டென்மார்க்கில் புதிய வைத்தியத் துறை சீர்திருத்தம் வருகிறது

டென்மார்க்கில் வரும் யூன் 17ம் திகதிக்கு முன்னதாக போல்கதிங் எனப்படும் டேனிஸ் பாராளுமன்ற தேர்தலை நடத்தியாக வேண்டும்.

கருத்துக் கணிப்பில் செல்வாக்கிழந்து செல்லும் டேனிஸ் மக்கள்கட்சி, ஆளும் வென்ஸ்ர கட்சி என்பன தேர்தல்கால நாடகத்தை ஆடி தமது இருத்தலை காப்பாற்ற வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இதுவரை எங்கே பணத்தை வெட்டலாம் என்று வேலை பார்த்த கட்சிகள் தேர்தல் வருவதால் இனி எங்கே பணத்தை கொட்டலாம் என்பதற்கான வேலையை ஆரம்பித்துள்ளன.

எதிர்வரும் மூன்றாண்டு காலத்திற்கு வைத்தியத்துறையை மேம்படுத்த 8500 கோடி குறோணர்களை அதாவது வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கிய பணத்தை விட மேலதிகமாக ஒதுக்க இருக்கிறார்கள்.

இந்தப் பணத்தை எங்கிருந்து தேடுவது..?

வெளிநாட்டவருக்கு உதவும் இணைவாக்கம், மற்றயது வேலை வாய்ப்பு உதவித்துறையில் பயன்படுத்தும் பணம் ஆகிய இரண்டையும் மடை மாற்றம் செய்வதன் மூலமாக பணத் தேவையை நிரவல் செய்ய இருக்கிறார்கள்.

ஒருபுறம் வெளிநாட்டவர் உதவிகளை குறைக்கிறோம் பார் என்ற வீறாப்பை பேசவும், மறுபுறம் வைத்தியத்துறைக்கு செலவிடுகிறோம் பார் என்று மார் தட்டவும் வசதியாக இந்தத் தீர்மானம் போடப்பட்டுள்ளது.

அதாவது ஒரே வீச்சில் இரண்டு கனிகள்.. மறுபுறம் பழம் நழுவி பாலிலும் விழ வேண்டும் விழுமா தெரியவில்லை.

வைத்தியத்துறையில் இப்போது கல்வி கற்று வெளியேறும் வைத்தியர்களை விட மேலும் 160 வைத்தியகற்கை இடங்களை அதிகரிப்;பர் பல்கலைக்கழகங்களில், அதுபோல மருத்துவதாதிகள் (நர்ஸ்கள்) படிப்பு படித்து வெளியேறுவோர் தொகை மேலும் 2000 ஆல் உயர்த்தப்படவுள்ளது. ( மூன்று வருடங்களில் )

புஸியோ தெரபியிடம் போவதற்கு இனி வைத்தியர் கடிதம் தேவையில்லை. பிராந்திய ஆலோசனைச் சபை இனி இல்லை, நோயாளிகள் தொடர்பாக 21 புதிய அமைப்புக்கள் வருகின்றன.

சிறந்த வைத்திய சேவையை வழங்க வேண்டும் என்பது இந்த சீர்திருத்தங்களின் நோக்கம் என்கிறார் டேனிஸ் ஸ்ரேற்மினிஸ்டர், ஆனால் எதிர்க்கட்சி தலைவரோ அப்படியல்ல மருத்துவத்துறையை ஒரு மத்திய நிலையத்தின் கீழ் கொண்டு வரவேண்டும் என்கிறார்.

பொதுவாக ஒரு கட்சி இரண்டு தடவைகளுக்கு மேல் ஆட்சியில் இருப்பது குறைவு அந்த வகையில் இந்தத் தடவை சோசல் டெமக்கிரட்டிக்கு மக்கள் ஒரு வாய்ப்பை வழங்குவார்கள் போல கருத்துக்கணிப்புக்களின் காட்சிகளில் உணர முடிகிறது. இருப்பினும் கடைசி வரை உறுதியாக சொல்ல முடியாது என்றே அனைவரும் உச்சரிக்கின்றனர்.

அலைகள் 27.03.2019

Related posts