பிரிட்டனில் இலட்சக்கணக்கானவர் வீதியில் இறங்கி ஆர்பாட்டம்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது தவறு, தொடர்ந்து அதிலேயே இருக்க வேண்டுமென இலட்சக்கணக்கான மக்கள் வீதிக்கு இறங்கி ஆர்பாட்டம் செய்துள்ளார்கள்.

புற் இற் ரு த பீப்பிள் என்ற மக்கள் அமைப்பு இந்த ஆர்பாட்டத்தை முன்னெடுத்தது. ஆர்பாட்டமானது பிரிட்டன் பாராளுமன்ற முன்றல் வரை சென்றது.

இந்த ஊர்வலத்தில் லண்டன் மேயர் சாடிக்கானும் பங்கேற்றிருந்தார். இவர் பாகிஸ்தானை பின்னணியாகக் கொண்டவர் என்பதும், தொழிற்கட்சியை சேர்ந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது. அமெரிக்க அதிபருக்கு வேண்டாத ஒருவராகவும் இருக்கிறார்.

இந்த ஊர்வலத்தில் வடக்கு இங்கிலாந்து ஸ்கொட்லாந்து ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் அதிகம் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதா இல்லையா என்ற வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென 4.2 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு கோரிக்கை முன் வைத்திருந்தார்கள்.

பிரிட்டன் பிரதமர் தெரேசா மே ஏற்கெனவே புதிய வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று மறுத்துள்ளார்.

இந்த போராட்டக்காரர்களின் கோரிக்கை இன்னமும் பிரிட்டன் பாராளுமன்றின் இதயப்பகுதிக்குள் போனதாகக் கூற முடியாது என்கிறார்கள் நிருபர்கள்.

எதிர் வரும் மே 23 ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றுக்கான தேர்தல்.. அதற்குள் பிரிட்டன் வெளியேற வேண்டும்.. என்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுள்ளது. பிரிட்டனின் வரும் ஏப்ரல் 12 இது தொடர்பான வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.

தொகுத்துப் பார்த்தால் பிரிட்டன் பலத்த நெருக்கடியில் சிக்குண்டுவிட்டதையே இப்போதைய நிகழ்வுகள் காட்டுகின்றன. அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா இல்லை சொந்த நாட்டை பார்ப்பதா இல்லை ஐரோப்பிய ஒன்றியத்தை பார்ப்பதா என்று மூன்று தோணிகளில் கால் வைத்து தடுமாறுகிறது பிரிட்டன்.

வலக்கால் அமெரிக்காவில்.. இடக்கால் ஐரோப்பிய ஒன்றியத்தில்.. இரண்டு கைகளும் இன்னொரு படகிலுமாக நிற்கிறது எனலாம்.

பிரிட்டனில் இது போன்ற சிக்கல் சமீப காலங்களில் இடம் பெறவில்லை. மிகவும் ஸ்திரத்தன்மை கொண்ட இரும்பு நாடாக இருந்தது. பிரிட்டன் பிரிகிறதோ இல்லையோ சூரியன் அஸ்த்தமிக்காத சாம்ராஜ்யத்திற்கு இப்படியொரு சோதனையா என்பதே உலக நாடுகளின் கவலை.

2003 ம் ஆண்டு மார்ச் 23 திகதி..

ரொனி பிளேயர் யாரையும் கேட்காமல் அமெரிக்காவுடன் சேர்ந்து ஈராக்கிற்கு படை கொண்டு சென்றார். அதுபோல ஓர் அதிரடி முடிவு எடுக்காவிட்டால் இந்த சிக்கலில் இருந்து விடுபட இயலாது என்று ஐரோப்பிய ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார்.

அலைகள் 23.03.2019

Related posts