பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம் சத்யராஜ்

அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம் என்று பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சத்யராஜ், பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படி உட்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும். அதுதான் என்னுடைய கோரிக்கை. இப்படி செய்ய எப்படி மனம் வருகிறது என்று தெரியவில்லை.

மனநலம் பற்றிய பாடங்கள் பள்ளியிலிருந்தே இருக்க வேண்டும் என்பது என் தாழ்மையான அபிப்ராயம். இதனால் மட்டுமே இத்தகைய மிருகங்கள் மாறிவிடுவார்கள் என்பதை நான் நம்பவில்லை. இது போன்ற கொடூரமானவர்களுக்கு வகுப்பெடுக்க முடியாது. திருத்த முடியாது. தண்டிக்கத்தான் முடியும். சட்டப்படியாக, உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று மனவலியுடன் கூறிக்கொள்கிறேன்.

பள்ளியிலேயே அடிப்படையாக மனநல மருத்துவத்தை கற்பிக்க வேண்டும். ஏனென்றால் இன்று இது மட்டுமல்ல. ஏகப்பட்ட மனபிறழ்வுகள் உள்ளன. இந்த பிறழ்வுகளுக்கு மனநல ரீதியான சிகிச்சை அவசியம்.

இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

Related posts