மலேசியாவில் தமிழர் தேசிய ஒளியூட்டி நாள் சிறப்பாக நடைபெற்றது.

24 மார்ச்
தமிழர் தேசிய கருத்தியலை உருவாக்கி, தமிழினத்தின் மீட்சிக்கு வழியகாட்டிய, தமிழர் தேசிய தந்தை தோழர் செல்வா பாண்டியர் அவர்களுக்கு, மலேசியாவில் முதலாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது.

தமிழர் தேசிய இயக்கமான தமிழர் களம் மலேசியா மற்றும் தமிழர் நடுவம் மலேசியா அமைப்புகளின் ஏற்பாட்டில் SENTUL CURRY HOUSE உணவக அரங்கில் நடைபெற்ற இந்நினைவேந்தல் கூட்டத்திற்கு தலைமையேற்று வழிநடத்த முன்னாள் துணை அமைச்சர் TAN SRI DATO க.குமரன் அவர்கள் சிறப்பு வருகையாளராக கலந்து கொண்டார்.

தமிழர் களம் அமைப்பாளர் தமிழ்ப்புகழ் குணசேகரன் நிகழ்ச்சி நெறியாளராக இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். திருவிளக்கு ஏற்றி இறை வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கலந்துகொண்ட அனைவரும் பாண்டியருக்கு ஒளி தீபம் ஏற்றி மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ்ப்புகழ் குணசேகரன் வரவேற்புரையும், தமிழர் நடுவம் மலேசியா அமைப்பாளர் மருத்துவர் ஆனந்தராஜன் அவர்கள் தலைமை உரையும், தமிழர் களம் மலேசியா அமைப்பின் தலைமை பொறுப்பாளர் அர.எழிலன் கருத்துரையும் மற்றும் TAN SRI DATO க.குமரன் சிறப்புரையும் ஆற்றினர்.

ஒளியூட்டி நாள் நிகழ்ச்சியில் இரு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. முன்னாள் துணை அமைச்சர் TAN SRI DATO க.குமரன் தலைமையில் தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் தபால் தலை வெளியிடப்பட்டது. இதை தமிழர் களம் அர.எழிலன் வெளியிட, தமிழர் நடுவத்தின் மருத்துவர் ஆனந்தராஜன் பெற்றுக்கொண்டார்.

அதையடுத்து தமிழர் தேசிய தந்தை செல்வா பாண்டியரின் அறிவுக் கூர்மையையும், ஆளுமையையும், ஆற்றலையும் தமிழர்களிடம் கொண்டு சேர்க்க, டென்மார்க்கை சேர்ந்த எழுத்தாளர் தோழர் கி.செ.துரை அவர்களால் எழுத்தப்பட்ட “பாண்டிய நிலா” எனும் காவிய நூலும் வெளியிடப்பட்டது. இந்நூலை முன்னாள் துணை அமைச்சர் TAN SRI DATO க.குமரன் அவர்கள் வெளியிட, தமிழர் நடுவத்தின் ப.சுரேந்திரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். மேலும் டென்மார்க்கிலிருந்து பாண்டிய நிலா நூல் ஆசிரியர் கி.செ.துரை அனுப்பி வைத்த வாழ்த்துரையும் ஒலிபரப்பப்பட்டது.

தமிழ்ப்புகழும், மருத்துவர் ஆனந்தராஜனும் பேசுகையில், இப்போது கூட செல்வா பாண்டியர் இங்கே தான் இருக்கின்றார். பேரொளி வீசி நம்மை வழிநடத்தும் பாண்டிய நிலாவாக என்றது, பாண்டியரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது என்பதையும் அவர் என்றும் நம்மை வழிநடத்தும் ஒளியாக இருக்கின்றான் என்பதையும் உணர்த்தும் வகையாக இருந்தது.

தமிழர்களின் இனமீட்சிக்காகவும், உலகளவில் தமிழர்கள் ஆளுமை செலுத்த அறிவார்ந்த கட்டமைப்பை அமைத்து தரவும், ஓய்வின்றி உழைத்து இன்று பேரொளியாய் நின்று வழிநடத்தும் அந்த பாண்டிய நிலா காட்டும் வெளிச்சத்தில் பயணிப்போம் என உணர்வுப்பூர்வமாகவும் எழுச்சிப்பூர்வமாகவும் உரையாற்றி தமிழ்ப்புகழ் குணசேகரன் நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.

Related posts