பிரிக்க முடியாதது அரசியலும் – சினிமாவும்…

சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவதும், அரசியலில் இருப்பவர்கள் நடிக்க வருவதும் சாதாரணமாகிவிட்டது. சினிமாவில் இருப்பவர்களை அரசியலுக்கு வரவழைத்து பிள்ளையார் சுழி போட்டது காங்கிரஸ்தான். அதன்பின் பாஜக.வும் அதை பின்பற்றியது. இப்போது திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியும் அந்தப் பாணியை கையில் எடுத்துள்ளார்.

இவர்கள் நோக்கம் எல்லாம் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு மக்களைக் கவரும் முகங்கள் வேண்டும். அனுபவம் எல்லாம் தேவையில்லை. கொள்கைகளைப் பற்றி கவலை இல்லை. வந்தால் போதும்… பாதி நாங்கள் கற்றுத்தருவோம்… மீதி நீங்களே கற்றுக் கொள்வீர்கள் என்பதுதான் அரசியல் தலைவர்களின் அறிவுரையாக இருக்கிறது. பணம், புகழ், செல்வாக்கு என நடிகர், நடிகைகள் இருந்தாலும், எம்.பி., அமைச்சர் என்ற அடைமொழிக்கும் ஆசைப்பட்டுதான் பலர் அரசியலுக்கு வருகின்றனர்.

படங்கள் தோற்றாலும்… தேர்தலில் வெற்றி…

அதற்கேற்ப பல தோல்வி படங்களைக் கொடுக்கும் நடிகர், நடிகைகள் கூட தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்துள்ளனர். ஆனால், நாடாளுமன்றத்தில் அவர்களுடைய செயல்பாடுகள் எப்படி என்று மட்டும் கேட்க கூடாது. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்தால் பல நாட்கள் பலர் வர மாட்டார்கள். வந்தாலும் பேச மாட்டார்கள். அதைப் பற்றி எல்லாம் எந்தக் கட்சிக்கும் கவலையில்லை. அவர்களுக்கு தேவை எண்ணிக்கை. அந்த எண்ணிக்கையை எட்டுவதற்கு பிரபலமானவர்களைத் தேர்தலில் போட்டியிட வைப்பது ஒருவழி. அதைத்தான் பெரும்பாலான கட்சிகள் ஒவ்வொரு தேர்தலில் செய்கின்றன.

அந்த வரிசையில் இப்போது இணைந்திருப்பவர்கள் திரிணமூல் சார்பில் ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மிமி சக்ரவர்த்தி, பசிர்ஹத் தொகுதியில் போட்டியிடும் நுஸ்ரத் ஜஹான். இவர்கள் இருவரும் பெங்காலி நடிகைகள். அரசியலுக்கும் இருவர்களுக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால், அரசியலில் இவர்களை ‘அறிமுகம்’ செய்திருக்கிறார் மம்தா.

தெலுங்கு நடிகர் கோங்கரா ஜக்கய்யாவைத்தான் காங்கிரஸ் முதன் முதலில் அரசியலுக்கு அழைத்து வந்துள்ளது. ஓங்கோல் தொகுதியில் போட்டியிட்டு இவர் எம்.பி.யானவர். அது நடந்தது 1967-ம் ஆண்டு. அப்போது 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார் ஜக்கய்யா.

அதன்பிறகு ஒவ்வொரு கால கட்டத்திலும் அரசியல் கட்சிகளில் நடிகர்கள், நடிகைகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. அந்த வரிசையில் அமிதாப்பச்சன், கடந்த 1984-ம் ஆண்டு அலகாபாத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பகுகுணாவை விட ஒரு லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றார் அமிதாப்.

அதேபோல் காங்கிரஸ் சார்பில் 84-ல் வடமேற்கு மும்பை தொகுதியில் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று நடிகர் சுனில் தத் சாதனை படைத்தார். அதன்பின் வைஜெயந்தி மாலா காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து எம்.பி.யானார்.

பாஜக.வைப் பொறுத்த வரை தீபிகா சிக்காலியாவை அரசியலில் அறிமுகப்படுத்தியது. தொலைக்காட்சியில் ராமாயணம் தொடரில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தீபிகா. அவர் கடந்த 1991-ம் ஆண்டு பரோடா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சீதையாக நடித்த தீபிகா வெற்றி பெற்றதை போலவே, ராவணனாக நடித்த அர்விந்த் திரிவேதியும் சபர்கந்தா (குஜராத்) தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோற்றவர்களும் உண்டு

அதன்பிறகு ராஜேஷ் கன்னா (காங்.), மகாபாரதத்தில் கிருஷ்ணராக நடித்த நிதிஷ் பரத்வாஜ் ( பாஜக), வினோத் கன்னா (பாஜக சார்பில் 4 முறை எம்.பி.யானவர்), தெலுங்கு நடிகர்கள் கே.சத்யநாராயணா (தெலுங்கு தேசம்), கிருஷ்ணம் ராஜு (பாஜக), கன்னட நடிகர் அம்பரீஷ் (காங்.), சத்ருகன் சின்கா (பாஜக), ராஜ் பப்பர் (சமாஜ்வாதி, காங்கிரஸ்), ஜெயப்ரதா (சமாஜ்வாதி), கோவிந்தா (காங்.), தர்மேந்திரா (பாஜக), விஜயசாந்தி (தெலங்கானா ராஷ்டிரிய சமிதி),நெப்போலியன் (திமுக), திரிணமூல் கட்சியைச் சேர்ந்த சதாப்தி ராய், மூன் மூன் சென், தபஸ் பால், சந்தியா ராய், பாஜக.வைச் சேர்ந்த ஹேமமாலினி, பபுல் சுப்ரியோ என தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர், நடிகைகள் பட்டியல் பெரிது.

இதில் சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் பலர் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியையும் சந்தித்துள்ளனர். அவர்களில் ஸ்மிருதி இரானியும் ஒருவர். ஆனால், பாஜக ஆட்சியில் அவர் மத்திய அமைச்சராகி விட்டார்.

தவிர அரசியலில் கட்சிகளில் நடிகர், நடிகைகள் பலர் பிராந்திய அளவில் எம்எல்ஏ.க்களாகி உள்ளனர். பலர் கட்சியில் ஏதாவது ஒரு பதவியில் இருக்கின்றனர். எந்த மாநிலத்தை எடுத்தாலும், சினிமா துறையை சார்ந்தவர்கள் இல்லாத கட்சியைப் பார்ப்பது கடினம். அந்தளவுக்கு அரசியலும் சினிமாவும் பிரிக்க முடியாத அளவுக்கு மாறி உள்ளன.

Related posts