யமுனாவுக்கு, இதையே வீடியோவாக்கி காசு பார்க்கலாம் என்ற ஐடியா தோன்றுகிறது. அதன்படி தன் பாட்டி மற்றும் யோகி பாபுவுடன் பேய் வீடியோ எடுத்து யூ டியூபில் பிரபலமாகிறார் யமுனா.

ஒருநாள் நிஜமாகவே பேய்வந்து யமுனாவைத் துன்புறுத்த, அதிர்ச்சியாகிறார்.

இன்னொரு பக்கம், சென்னையில் வசிக்கும் அமுதனைச் சுற்றி மர்ம மரணங்கள் நிகழ்கின்றன. அவர் சம்பந்தப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர். அதற்கான காரணம் புரியாமல் பரிதவிக்கிறார் அமுதன்.

இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனத் தெரியவரும்போது, ஃப்ளாஷ்பேக் விரிகிறது. மர்ம மரணங்களுக்கும் யமுனாவுக்கும் என்ன சம்பந்தம்? யமுனாவைப் பேய் துரத்துவது ஏன்? பேயிடம் இருந்து யமுனா தப்பித்தாரா, இல்லையா? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது இரண்டாம் பாதி திரைக்கதை.

யமுனா, பவானி என முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. ஸ்டைலிஷ் சிட்டி கேர்ள் யமுனா, கிராமத்துக் கருப்பழகி பவானி என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் நிறையவே வித்தியாசம் காட்டியுள்ளார் நயன்தாரா. அதுவும் அந்தக் கிராமத்துக் கருப்பழகி பவானி, துடைத்துவைத்த குத்துவிளக்கு போல் ‘பளிச்’சென இருக்கிறார். அந்தக் கதாபாத்திரத்துக்காக விதவிதமான உணர்ச்சிகளை வெளிக்காட்டி, தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறார். குறிப்பாக, அவரைப் பெண் பார்க்கும் படலத்தில் நயன்தாரா வெட்கப்படும் இடங்கள் கொள்ளை அழகு.

படம் முழுக்க நயன்தாராவே நிறைந்திருக்க, கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்துள்ளார் கலையரசன். அவரின் பாத்திரப்படைப்பு கச்சிதமாக இருந்தாலும், இன்னும் கொஞ்சம் அவருக்கும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது. ‘கோலமாவு கோகிலா’ வெற்றி சென்டிமென்டால் யோகி பாபுவுக்கு நான்கைந்து காட்சிகளைப் புகுத்தியுள்ளனர். ஆனால், சிரிப்பே வரவில்லை. நயன்தாராவின் பாட்டியாக நடித்திருக்கும் குலப்புள்ளி லீலா, அப்பா ஜெயப்பிரகாஷ், அம்மா மீரா கிருஷ்ணன் ஆகியோர் சில காட்சிகளில் வந்து போயுள்ளனர்.

திரைக்கதையின் சொதப்பல், படத்துக்கு மிகப்பெரிய பலவீனம். படத்தின் இடைவேளையில்தான் கதைக்குள்ளேயே செல்கிறார்கள். அதற்குள் பார்வையாளர்களில் பாதி பேர் தூங்கி விடுகின்றனர். ஏகப்பட்ட லாஜிக் சொதப்பல்கள். நயன்தாரா பிறந்ததும், ஊரைக்கூட்டி சாப்பாடு போட்டு, நயனின் பெற்றோர் அவரைத் தூக்கிக்கொண்டு சென்னைக்குக் கிளம்பி விடுகின்றனர். அப்போதுதான் நயனைக் கடைசியாகப் பார்த்தேன் என பாட்டி கூறுகிறார். ஆனால், சில வருடங்கள் வளர்ந்த பிறகும்கூட தன் பெற்றோருடன் பாட்டி வீட்டில் நயன் இருக்கும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன.

அதேபோல், ஃப்ளாஷ்பேக் ஆரம்பித்தால், முழுவதுமாக அதைச் சொல்லி முடித்துவிட்டு, அதன்பிறகு நிகழ்கால கதைக்குள் வரலாம். ஆனால், ஃப்ளாஷ்பேக் கொஞ்சம், நிகழ்காலம் கொஞ்சம் என மாற்றி மாற்றிப் பயணிப்பது, படம் பார்ப்பவர்களுக்கு அயற்சியை உண்டாக்குகிறது.

இரவில்தான் பேய் வரும் என்ற ஆதிகாலத்து மரபை இன்னும் பின்பற்றுவதும், அதற்கு ஏற்றதுபோல் எல்லாக் காட்சிகளும் இரவில் நடப்பதாக அமைத்திருப்பதும் போரடிக்கிறது. சும்மா சும்மா பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டு வெறுப்பேற்றும்போது, ‘முதல்ல அந்த பட்டாம்பூச்சிய கொல்லுங்கடா’ என்ற குரல்கள் தியேட்டரில் ஒலிக்கின்றன.

சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு, பொள்ளாச்சியின் அழகை அதிஅற்புதமாகப் படம்பிடித்திருக்கிறது. ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியும் போட்டிபோட்டு இருளின் திகிலை நமக்குள் கடத்த முயற்சி செய்துள்ளனர். பொள்ளாச்சியைக் காண்பிக்கும்போது ஒவ்வொரு முறையும் காற்றாலை, வயல்வெளி என்று இழுப்பதைக் கத்தரித்திருக்கலாம்.

வழக்கமான பேய் பழிவாங்கும் கதை, அதன் முடிவு எப்படியிருக்கும் என்று தெரிந்த கதையில், எதற்காகக் பழிவாங்கத் துடிக்கிறது என்பது மட்டுமே சுவாரஸ்யமாக இருக்கும். ஆனால், சுவாரஸ்யம் தெரிய வரும்போது, ‘இதுக்கெல்லாமா பேய் பழிவாங்கும்?’ என்று உப்புச் சப்பில்லாமல் போகிறது. ஒருவேளை அந்த விஷயம் நடந்திருந்தால், அடுத்தடுத்து மகிழ்ச்சியான தருணங்கள் அமைந்திருக்கும் என்று காண்பித்தாலும், மனது ஏனோ இந்தப் பழிவாங்கலை ஏற்றுக் கொள்ளவில்லை.

பலம் பொருந்திய ‘ஐராவதம்’ யானையின் பெயரில் இருந்து இந்தப் படத்துக்கு ‘ஐரா’ எனத் தலைப்பு வைத்திருப்பதாகக் காரணம் சொன்னார் இயக்குநர் கே.எம்.சர்ஜுன். நயன்தாரா எனும் வெற்றி யானைக்கு, இந்தப் படத்தில் அடி சறுக்கியிருக்கிறது.

Related posts