ஐ.நா. பிரேரணை : பாதிப்பில்லை : லக்ஷ்மன் கிரியெல்ல

ஐ. நா. மனித உரிமை ஆணைக்குழு சமர்ப்பித்துள்ள பிரேரணையை ஜனாதிபதி மாற்றக்கூடாதென சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டின் சாதகமான பல விடயங்களை அடிப்படையாகக்கொண்டு முன்வைக்கப்பட்டுள்ள மேற்படி முன்மொழிவுகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாகச் சுட்டிக்காட்டிய சபை முதல்வர், அதனை மாற்ற முயற்சித்தால் அது நாட்டுக்குப் பெரும் பின்னடைவையே ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.

முன்மொழியப்பட்டுள்ள விடயங்கள் எவ்வகையிலும் நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், அதில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆணைக்குழு பாராட்டைத் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இவற்றைக் கருத்திற்கொண்டு மேற்படி முன்மொழிவுகளை மாற்ற வேண்டாம் என அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று ஜனாதிபதி, பிரதமர் தலைப்பிலான 25 நிலையங்களுக்கான நிதியொதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

எனினும் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது எமது நாட்டைப் பாதிக்கும் செயற்பாடு என விமர்சிக்கப்பட்டு வருகிறது. 2018 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் இலங்கையில் இடம்பெற்ற மோசமான அரசியல் நிலைமையை நிவர்த்தி செய்து ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளமைக்காக ஐ. நா மனித உரிமை ஆணைக்குழு எம்மை பாராட்டியுள்ளது.

காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம், அதற்கான ஆணையாளர் மற்றும் ஆணைக்குழுவை நியமித்து அதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளமையை மேற்படி ஆணைக்குழு வரவேற்றுள்ளது. அதேவேளை, இலங்கையின் இறைமை, ஆட்புல ஒருமைப்பாடு, சுதந்திரம் மற்றும் ஒருமைப்பாடு தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் பாராட்டியுள்ளது.

Related posts