2020 இற்குள் வீடில்லாத ​அனைவருக்கும் சொந்த வீடுகள்

2020ஆம் ஆண்டாகும்போது நாட்டில் இருப்பிடம் இன்றி வாழ்ந்து வரும் ஒவ்வொருவருக்கும் வீடொன்றினைப் பெற்றுக் கொடுக்கும் திறன் எம்மிடமுள்ளது என வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் லுனுகம்வெஹெரை பிரதேச செயலகப் பிரிவில் மத்தலையில் நிர்மாணிக்கப்பட்ட 180வது சியத்லங்கா கம கம் உதாவ உதாகம மாதிரிக் கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், என்னதான் சேறுபூசல்களும் பொய் பிரசாரங்களையும் மேற்கொண்டாலும் எமது நாட்டில் வீடில்லாமல் இருந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக மேற் கொள்ளப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்தினை ஒரு போதும் நிறுத்தப் போவதில்லை.

எமது நாட்டில் வீடில்லாமல் வாழ்ந்து வரும் பல இலட்சக் கணக்கான மக்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் எமது வீடமைப்பு திட்டத்தினை ஆரம்பிக்கும் போது தனக்கென்று வாழ்வதற்கு இலவசமாக காணியை வழங்கி அதில் வீட்டினை நிர்மாணித்துக் கொள்வதற்காக கடனை வழங்கவும் நடவடிக்கை எடுத்தும் எமது எதிர் தரப்பினர் எமக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்களை மேற் கொண்டு வருகின்றனர்.

நாம் முன்னெடுத்துவரும் இந்த வீடமைப்பு திட்டத்தினூடாக வீடில்லாமல் இருந்த எத்தனைபேர் இன்று வீடுகளைப் பெற்று குடும்பத்தாருடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், இன்று பொய் பிரசாரங்களை மேற்கொண்டு கத்தித் திரிவோர் பதவியில் இருந்தபோது மக்களுக்காக எத்தனை வீடுகளை நிர்மாணித்துக் கொடுத்தார்கள்? இவர்கள் எமது நாட்டில் வாழக் கூடிய ஏழை மக்களுக்காக அன்றி தங்களுக்கும் தங்களது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்குமே நாட்டிலுள்ள காணிகளையும் வீடுகளையும் வழங்கினார்கள். இதற்கு மாற்றமாக எமது நல்லாட்சி அரசாங்கத்தினூடாக நாம் முன்னெடுக்கும் சேவைகளை திசைதிருப்ப இவர்கள் திட்டம் வகுத்து வருகிறார்கள்.இதற்கு இந்த நல்லாட்சி ஒருபோதும் பயப்படாது. எமது வீடமைப்பு கிராமங்களுக்கு புதிய சட்டமொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளோம். எமது மாதிரிக் கிராமங்களில் வீட்டினை பெற்று அதில் வசிக்காதவர்களது வீடுகளை திருப்பிப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts