ராவணன் ராகுல் காந்தி பிரியங்கா சூர்ப்பனகை ?

சூர்ப்பனகையின் உதவியை நாடிய ராவணன் போல தற்போது ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்காவின் உதவியை தக்கநேரத்தில் நாடியுள்ளார் என்று ராஜஸ்தான் மாநில பாஜக துணைத் தலைவர் கியான் தேவ் அஹூஜா தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

செவ்வாயன்று அல்வார் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு அஹுஜா பேசியதாவது:தற்போது நடந்துகொண்டிருக்கும் கலியுகத்தில் பாபா ராகுல் காந்திக்கு தக்க நேரத்தில் உதவி செய்ய அவரது தங்கை பிரியங்கா காந்தி வந்துள்ளார். முடிவில் ஹோலிகா மற்றும் சூர்ப்பனகைக்கு என்ன நடந்தது என்று நான் சொல்லத் தேவையில்லை. ஆனால் அது என்னவென்று எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். சூர்ப்பனகைக்கு நடந்தது பிரியங்காவுக்கு நடக்கும்.

ராகுல் காந்தியும் பிரியங்காவும் இன்று கோவில் கோவிலாக செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்றால் அதற்கான சூழ்நிலையை உருவாக்கியது பிரதமர் மோடிதான். அவர்களது குடும்பம் முழுக்க நாத்திகக் குடும்பம். அவர்கள் இன்று அரசியலுக்காக கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால் பொதுமக்கள் இந்த தந்திர வலையில் விழ மாட்டார்கள்.

இவ்வாறு ராஜஸ்தான் பாஜக துணைத் தலைவர் அஹுஜா பேசினார்.

ராஜஸ்தானில் வரும் ஏப்ரல் 29 அன்று மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து மே 6 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

ராஜஸ்தான் பாஜக மாநில துணைத் தலைவரின் இப்போச்சு மாநிலத்தில் காங்கிரஸ் தொண்டர்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

Related posts