அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும்

திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும் எனவே அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என சுசிந்தரன் அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன் கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இதுதான் 100% சரியான தருணம் வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு… உங்களுக்காக காத்திருக்கும்,பலகோடி மக்களின் நானும் ஒருவன் என சுசீந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த டுவீட் நேற்றிரவே ட்ரெண்டாக தொடங்கியது.

இது தொடர்பாக அஜித் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். ஏற்கனவே அஜித் தெரிவித்திருந்ததையே அவரது ரசிகர்களும் தற்போது உறுதிபட தெரிவித்து அதனை ட்ரெண்டாக்கியுள்ளனர்.

“அரசியலுக்கு நடிகர் அஜித் வரவேண்டும் என இயக்குநர் சுசீந்திரன் அழைப்பு விடுத்த நிலையில், ‘அரசியல் வேண்டாம் அஜித்தே போதும்’ என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

தனது அரசியல் நிலைப்பாட்டை கடந்த ஜனவரி 21ஆம் தேதியே அறிக்கை மூலம் அஜித் தெளிவாக தெரிவித்திருந்தார். அதில், நான் தனிப்பட்ட முறையிலோ அல்லது நான் சார்ந்த திரைப்படங்களில் கூட அரசியல் சாயம் வந்துவிடக் கூடாது என்பதில் மிகவும் தீர்மானமாக உள்ளவன் என்பது அனைவரும் அறிந்ததே. என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே என்பதை நான் தெளிவாக புரிந்து வைத்து இருப்பதே இதற்கு காரணம். சில வருடங்களுக்கு முன்னர் என் ரசிகர் இயக்கங்களை நான் கலைத்ததும் இந்தப் பின்னணியில்தான். என் மீதோ, என் ரசிகர்கள் மீதோ, என் ரசிகர் இயக்கங்களின் மீதோ எந்தவிதமான அரசியல் சாயம் வந்துவிட கூடாது என்று நான் சிந்தித்ததின் சீரிய முடிவு அது.

என்னுடைய இந்த முடிவுக்கு பிறகு கூட சில அரசியல் நிகழ்வுகளுடன் என் பெயரையோ, என் ரசிகர்கள் பெயரையோ சம்பந்தப்படுத்தி ஒரு சில செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. தேர்தல் வரும் இந்தத் நேரத்தில் இத்தகைய செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என்ற ஐயப்பாட்டை பொதுமக்கள் இடையே விதைக்கும் என்று தெளிவாக கூறியிருந்தார். மேலும், என் பெயரோ, என் புகைப்படமோ எந்தவெரு அரசியல் நிகழ்விலும் இடம்பெறுவதை நான் சற்றும் விரும்புவதில்லை என்றும் நடிகர் அஜித் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts