நயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்

லட்சுமி’ மற்றும் ‘மா’ குறும்படங்களின் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றவர் கே.எம்.சர்ஜுன். வரலட்சுமி சரத்குமார், சத்யராஜ் நடிப்பில் வெளியான ‘எச்சரிக்கை: இது மனிதர்கள் நடமாடும் இடம்’ மூலம் பெரிய திரையில் இயக்குநராக அறிமுகமானார்.

நயன்தாராவை வைத்து ‘ஐரா’ என்ற படத்தைத் தற்போது இயக்கியுள்ளார். இந்தப் படத்தில், முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் நயன்தாரா. அவருடன் இணைந்து கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அறம்’ படத்தைத் தயாரித்த கேஜேஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, கே.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைத்துள்ளார். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதியுள்ளார்.

இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள், படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். மார்ச் மாதம் 28-ம் தேதி படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தின் தலைப்பான ‘ஐரா’ என்பது, இந்திரனின் வாகனமான ஐராவதம் என்ற யானையின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது என இயக்குநர் சர்ஜுன் தெரிவித்தார். யானையின் நினைவுத்திறன் மிகக் கூர்மையானது. அதிலும் ஐராவதம் யானை சிறப்பு வாய்ந்தது என்பதால், நயன்தாராவின் ஒரு கேரக்டருக்கு இது பொருத்தமாக இருக்கும் எனக் கருதி ‘ஐரா’ எனப் பெயர் வைத்ததாகத் தெரிவித்தார்.

மேலும், ‘யமுனா’ என்ற துணிச்சல் மிகுந்த பத்திரிகையாளராக நடிக்கத்தான் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ததாகவும், ‘பவானி’ என்ற வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் வெறொரு பெண்ணை நடிக்க வைக்கவும் முடிவு செய்துள்ளார் இயக்குநர். ஆனால், இரண்டு கதாபாத்திரங்களிலும் நயன்தாராவே நடித்தால் படத்துக்குக் கூடுதல் பலமாக இருக்கும் எனக் கருதியதால், நயன்தாராவை இரட்டை வேடங்களில் நடிக்க வைத்துள்ளார்.

Related posts