அஜித்துடன் நடித்த அனுபவம்: மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே

அஜித்துடன் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே.

அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ இந்திப் படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே. ‘சாணக்யா’ என்ற யூ டியூப் சேனலைத் தொடங்கியுள்ள ரங்கராஜ் பாண்டே, அந்த சேனலுக்கு அளித்த பேட்டியில், “எல்லோரும் சொல்வதுபோல அவர் அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் பழகுகிறார்.

பழகக்கூடிய நண்பர்களுக்கு, உயிரைக் கொடுக்கக்கூடிய இடத்தில் இருக்கிறார். நிறைய ஆச்சரியங்கள் நிறைந்த மனிதராக இருக்கிறார். அதை நான் அனுபவித்தும் இருக்கிறேன். 15 நாட்கள், காலை முதல் மாலை வரை அன்றாடம் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவம்” என்று தெரிவித்துள்ளார்.

Related posts