இந்தியன் 2 படத்தைச் சுற்றும் வதந்திகள்

கமல் நடித்து வரும் ‘இந்தியன் 2’ படத்தைச் சுற்றி பல்வேறு வதந்திகள் சுற்றி வருகிறது. ஆனால், அனைத்துக்குமே மவுனமே பதிலாக அளித்து வருகிறது படக்குழு.

மீண்டும் கமல் – ஷங்கர் இணைப்பில் தொடங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. லைகா நிறுவனம் தயாரிக்க படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கினார்கள். ஆனால், சில நாட்களிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது எப்போது மீண்டும் படப்பிடிப்பு என்பதற்கு எவ்வித பதிலுமே சொல்ல முடியாமல் நிற்கிறது படக்குழு.

இப்படத்துக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டின் போது, கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பில் எவ்வித பிரச்சினையுமே இல்லை. ஆனால், படப்பிடிப்பு தொடங்கப்பட்ட போது கமல் மேக்கப் போட்டு நடித்தார். அப்போது மேக்கப் சரியாக அவருக்கு பொருந்தவில்லை என்கிறார்கள். மேலும், அவருக்கு மேக்கப் அப்பினால் அலர்ஜி ஆகியுள்ளது. இதனாலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் படப்பிடிப்பு தொடங்குவதற்கு, லைகா நிறுவனம் பணத்தை தயார் செய்துவருகிறது. சீனாவில் ‘2.0’ படம் வெளியானால் நல்ல பலன் தரும் என்று காத்திருக்கிறார்கள். மீண்டும் பணத்தை முதலீடு செய்யாமல், கையில் இருக்கும் பணத்தையே சுழற்சி முறையில் கொடுத்து வருகிறார்கள். தற்போதைக்கு ‘காப்பான்’ படத்தில் ஒரு பெரிய முதலீடு அடங்கியுள்ளது.

பணம் தயாராகி மீண்டும் கமல், காஜல் அகர்வால் உள்ளிட்ட நடிகர்களிடம் தேதிகள் வாங்க வேண்டும். தற்போதைக்கு தேர்தல் முடியும் வரை கமல், தன் அரசியல் பயணத்தில் பயங்கர பிஸியாகியுள்ளார். இதனால், தேர்தல் முடிந்து மீண்டும் நடிப்புக்கு கமல் திரும்ப வேண்டும். அதற்குள் அவரும், தன் உடலமைப்பை ‘இந்தியன் 2’ படத்துக்காக மாற்ற வேண்டும்.

இந்த தகவல்களை எல்லாம் வைத்து படக்குழுவிடம் விசாரித்தால், “எவ்வித பிரச்சினையுமே இல்லையே. மீண்டும் விரைவில் தொடங்குவோம்” என்பதையே பதிலாக தருகிறார்கள். மேலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள், எப்போது படப்பிடிப்பு உள்ளிட்ட விஷயங்களை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி இல்லை. எப்போது லைகா நிறுவனம் அறிவிக்கப் போகிறதோ?

Related posts